வியாழன், 13 அக்டோபர், 2011

கொட்டிவாக்கம் கவுன்சிலர் வேட்பாளருடன் ஒரு பேட்டி



ராஜ் செருபல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக கொட்டிவாக்கம் வார்டு கவுன்சிலராகப் போட்டியிடுகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.
தமிழ்பேப்பர்: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், கொட்டிவாக்கம் வார்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவதாகக் கேள்விப்பட்டோம். ஏன் அரசியலுக்குள் நுழைகிறீர்கள்? தேர்தலில் நிற்காமல் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று நினைக்கிறீர்களா?
ராஜ் செருபல்: ஒரு விஷயத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று கட்சி அரசியல். இன்னொன்று சமூகப் பிரச்னைகள் சார்ந்து செயல்படும் அரசியல். எம்.எல்.ஏ., எம்.பி.கள் தளத்தில் செயல்பட விரும்புபவர்களுக்கு கட்சி அரசியல் தேவையாக இருக்கும். பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு, வலைப்பின்னல் ஆகியவற்றுக்கு அப்படியான ஒரு அமைப்பு தேவைப்படும். ஆனால், சிறிய அளவில் ஒரு வார்டில் இருக்கும் பொதுவான பிரச்னைகளைத் தீர்க்கவும் மக்களை ஒன்றிணைத்துச் செயல்படவும் கட்சி போன்ற எதுவும் தேவையில்லை. குப்பையில்லா நகரம், முறையான கழிவு நீர் கால்வாய் வசதிகள், நெரிசல் இல்லாத நடைபாதைகள், சீரான சாலைகள், கொசுக்கள் இல்லாத இரவுகள், பொழுதுபோக்குக்கு விளையாட்டு மைதானம், பொது சமூக வெளிகள், ஏழைகளுக்கான பொதுக் கழிப்பிட வசதி, வெள்ள நீர் வடிகால்கள் போன்றவை எல்லாமே இதில் அடங்கும். எந்தவொரு வார்டை எடுத்துக்கொண்டாலும் பணக்காரர்கள், மத்திய வர்க்கத்தினர், ஏழைகள் என எல்லா தரப்பினரும் இருப்பார்கள். பாலின ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சி சாரா இந்த அரசியலானது குடிமக்களின் அன்றாடப் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது தொடர்பானது. குறைவாக இருக்கும் வளங்களை நேர்மையான செய்நேர்த்தியான வழியில் பயன்படுத்துவது, ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பானது.
நான் நீண்ட காலமாகவே ஒரு களப்பணியாளனாக இருந்திருக்கிறேன். நடைபாதை வியாபாரிகள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வியாபாரம் செய்ய நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறேன். நன்கு திட்டமிடப்பட்ட தெருக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும். ஏழைக் குழந்தைகளுக்கு, குறிப்பாக, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தொடர்பாகச் செயல்பட்டுவருகிறேன். ஜனாக்ரஹாவின் ஓர் அங்கமாக ஆட்சியில் பொது மக்களின் பங்களிப்பை மேம்படுத்த முயன்றுவருகிறேன். நகர நிர்வாகம், உள்கட்டுமானம், சேவைகள் ஆகியவை தொடர்பாக சென்னை சிட்டிகனெக்ட் அமைப்பு மூலமாக செயலாற்றி வருகிறேன்.

நடைபாதை சீரமைப்பு, பொது போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் நாங்கள் செய்த விஷயங்களுக்காக இன்று பெரிதும் அறியப்பட்டிருக்கிறோம். சக்கர நாற்காலி பரிசோதனை என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். ஒரு நகரில் நடைபாதை அமைக்கப்படும்போது இந்த சோதனை செய்து பார்க்கப்படவேண்டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் போன்றவர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சக்கர நாற்காலியில் இருந்து இறங்காமல், பிறருடைய உதவியைப் பெற வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் கௌரவமாகப் போய்வர முடியுமா என்று சோதிக்கும் வழிமுறைதான் அது. மிக எளிய பரிசோதனைதான்.
நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், நம் ஊரில் பெரும்பாலான குடிமகன்கள் இரண்டாம் தரக் குடிமகன்களாவே நடத்தப்படுகிறார்கள். வீட்டை விட்டு அவர்களால் வெளியே வரவே முடியாது. ஏனென்றால் நடைபாதைகளே கிடையாது. சாலைகளைக் கடக்க முறையான வசதிகள் கிடையாது. இன்பமாகச் சுற்றி வர பூங்காக்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்வதானால் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. எந்த வாகனம் எப்போது வந்து இடிக்குமோ என்று எப்போதும் பயந்தபடியேதான் எங்கும் போய்வர வேண்டியிருக்கும். தெருவில் நிம்மதியாக நடக்கக்கூட முடியாமல் இருப்பது போன்ற இழிவு வேறு எதுவும் இருக்க முடியாது அல்லவா.
எங்களுடைய சிறிய முயற்சிகளின் மூலம், அதிகார வர்க்கத்தில் பெரும்பாலானார்கள் மத்தியில் நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களை பாதசாரிகளுக்கும் பொது போக்குவரத்துக்கும் நட்பான முறையில் சிந்திக்கிறார்கள்.
அரசியலில் இறங்காமலேயே நிறையச் செய்ய முடியும்தான். ஏராளமான அரசு சாரா நிறுவனங்கள் நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருகின்றன. ஆனால், என்னைப் போல் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வமும் அனுபவமும் இருக்கும் ஒருவர் உள்ளாட்சி போன்ற அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெற்றால் நிச்சயம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
திமுக, அதிமுக போன்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?
விஷயம் பெரிய கட்சிகளை எதிர்ப்பது அல்ல. உங்களால் கடுமையாக உழைக்க முடியும் என்று ஏழைகளுக்கும் மத்திய வர்க்கத்தினருக்கும் புரியவைப்பது சம்பந்தப்பட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி உங்களுக்குத் தெரியும்… உங்களுக்கு இந்தத் துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது… உங்களால் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்பதை எல்லாம் மக்களுக்குப் புரிய வைப்பது சம்பந்தப்பட்டது.
நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். கட்சி வேட்பாளர்களுக்கு இல்லாத, அவர்களால் ஒருபோதும் கனவு கூடக் காணமுடியாத சில ஆதாயங்கள் எனக்கு இருக்கின்றன. உதாரணமாக, என்னை எதிர்த்து நிற்கும் எந்தவொரு வேட்பாளரும் என்னைப் போல் சர்வ சாதாரணமாக, மத்திய தரக் குடும்பத்தினரின் வீட்டுக்குள் நுழைந்து சகஜமாகப் பேச முடியாது. மக்கள் என்னை அவர்கள் வீட்டுக்கு அவர்களாகவே கூப்பிட்டு அன்பாக உபசரிக்கிறார்கள். என்னுடன் ஆர்வத்துடன் பேச முன்வருகிறார்கள். என்னுடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். அவர்களுடைய பிரச்னைகள் பற்றி விரிவாக பேசுகிறார்கள். எப்படி தேர்தல் வியூகம் அமைக்க வேண்டுமென்று எனக்கு ஆலோசனை கூடச் சொல்கிறர்க்கள். ஆனால், பெரிய கட்சி வேட்பாளர்களைப் பார்த்தால் ஒருவித விலகலும் பயமும் தயக்கமும்தான் அவர்களுக்கு இருக்கிறது.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ஊடகங்களில் வேறு எந்த கவுன்சிலரை விடவும் எனக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஊடகத்தினர் முட்டாள்கள் அல்ல. நகர நிர்வாகம் தொடர்பான என்னுடைய தகுதி, அனுபவம், செய்த பணிகள் ஆகியவை பற்றி அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. நான் அக்கறை மிகுந்த வேட்பாளர் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, என்னைப் பற்றி விரிவாக எழுதுகிறார்கள். பல லட்சம் மக்களிடம் என் கருத்துகளை எடுத்துச் செல்கிறார்கள். பிற கட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் இதை நினைத்தே பார்க்க முடியாது.
எனவே, என்னைப் போன்றவர்களுக்கு சில சாதகங்களும் இருக்கின்றன. பாதகங்களும் இருக்கின்றன. பல்வேறு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். எதையும் பொதுமைப்படுத்த முடியாது.
நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் படிக்காத அதே நேரத்தில் அதி தீவிரமாகச் செயல்படும் பிற வேட்பாளர்களை எப்படி உங்களால் சமாளிக்க முடியும்?
கடுமையாக உழைக்கும் நல்ல வேட்பாளர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இதை நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அவர்களைப் பொதுவாக மோசமானவர்களாக நாம் சித்திரிக்கிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கு பல நல்ல அரசியல்வாதிகளைத் தெரியும். அவர்கள் அர்ப்பண உணர்வுடன் தங்களால் முடிந்த அளவுக்கு நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், நான் மிகவும் யதார்த்தவாதியும்கூட. பெரும் கனவுகளில் திளைத்திருக்கும் நிலையிலும் என் காலை அழுத்தமாகத் தரையில் ஊன்றியே இருக்கிறேன். நீங்கள் ஈடுபடும் துறையில் – அது தேர்தெடுக்கப்படும் பதவியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்- நடைமுறை யதார்த்தங்களை உங்களால் கையாள முடியவில்லையென்றால் நீங்கள் அதில் இருந்து விலகிவிடுவதே நல்லது. நீங்கள் கொஞ்சம் படித்திருக்கிறீர்கள் என்பதால் ஒரு முயற்சியில் இறங்கியதும் உலகமே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது.
இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். படித்தவர்கள் எல்லாருமே புத்திசாலி என்று சொல்லிவிடமுடியாது. படிக்காதவர்கள் எல்லாருமே முட்டாள்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. அரசியலில் வெற்றி பெற நல்ல சிந்தனையும் அக்கறையும் தேவைதான். கூடவே, நடைமுறை பிரச்னைகளைச் சமாளிக்கும் திறமையும் மிகவும் அவசியம்.
இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் தனியாக நிற்கின்றன. இது சுயேச்சையான உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறீர்களா?
இதுவும் வேட்பாளரைச் சார்ந்ததுதான். கொட்டிவாக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுடன் பேசியதில் இருந்தும் என்னுடைய உள்ளுணர்வு சார்ந்தும் இதைச் சொல்கிறேன். ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட திறமையை வைத்தே மக்கள் வாக்களிக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுதான் உண்மை. எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்கள் வேறு வகையானவை. மேலே நான் சொன்ன காரணங்களுக்காக, நானேகூட ஒரு கட்சிக்கே வாக்களிப்பேன். கவுன்சிலர் தேர்தல்கள் வேட்பாளரை மட்டுமே வைத்துத் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறேன். பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் இதையேதான் சொல்லியிருக்கிறார்கள். எனது வார்டில் ஏழு பேர் போட்டியிருகிறார்கள். ஆனால், போட்டி என்பது இரண்டே வேட்பாளர்களுக்கு இடையிலானதாகத்தான் இருக்கும்.
உங்களுடைய பின்புலம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பிற அரசியல்வாதிகளைப் போல் உங்களால் சேரிகளில் வசிப்பவர்களுடன் சுமுகமாகப் பிரசாரம் செய்யவும் செயல்படவும் முடியுமா?
இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது என் வார்டில் இருக்கும் ஏழைகளின் ஆதரவினால்தான் இருக்கும். நான் செய்த களப்பணிகளையும் உள்ளுணர்வையும் வைத்து இதைச் சொல்கிறேன். என் பிரசாரத்தை என் வார்டில் இருக்கும் மிகவும் ஏழ்மையான பகுதியில் இருந்தே திட்டமிட்டு ஆரம்பித்தேன். ஏழைகள் எப்படிப்பட்டவர்கள்.. என்ன செய்வார்கள் என்பது பற்றி நம்மைப் போன்ற மத்தியவர்க்கத்தினருக்கு பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவை நம்முடைய கற்பனையாகவே இருக்கும். ஏழ்மையில் இருப்பவர்களிடையே, குறிப்பாக இள வயதினரிடையே, இருந்து கிடைக்கும் ஆதரவு இருக்கிறதே மிகவும் அபாரமானது. மனதுக்கு மிகவும் இதமானது.
என்னைப் போன்ற ஒருவர் ஏழ்மையான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்… மத்தியவர்க்கத்திலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கற்பிதத்தை உடைக்க விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரையில் நீங்கள் என் வார்டில் இருக்கும் ஒரு குடிமகன் என்றால் என்னுடைய வாக்காளர்களில் நீங்களும் ஒருவரே. வங்கியில் உங்கள் பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை.
சுயேச்சை வேட்பாளரான நான் வெற்றிபெற வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை ஒரு குழுவினரிடம் கேட்டேன். ஒரு ஏழை இளைஞர் அழுத்தம்திருத்தமாக எளிய வார்த்தைகளில் சொன்னார்: நாங்கள் இளைஞர்கள். நாளைய உலகம் எங்களுக்கானதுதான். ஆனால், நாங்கள் வாழும் நிலையை நீங்களே பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை கூளம். யாரும் இதைச் சுத்தம் செய்ய வருவதில்லை. உங்களைப் போன்ற ஒருவர் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக நாங்கள் பாடுபடத் தயார். நீங்கள் வெற்றி பெற்றால் உங்களிடம் வந்து உரிமையுடன் வசதி வாய்ப்புகளைச் செய்து தருமாறு கேட்க முடியும்.
நாம் ஏழைகள் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். பணம் ஏழைகள் மீது எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்துகிறது… வேறு நல்ல தேர்வுகளே இல்லை என்றால் நீங்களோ ஏழைகளோ யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதில் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை.
சேரிகளுக்கும் ஏழைகள் வசிக்கும் பிற இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ததில் இருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். எந்த முன்தீர்மானமும் இல்லாமல் எல்லாரையும் சம்மாகவே அணுகுவேன் என்பதால் எனக்கும் அதே எதிர்வினைகளே கிடைக்கின்றன. ஏழையோ மத்திய வர்க்கத்தவரோ எனக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ நான் போலிக் கண்ணீர் வடிக்கவில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
கல்வி அறிவு பெற்ற பலர் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், எந்த வெற்றியும் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் ஒரு சாக்கடை என்றும் தாங்கள் ஒரு தூய்மையான அரசியலைக் கொண்டுவரவிருப்பதாகவும் சொல்வார்கள். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா? அது உண்மையென்றால் அதை எப்படிச் சுத்தம் செய்யப் போகிறீர்கள்?
உங்களுடைய முதல் வாக்கியம் தவறு. கல்வி அறிவு பெற்ற நிறைய அரசியல்வாதிகள் வெற்றிகரமாகவும் இயங்கிவருகிறார்கள். கல்வி அறிவு பெற்றிருப்பதால் நீங்கள் ஈடுபடும் எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமென்ற கட்டாயமும் இல்லைதான்.
நான் என் வாழ்க்கையை மிகவும் லகுவாக எடுத்துக் கொள்கிறேன். சென்னையிலேயே மிகச் சிறந்த கவுன்சிலராக விளங்க விரும்புகிறேன்… ஒவ்வொரு பைசாவையும் புத்திசாலித்தனமாகச் செலவழிக்க விரும்புகிறேன். சரியான திட்டமிடல், கண்காணிப்புப் பணிகளில் ஒவ்வொரு குடிமகனையும் பங்குபெற வைத்தல் என பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். வார்டை மேம்படுத்த பல்வேறு தனி நபர்களையும் நிறுவனங்களையும் ஈடுபடுத்த விரும்புகிறேன். நகராட்சிச் செயல்பாடுகளும் அமைப்புகளும் சரியாகச் செயல்பட உதவி செய்வேன். இந்த எளிய வாக்குறுதிகளை மட்டுமே தர விரும்புகிறேன்.
பல்வேறு நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், எந்த வேலையில்தான் அவை இல்லாமல் இருக்கின்றன. சிலவற்றில் கூடுதலாக இருக்கும்; சிலவற்றில் குறைவாக. நான் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அது சென்னையில் மாற்றங்களைத் தூண்டிவிடுமா… விடலாம். மாற்றங்களைக் கொண்டுவரும் என்று திடமாக நம்புகிறேன். என் வார்டில் நான் செய்யும் விஷயங்கள் பிற வார்டுகளில் இருப்பவர்களுக்குத் தூண்டுதலைத் தரலாம். ஆனால், அரசியலை அப்படியே புரட்டிப் போடப் போகிறேன்… நாட்டை தூக்கி நிறுத்தப் போகிறேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் என் வார்டு உறுப்பினர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் சிறிய விஷயங்களைக் கூடச் செய்ய முடியாமல் தோற்றுவிடுவேன். அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரம் நீங்கள் யார் என்பதை மறந்துவிடக்கூடாது. நான்கு பேர் உங்கள் பேச்சைக் கேட்கக் கூடுகிறர்கள் என்றதும் தலைக்கனம் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
உள்ளாட்சி அவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உள்ளாட்சிக் கூட்டங்களில் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கார்ப்பரேட் மீட்டிங்களில் கல்வி அறிவு பெற்றவர்களுடன் செயல்பட்டு வந்த நீங்கள் உள்ளாட்சிக் கூட்டங்களில் நடப்பவற்றைச் சமாளிக்க முடியுமா?
பல வருடங்களாகவே உள்ளாட்சி, உள்ளூர் அதிகார வர்க்கத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறேன். மனிதர்களையும் நிறுவனங்களையும் சமாளிக்கப் பல வழிகள் இருக்கின்றன. ஒரு தடை ஏற்பட்டால் அதை மோதித் தகர்க்கலாம். தாண்டிச் செல்லலாம்… சுற்றி வளைந்தும் போகலாம். எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நன்கு ஆலோசித்த பிறகே அரசியலில் இறங்கத் தீர்மானித்திருக்கிறேன். நிச்சயம் இதை மிகவும் உற்சாகத்துடன் ரசித்துச் செய்வேன்.
உங்கள் வார்டின் பிரச்னைகள் என்னஉங்கள் வார்டு மக்களுக்கு என்ன தேவை?
யாராவது அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுடன் நின்று நிதானமாகப் பேசிய முதல் ஆள் நான்தான் என்று பலர் சொன்னார்கள். நாட்டு நடப்புகள் குறித்து பலரும் விரக்தி அடைந்திருக்கிறார்கள். அமைப்புகள் அவர்களுடைய பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வையும் கொண்டுவரவில்லை. நீங்கள் வெற்றி பெற்றால் அதன் பிறகும் திரும்பி வந்து எங்களுடன் இதுபோல் பேசுவீர்களா என்று சிலர் கேட்டார்கள். அவர்கள் நிறையவே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால், குப்பைகள் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு குப்பை. டவுன் பஞ்சாயத்தைச் சேர்ந்த வார்டு என்பதாலும் மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருப்பதாலும் சாலைகள், நடை பாதைகள், மைதானங்கள், விளக்குகள் என எல்லாமே படு மோசமாக இருக்கின்றன. வெள்ள நீர் வடிகால் என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஊரே வெள்ளக்காடாகி சாலைகள் எல்லாம் மேலும் மோசமாகிவிடுகின்றன.
பிரச்னைகளைப் பொதுமைப்படுத்திப் பேசுவது தவறு என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு தெருவுக்கும் நபருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். உதாரணமாக, சேரியில் விளக்குகள் எரியாமல் இருப்பது பெரிய பிரச்னை என்பது மத்திய வர்க்க மனிதர் ஒருவருக்குத் தெரியாமலே இருக்கலாம். விளக்குகள் இல்லையென்றால் இரவில் சேரிகளில் பெண்களும் சிறுவர்களும் தெருக்களில் நடப்பது மிகவும் சிரமம் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்னையாக ஆகிறது. மோசமான போக்குவரத்துகளினால் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு பெரும் அபாயங்கள் நேரலாம். பள்ளி தொடங்கும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் போக்குவரத்து மிக நெரிசலாகிவிடுகிறது.
எல்லாமே ஸ்தம்பித்துப் போல்விட்டதுபோல் இருக்கிறது. மக்கள் விரக்தியின் விளிம்புக்குப் போய்விட்டார்கள். இனி யார் வந்தும் என்ன பிரயோஜனமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.
பிரசாரத்துக்குப் போனபோது, வரவேற்பு எப்படி இருந்தது? வெற்றி வாய்ப்புகள் எவ்வளவு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
வெற்றியோ தோல்வியோ அது வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது. வாக்களிக்கும் 17-ம் தேதிக்கும் முடிவுகள் வெளியாகும் 21-ம் தேதிக்கும் பிறகுதான் நமக்குத் தெரியவரும். எனக்கு எல்லாம் தெரியும் என்றும் மக்களை கிள்ளுக்கீரையாக மதித்தும் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன். நானும் எனது பிரசாரக் குழுவினரும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து திக்குமுக்காடிவிட்டோம். பொறுமையாக அழைத்துப் பேசினார்கள். பிரச்னைகளை எல்லாம் சொன்னார்கள். ஆலோசனை வழங்கினார்கள். தண்ணீர், காபி கொடுத்து உபசரித்தனர். அவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தல் நாளில் அனைவரையும் வந்து வாக்களிக்கச் செய்ய எல்லா முயற்சிகளும் எடுக்கவிருக்கிறோம். ஆனால், இறுதி முடிவு மக்கள் கையில்தான்.
நீங்கள் ஜெயித்தால், உங்களுடைய உடனடித் திட்டங்கள் என்ன? ஐந்து வருட முடிவில் என்னவெல்லாம் செய்து முடித்திருப்பீர்கள்?
பல நிறுவன்ங்களையும் நிபுணர்களையும் அழைத்து சீர் குலைந்து கிடக்கும் அமைப்பைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுப்பேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால் பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் பல விஷயங்கள் நடந்தாக வேண்டியிருக்கும். அமைப்பு விரைவில் சீராக இயங்க ஆரம்பிக்கவில்லையென்றால், எதையும் சாதிக்க முடியாது. மக்களிடமிருந்து எந்தப் பின்னூட்டமும் (ஃபீட் பேக்) பெற முடியாமல் போய்விடும். கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதுபோல் ஆகிவிடும்.
நான் வெற்றி பெற்றால் தெருக்களையும் சுற்றுச் சூழலையும் மிகச் சிறப்பாக ஆக்குவேன். இது ஏதோ ராக்கெட் விடுவதுபோல் சிரமமான காரியம் அல்ல. உலகில் கோடிக்கணக்கான இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிகவும் எளிய நடைமுறை சாத்தியமான ஒன்றுதான். நவீன குப்பை அகற்றும் கருவிகள், நன்கு வடிவமைக்கப்பட்ட தெருக்கள், அருமையான மைதானம், ஏழைகளுக்கான பொது கழிப்பிடம் என எல்லாவற்றையும் அரசின் திட்டத்தோடு எங்கள் திட்டங்களும் இசைந்துபோவதுபோல் நடத்திக் காட்டுவேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். விரக்தியும் அவ நம்பிக்கையும் கணிசமான அளவு குறையும். கூடி உழைக்கக் கற்றுக்கொண்டு எங்கள் வார்டை மிகச் சிறந்த இடமாக அவர்கள் மாற்றுவார்கள். அதுவே வேறு எந்த வளர்ச்சியை விடவும் மிகவும் முக்கியமானது.
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
தேர்தலில் நிற்பதும் பிரசாரங்களில் ஈடுபடுவதும் நாங்கள் பயப்படுவதைவிட எளிதாகவே இருக்கின்றன. ஆனால், இது கடினமான ஒரு வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுபவமும் சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையும் இருந்தால் துணிந்து ஒருமுறை களமிறங்கிப் பாருங்கள். நானும் என் குழுவினரும் சில தடைகளைத் தகர்த்திருப்பதாக நம்புகிறேன். பெரும்பாலும் மனத்தடைகள். எனவே பிறரும் முயன்று பார்க்கலாம். நாம் பிறருக்குச் செய்யும் பெரிய சேவையாக அது நிச்சயம் இருக்கும்.

கருத்துகள் இல்லை: