அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பாராளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் என்பவரின் முயற்சியால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஓகஸ்ட் மாதம் 23, 24ந்திகதிகளில் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு இலங்கையிலிருந்து பத்து தமிழ் கட்சிகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குத் தனித் தனியாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளையில், வி.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தனின் புளொட் இயக்கம், தி.சிறீதரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி என்பனவற்றுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து கொண்டு, ஈழத்தமிழருக்காக அரசியல் நடாத்திவரும் ஞா.ஞானசேகரம் (பரந்தன் ராஜன்) தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப் கட்சியும் அழைக்கப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழ் கட்சிகளில் முக்கியமானதொன்றாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றானதாகவும் கருதப்படக்கூடிய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி இக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. அதேபோல கிழக்கு மாகாணசபையை நிர்வகித்து வரும,; சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வடக்கு கிழக்கு தமிழர்களின் இந்த இரண்டு முக்கியமான கட்சிகளும் புதுடில்லி கூட்டத்துக்கு அழைக்கப்படாததிற்குக் காரணம், இந்தியத்தரப்பின் தந்திரோபாயமா அல்லது கொள்கை மாற்றமா என்பது இதுவரை சரியாகத் தெரிய வரவில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தச் சந்திப்பால் ஏதாவது அர்த்தபுஸ்டியுள்ள காரியங்கள் கைகூடுமென்று நம்பியிருந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்தியத் தரப்பைப் பொறுத்தவரை – அதுவும் காங்கிரஸ் அரசைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி மரணித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கூட, அவர் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையையே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இன்றுவரை கருதி வருகின்றது. இனிமேலும் பல காலத்திற்கு இந்திய அரசின் நிலைமை அதுவாகத்தான் இருக்கும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கூட, அவர்கள் இன்றிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும், இந்திய - இலங்கை உடன்படிக்கை வழங்கியுள்ள 13வது திருத்தச் சட்டத்திpன் கீழான தீர்வை ஏற்பதே அரசியல் ஞானமும் புத்திசாலித்தனமானதுமாகும்.
அதுமாத்திரமல்லாமல், அந்தத் தீர்வை தென்னிலங்கையிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதால், அது அனுகூலமாகவும் இருக்கும். நிலைமை இவ்வாறு சாதகமாக இருந்த போதிலும், மிகவும் வலதுசாரித் தன்மை வாய்ந்ததும், புலிகளின் அழிவின் பின்னரும் அவர்களது கொள்கையை இன்னமும் அடி பிசகாமல் பின்பற்றி வருவதும், தமிழ் கட்சிகளிலேயே கூடுதலான ஏகாதிபத்தியத்தொடர்புள்ளதுமான தமிழ் காங்கிரஸ் கட்சி, வழமையான செல்லரித்துப்போன தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, சுய நிர்ணயம் என்ற கோசங்களை எழுப்பி புதுடில்லி சந்திப்பைக் குழப்பியடித்து, இந்தியாவின் முயற்சியைச் சீர்குலைத்துள்ளது.
தமிழ் காங்கிரசின் இந்த சீர்குலைவு வேலையை அக்கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் யாவும,; வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றன. அதற்குக் காரணம,; அவர்களது நிலைப்பாடும் தமிழ் காங்கிரசின் நிலைப்பாடும் ஒன்று என்பதே உண்மையாகும்.
ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப் என்பன, ஏதாவதொரு நல்லதொரு முடிவு கிட்டும் என எதிர்பார்த்து ஏமாந்து போனதை, ஈ.என்.டி.எல்.எப் பின்னர் அக்கூட்டம் பற்றி விடுத்த அறிக்கை புலப்படுத்துகிறது. அத்துடன் இந்த நான்கு கட்சிகளும் பின்னர் நாடு திரும்பும் வழியில் தமிழகத் தலைநகர் சென்னையில் கூடி இந்தக் கூட்டத்தின் பெறுபேறுகள் (தோல்வி) குறித்து ஆராய்ந்துமுள்ளன. குறிப்பாக தமிழ் காங்கிரசின் சீர்குலைவு வேலை பற்றியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடம் பற்றியும் இக்கட்சிகள் கடும் விசனம் தெரிவித்ததாகத் தெரிய வருகிறது.
உண்மையில் இந்த நான்கு கட்சிகளும் அடிப்படையான ஒர் உண்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ந்து கொள்வது அவசியமானது. என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றி வரும் கொள்கைகளின் அடிப்படையில் எட்டப்பட முடியாதது என்பதை இவைகள் உணர வேண்டும். ஏனெனில், கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் காங்கிரசிலிருந்து கடைசியாகப் புலிகள் வரை, இந்த மலட்டுத்தனமான கொள்கையைப் பின்பற்றிய காரணத்தாலேயே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியாமல் போனது என்ற உண்மையை விளங்குவது அவசியம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதே தவறான கொள்கையையே பின்பற்றுகிறது.
உண்மையில் பலரும் கூறி வருவது போல, (இதை ஆனந்தசங்கரி தனது அண்மைய த.வி.கூ மாநாட்டிலும் கூறியிருக்கிறார்), தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையாலேயே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுபடுகின்றது. என்பது உண்மையல்ல. தமிழ்த் தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை பின்பற்றி வரும் ஏகாதிபத்திய சார்பு, ஐ.தே.க சார்பு, இனவாத கொள்கைகளே தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு இடையூறாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் தனது விடுதலையை வென்றெடுக்க வேண்டுமானால், இதற்கு எதிரான பாதையிலேயே பயணிக்க வேண்டும். அதன் காரணமாகவே, யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சில ஜனநாயக சக்திகளின் முயற்சியால,; ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்ற தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் அணி அமைக்கப்பட்டது. இந்த அணி உருவாக்கப்பட்டவுடனேயே, பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சில வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளும் அதை உடைப்பதற்கு பல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டன.
அதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட, தமிழ் கட்சிகளின் அரங்கம் தேசிய இனப்பிரச்சினையில் ஜனநாயகபூர்வமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், பரவலான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது என்பதாலாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இடையறாத சதி முயற்சிகளின் காரணமாக, இறுதியில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்து, அதில் முக்கிய பங்காளிகளாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் என்பனவற்றை தனது பக்கம் இழுத்துக் கொண்டது. அந்த இரு கட்சிகளும் மேற்கொண்ட தவறுக்கான காரணிகளை ஆராய்வது எமது நோக்கமல்ல. ஆனால் அவர்கள் தாம் விட்ட தவறை, புதுடில்லி கூட்டத்தின் தோல்விக்குப் பின்னராவது உணர்ந்து கொள்வது அவசியம்.
அதேநேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்பும் இதைப் பாரதூரமாக கவனத்தில் எடுப்பது அவசியம். இன்றுள்ள சூழ்நிலையில், தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காண்பதானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீர்வு முயற்சிகளுக்காக நம்பி இருப்பது ஒருபோதும் பிரயோசனப்படாது. இது வரலாறு காட்டும் உண்மை. எனவே அதைச் செய்வதானால், முதலில் மீண்டும் ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவது அவசியம். அதை சாத்தியமாக்குவதற்கு முன் கையெடுத்து செயற்படுவதற்குரிய தகைமை தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.பி.டி.பி என்பனவற்றுக்கே உண்டு. அந்த இரு கட்சிகளும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபற்றி பாரதூரமாக ஆலோசிக்க வேண்டும். வலதுசாரி, பிற்போக்குவாத, ஏகாதிபத்திய சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, மாற்று ஜனநாயக அணியொன்றை உருவாக்காமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்பதையும், தமிழ் ஜனநாயகக் கட்சிகளுக்கு வாழ்வில்லையென்பதையும், இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.
- வானவில் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக