திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. 16 பேர் போட்டியிட்டாலும் தி.மு.க. - அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக பரஞ்சோதி நிறுத்தப்பட்டுள்ளார். சுயேட்சைகள் 14 பேர் போட்டியிடுகின்றன.
முக்கிய கட்சிகளாக விஜயகாந்தின் தே.மு.தி.க., மார்க்கிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விட்டது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு இன்று விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிரசாரம் செய்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்றிரவு திருச்சியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைய உள்ளதால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறையூரில் இன்று மாலை 4 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார். 5 மணிக்கு மேல் வெளியாட்கள் தங்கி இருக்க கூடாது. அப்படி மீறி தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது. அப்படி தோல்வி அடைந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்கும்.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கவலையில்லை. ஆனாலும் வெற்றி பெற்றால் ஆட்சியின் லட்சனத்தை மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்று கூறி பிரசாரம் மேற்கொள்வார்கள்.
எது எப்படியோ இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வெற்றிக்காக எந்த தியாகத்தை அவர்கள் செய்ய தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக