திங்கள், 10 அக்டோபர், 2011

மீண்டும் மீண்டும் தோல்விக்குப் பின்னே யாரையும் வசைபாடி

தமிழர்களின் காத்தற் கடவுள்கள்“
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிச் சக்திகள் தமது தேவைகளுக்காக தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றன. அல்லது அப்படிப் பயன்படுத்த விளைந்திருக்கின்றன. தமிழர்களும் அதீத நம்பிக்கையோடு’ வெளுத்ததெல்லாம் பால்’ என்ற கணக்கில் இந்தச் சக்திகளின் பின்னே இழுபட்டிருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தமது நலன்களுக்காகவே எப்போதும் சிந்திக்கின்றன. அதைக் குறிவைத்தே அவை செயற்படுகின்றன என்ற மிகச் சாதாரண அரசியல் அறிவைக்கூடத் தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
பெரும்பாலான தமிழர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இப்போது அதிகமதிகம் நம்புவது மேற்குலகத்தை. அதிலும் அமெரிக்காவையே. அதாவது ஈழத்தமிழர்களின் ‘காத்தற் கடவுளாக’ இப்போது அமெரிக்கா உள்ளது என்பதே இன்றைய நிலை.
அமெரிக்கத் தூதர்கள், அமெரிக்கப் பிரதானிகள், அமெரிக்க அதிபர் போன்றோரைச் சந்திப்பதிலும் அவர்களுக்காகக் காத்திருப்பதிலும் அவர்களிடம் கோரிக்கை விடுவதிலும் அவர்களுக்கான அமைப்புகளை (ஒபாவுக்கான தமிழர் அமைப்பு) இயக்குவதிலும் அதிக முயற்சிகளை எடுக்கிறார்கள், இவர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய ஆசியா மற்றும் தென்னாசியப்பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலர் திரு. றொபேட் ஓ பிளேக்கைச் சந்திப்பதற்கு இந்தத் தமிழர்கள் காட்டிய சிரத்தையும் இந்த வகையிலானதே. ‘முறையிடுவது – வரங்கேட்பது’ என்ற நிலையில் தமிழரின் இந்தச் சந்திப்புகள் அமைகின்றன.
முன்னர் ஒரு காலம் இந்தியா இந்த இடத்தில் இருந்தது. பிறகு அது அவர்களுடைய காலை வாரியதால், ஒரு கட்டத்தில் இந்தியாவை அவர்கள் எதிர்நிலைக்குக் கொண்டு போனர்கள். இந்தியாவையும் அது ஈழப்பிரச்சினையின் பொருட்டு இலங்கைக்கு அனுப்பிவைத்த  இந்திய அமைதிப்படையின் பணிகளையும் satanic forces  என்று தமிழர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மாறியது.
இடையில் தமிழர்கள் நோர்வேயை நம்பினார்கள். ஐக்கிய நாடுகள் சபையை நம்பினார்கள். சில சந்தர்ப்பங்களில் பிரிட்டனை நம்பினார்கள். பிரிட்டனுக்கு அப்படியொரு கடமை இருக்கிறதென்றும் பிரிட்டனே தமிழர்களின் அந்தஸ்துகளையும் உரிமைகளையும் சிங்களவர்களிடம் தாரை வார்த்துவிட்டுச் சென்றதென்றும் அவர்கள் கூறினார்கள். போதாக்குறைக்கு, தாம் எப்போதும் பிரிட்டனுக்கு விசுவாசமாகவே இருந்ததால், அந்த விசுவாசத்தைப் புரிந்து கொண்டு, அதற்குப் பிரதியுபகாரமாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வுக்கு உதவ வேண்டும் என்று பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகளிடம் கேட்டார்கள்.
ஆனால் எந்த நம்பிக்கையும் தமிழர்களைக் கரை சேர்க்கவில்லை. எந்த நம்பிக்கையும் நம்பிக்கைக்குரியதாகவோ அற்புதற்களை நிகழ்த்தக் கூடியதாகவோ இருக்கவும் இல்லை. எந்தக் கோரிக்கைகளும் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக இந்த நம்பிக்கைகள் இறுதியில் அல்லது ஒரு கட்டத்தில் அவர்களை நடுக்கடலில் கைவிட்டதாகவே இருக்கின்றன. அல்லது தாம் நம்பிக்கை வைத்த தரப்புகள் தமக்குத் துரோகம் இழைத்து  விட்டதாகத் தமிழர்கள் கருதும் நிலையே ஏற்பட்டது@ ஏற்படுகிறது.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான தமிழர்கள் கூறுவது, ‘நோர்வே தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது’ என்ற குற்றச்சாட்டையே. இதை அவர்கள் பகிரங்கமாகவே வைத்ததை இங்கே நாம் சுட்டிகாட்டலாம். இதில் எங்கே தவறு நடந்தது? யார் தவறு செய்தார்கள்? இந்தத் தவறுகள் எப்படி நடந்தன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்வது தனியானது. அதை இந்தக் கட்டுரை தற்போது குறியாகக் கொள்ளவில்லை. அது தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கப்பட வேண்டியது.
தமிழர்கள் இப்படி வெளியாரின் மீது நம்பிக்கை வைக்கும்தோறும் சிங்களவர்கள் தமிழர்களின் மீது எதிர்நிலை மனோபாவத்தையே கொள்கின்றனர். இது முரண்பாட்டை மேலும் மேலும் கூர்மையாக்குகிறது. இதுதான் முக்கியமான பிரச்சினை.
இந்தியாவைத் தமிழர்கள் தமது நெருங்கிய நண்பனாகக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களோ தமிழர்களையும் இந்தியாவையும் தங்களின் எதிரிகளாகச் கருதினார்கள். இந்தியாவைக் கொண்டு தங்களை மிரட்டுகிறார்கள் என்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு அல்லது இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்குத் தமிழர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கருதினார்கள். (ஆனால், இறுதியில் இந்தியா, சிங்களவர்களுடன் நெருக்கமாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் மாறியது வெறும் கதையல்ல, உண்மை).
பின்னர், நோர்வேயுடன் தமிழர்கள்தங்களை நெருக்கமாகக் காட்டிக் கொண்டனர். இதனால் நோர்வேயையும் தமிழர்களையும் சிங்களவர்கள் எதிர் மனோபாவத்துடனேயே பார்த்தார்கள். (நோர்வே யாருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கியது என்பது பரகசியமான ரகசியம்).
இப்போது மேற்குலகத்தோடு தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலும் அமெரிக்காவை அவர்கள் தற்போதைய காத்தற் கடவுளாகக் கருதிக் கொள்கிறார்கள். எனவே, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தைத் தமிழர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளாகவும் இந்தத் தரப்பே இலங்கையில் நீதி, நியாயத்தை நிலைநாட்டப்போகிறது என்பதாகவும் கருதியிருக்கிறார்கள்.
ஆகவே, இப்போதும் ஏறக்குறைய அதே நிலைதான் தோன்றியுள்ளது. எனவே, மேற்குலகத்தையும் தமிழர்களையும் தமது எதிரிகளாகக் கருதுகிறார்கள் சிங்களவர்கள். என்பதால், எப்போதும் தமிழர்களும், தமிழர்கள் தமது ஆதரவுச் சக்திகளாகக் கருதுகின்ற தரப்புகளும் சிங்கள மக்களின் மனதில் எதிர்நிலைச் சக்திகளாகவே படுகின்றன. இது நிலைமைகளை மேலும் மேலும் கடினத் தன்மையை நோக்கித் தள்ளுகிறது.
அதாவது, இலங்கையை ஆக்கிரமிக்க முனைகின்ற, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்ற, இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற தரப்புகளைத் தமது கூட்டாளிகளாக எப்போதும் தமிழர்கள் கொள்கின்றனர் என்பதே சிங்களவர்களின் கோபமாகிறது. சாதரண சிங்கள மக்களிடம் இத்தகையதொரு அபிப்பிராயத்தை சிங்கள உயர்குழாத்தினர் மிக இலகுவாகச் செய்து விடுகின்றனர். இதற்குத் துணையாக சிங்கள ஊடகங்கள் செயற்படுகின்றன. இதனால், தமிழர்கள் எப்போதும் தமக்கு எதிரான சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, தங்களைப் பயமுறுத்துகிறார்கள், தமக்குத் தொல்லை தருகிறார்கள், தங்களைக் காட்டிக் கொடுகிறார்கள் என்ற மனப்பதிவு சிங்களத் தரப்பிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இலங்கையின் பிரதான சமூகங்கள் இரண்டும் மேலும் மேலும் விலகிச் செல்லும் நிலையே தென்படுகிறது. சமூகங்களுக்கிடையிலான பிரிவுக் கோடு அல்லது முரண்நிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்தத் தவற்றில் சிங்களத் தரப்பிலும் சம பொறுப்புண்டு. தமிழர்களின் அரசியற் தீர்மானங்களிலும் தெரிவுகளிலும் தவறுகள் இருந்தாலும் நாம் அதை மட்டும் குறை கூறி விட முடியாது. தமிழர்கள் பிற சக்திகளையோ பிற தரப்புகளையோ நம்பியிராத ஒரு நிலையை சிங்களத் தலைமைகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒடுக்கப்படும் இனமொன்றை, அதிலும் சிறுபான்மை இனமொன்றைச் சரியாக நடத்தியிருக்க வேண்டிய பொறுப்புப் பெரும்பான்மைச் சமூகத்தினராகிய சிங்களவர்களுக்கே அதிகமுண்டு.
ஏனெனில், அவர்களே பெரும்பான்மையினராகவும் ஆட்சி அதிகாரத்திலும் இருக்கின்றனர். ஆகவே, அவர்களே ஏனையோரைச் சரிநிகராக நடத்த வேண்டும். பெருந்தன்மையாக நடந்திருக்க வேண்டும். ஆனால், இதை அவர்கள் செய்யத்தவறியுள்ளனர். இதற்கு ஒத்துழைப்பதில் தமிழ் அரசியற் தலைமைகளின் அணுகுமுறைக் குறைபாடுகளும் அரசியற் குறைபாடுகளும் இருந்தன என ஒரு வாதத்தை சிங்களத்தரப்பினர்கள் முன்வைக்கலாம்.
அப்படியானால், சிங்களத்தரப்பினர்களுடன் இணக்கத்துக்குத் தயாராக இருந்த சக்திகளைப் பயன்படுத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கோ அதிகாரப்பரவலாக்கத்துக்கோ சிங்களவர்கள் வந்திருக்கலாம் அல்லவா!. அதிலும் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக பல சந்தர்ப்பங்களிலும் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். இதில் சிங்கள இடதுசாரிகளின் பங்குகளையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஒரு மொழிக் கொள்கை முன்வைக்கப்பட்டால், இந்த நாடு இரண்டாகும் என்று எச்சரித்த கொல்வின் ஆர். டி. சில்வா தொடக்கம் பல இடதுசாரிகள் தமிழர்களுடைய உரிமைக்கோரிக்கைகள் தொடர்பாக தமது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இவை எதற்கும் சிங்கள உயர் குழாம் அல்லது அதிகாரத் தரப்புகள் செவிகொடுக்கவில்லை. எனவே தமிழர்கள் மாற்று நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
‘எனவேதான் அவர்கள், இந்தியாவை நம்பினார்கள். பின்னர் நோர்வேயை நம்பினார்கள். இப்போது அமெரிக்காவை நம்புகிறார்கள்’ என்று சொல்கிறார்கள். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் கருதுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். ஆனால், இப்படிக் குருட்டுத்தனமாக வெளிச் சக்திகளின் மீது நம்பிக்கை வைப்பது எந்த அளவிற் சாத்தியமானது? அது எத்தகைய நன்மைகளைக் கொடுக்கும் என்பதைப்பற்றியெல்லாம் தமிழர்கள் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்கும் ஒரு அரசியற் தெளிவை தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள அரசியற் தலைமைகள் ஏற்படுத்தவும் இல்லை. அவைகளே இந்தச் சக்திகளுக்குப் பின்னர் நேர்த்திக்கடனுக்காகச் செல்வதைப்போலச் சென்று கொண்டிருக்கின்றன.
ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிச் சக்திகள் தமது தேவைகளுக்காக தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றன. அல்லது அப்படிப் பயன்படுத்த விளைந்திருக்கின்றன. தமிழர்களும் அதீத நம்பிக்கையோடு’ வெளுத்ததெல்லாம் பால்’ என்ற கணக்கில் இந்தச் சக்திகளின் பின்னே இழுபட்டிருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தமது நலன்களுக்காகவே எப்போதும் சிந்திக்கின்றன. அதைக் குறிவைத்தே அவை செயற்படுகின்றன என்ற மிகச் சாதாரண அரசியல் அறிவைக்கூடத் தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
தற்போது கூட இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வரக்கூடிய அளவில் தமது அரசியற் திறன்களையும் வியூகங்களையம் வகுப்பதற்குப் பதிலாக தமது நலன்களைப் பெறுவதில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளுக்காக தமிழர்களைப் பயன்படுத்த முனைகின்ற வெளிச் சக்திகளுடன் கூட்டுச் சேர்வதிலேயே இவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்த வெளிச் சக்திகள் தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாகவும் சீரியஸாகவும் சிந்திக்கின்றன என்பது கேள்விக்குரியது. இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது இன்னும் வேடிக்கையானதும் துக்ககரமானதுமாகும்.
தமது தேவைகள் முடிந்தவுடன் இந்தச் சக்திகள் தமிழர்களைக் கழற்றி விடும் ஒரு யதார்த்தமே கடந்த காலத்தில் நடந்துள்ளது. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது. இதை மறுத்துரைப்போரிடம் இதற்கு என்ன உத்தரவாதமுண்டு? என்ன பதிலுண்டு?
எதிர்காலத்தில் மேற்குலகத்தின் அரசியல் நலன்களும் உபாயங்களும் மாறுபடும்போது தமிழர்களின் நிலை என்னவாகும் என்று சிந்திக்க வேண்டும். ஒரு சிறிய உடன்பாட்டோடு, சிங்களத் தரப்பு இந்தச் சக்திகளைத் தமக்கிசைவாகத் திருப்பி விடக்கூடும். சிங்களத்தரப்பிடம் அத்தகைய ராசதந்திர ஆற்றல் இருப்பதும் நாம் கவனிக்க வேண்டியது.
அதேவேளை இங்கே தவிர்க்க முடியாத சில கேள்விகள் எழுகின்றன. தற்போது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்களை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா? என்ற கேள்வி. (இதிலென்ன கேள்விக்கிடமிருக்கிறது? மறுபேச்சின்றி, நாம் இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்க வேண்டும் என்று சொல்வோர் உள்ளனர். அவர்கள் மன்னிக்க வேண்டும்). அத்துடன், நடந்த பாதிப்புகளுக்கும் குற்றங்களுக்கும் என்ன தீர்வு? அதை எப்படி, யார் மூலம் பெற்றுக் கொள்வது?
இனப் பிரச்சினையை தீர்வு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசுக்கு எப்படி அழுத்தத்தைக் கொடுப்பது? எனவே தற்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தரப்பினருடன் இணைந்து சமநேரத்தில் அழுத்தமொன்றைக் கொடுப்பது விவேகமானது, பொருத்தமானதுதானே என்ற கேள்வியும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதில் என்பது சிங்களச் சமூகங்களிடம் இதைப் பற்றிய புரிதலை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது, தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. வெளிச் சக்திகளுடன் இணைந்து சிங்களவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கங்களைக் கொண்டவர்களும் இல்லை. இலங்கையைக் காட்டிக் கொடுப்பவர்களும் இல்லை என்ற சேதியைச் சிங்கள மக்களிடத்தில் தெளிவாக்க வேண்டி பொறுப்புத் தமிழர்களுக்கு உண்டு. அது கட்டாயமானது.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்களைக் குறித்த சந்தேகமும் தவறான எண்ணமும் பகையும் அச்சமும் அவர்களிடத்தில் நீங்கும். இது இனவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அல்லது அதைப் பலவீனப்படுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தும்.
இலங்கைத் தீவின் புவியியல் மற்றும் வாழ்நிலை போன்ற காரணங்களின் நிமித்தம் சிங்களச் சமூகத்தினருடன் உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று சிந்திக்கும் ஒரு அரசியற் சிந்தனையை, அரசியல் யதார்த்தத்தைப் பற்றித் தமிழர்களிடத்திலும் ஒரு புரிதலை இது ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.
ஆகவே, தமிழர்கள் இப்போது மிக நிதானமாக தமது கால்களை வைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறே கைகளை நீட்டவும் வேண்டியுள்ளது. அவ்வாறே வாய்களை வைத்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது. அப்படியே தங்களின் சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இன்னும் அவர்கள் நடுக்கடலில் தவிக்க முடியாது. காத்தற்கடவுள்களின் பின்னே குருட்டு நம்பிக்கைகளுடன் அலைய முடியாது. ‘நம்பிய தேவதைகள் சாத்தான்களாகி விட்டன’ என்று மீண்டும் மீண்டும் தோல்விக்குப் பின்னே யாரையும் வசைபாடி நொந்து கொள்ள வேண்டியதில்லை.
தமது நியாயங்களைச் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கும் அதேவேளை சிங்களச் சமூகத்துக்கும் அதை எடுத்துரைக்க வேண்டும். அதுவே நிரந்தரப் பகைகளை முடிவுக்குக் கொண்டு வரும். அல்லது தணிக்கும். என்னதானிருந்தாலும் இலங்கைத் தீவிலிருக்கும் சமூகங்கள் முரண்பட்டுக் கொள்ளும்வரையில், அது அமைதிப்பிராந்தியமாக இருக்க முடியாது. அமைதியற்ற நிலையைச் சாதமாகப் பயன்படுத்தி ஆதிக்கச் சக்திகள் தென்னாசியப் பிராந்திய ஆதிக்கத்துக்கு முயற்சிக்கும். இதற்கு இடமளித்தால், இலங்கையர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது.

கருத்துகள் இல்லை: