திங்கள், 10 அக்டோபர், 2011

அப்பல்லோ மருத்துவமனை அதிபர் சுனிதா ரெட்டி வீட்டிலும் சிபிஐ ரெய்ட்


Suneeta Reddy
ஹைதராபாத்: ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி வரும் சிபிஐ, இதே விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குனரான சுனிதா ரெட்டியின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது.

இவர் அப்பல்லோ அதிபர் பிரதாப் சி.ரெட்டியின் மகள் ஆவார்.

சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் தயாநிதி மாறனின் நெருக்குதலால் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் சிந்தியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கும் வலுக்கட்டாயமாக விற்கப்பட்டன.
இதில் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனமும், 26 சதவீத பங்குகளை சிந்தியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனமும் வைத்திருந்தன.இந்த சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனம், அப்பல்லோ குழுமத்துக்கு சொந்தமானதாகும். இந் நிலையில் 2005ம் ஆண்டு ஏர்செல் நிறுவன பங்குகள் மேக்சிஸ் மற்றும் சிந்தியா செக்யூரிட்டீஸ் வசம் போன பிறகு சுனிதா ரெட்டி ஏர்செல் தலைவராக்கப்பட்டார்.

மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான இவரிடம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுனிதா ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந் நிலையில் இன்று இவரது ஹைதராபாத் மற்றும் சென்னை வீடுகள், அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடந்து வருகின்றனர்.

மேலும் இந்திய தொலைத் தொடர்புத்துறை சேவையில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற விதியையும் மேக்சிஸ் மீறியுள்ளதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் நேரடியாக 65 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 35 சதவீத பங்குகளை டெக்கான் டிஜிட்டல் என்ற நிறுவனமும் தன் வசம் வைத்துள்ளன. இந்த டெக்கான் டிஜிட்டல் நிறுவனத்தில் 26 சதவீத பங்குகள் மேக்சிஸ் வசமும் மீதமுள்ள 74 சதவீத பங்குகள் சிந்தியா செக்யூரிட்டீஸ் வசமும் உள்ளன.

இதன்மூலம் ஏர்செல்லின் 74 சதவீத பங்குகள் மேக்சிஸ் வசமே உள்ளன. மேலும் டெக்கான் டிஜிட்டல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 7,880.8 கோடியை முதலீடு செய்து அதன் 26 பங்குகளை வாங்கியுள்ளது. ஆனால், சிந்தியா செக்யூரிட்டீஸ் வெறும் ரூ. 34.17 கோடியை மட்டும் முதலீடு செய்து 74 சதவீத பங்குகளை தன் வசம் வைத்துள்ளது.

இதன்மூலம் சுனிதா ரெட்டியின் சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஒரு முகமூடி தான் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 99 சதவீத ஏர்செல் நிறுவன பங்குகளை தன் வசம் வைத்துள்ள மேக்சிஸ் அதை மறைக்கவே, சுனிதா ரெட்டியின் நிறுவனத்தை ஒரு முகமூடியாக பயன்படுத்தியுள்ளது. இதற்காக சுனிதா ரெட்டிக்கு எவ்வளவு பணம் அல்லது வேறு சலுகைகளை கைமாறின என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது

கருத்துகள் இல்லை: