ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கலைஞர்:வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது

: ""சிறையில் இருக்கும் தி.மு.க.,வினரை, நீங்கள் அரணாக இருந்து வாத திறமையால் அவர்களை வெளிக்கொணர வேண்டும். இதற்கான செலவை, தலைமையிடம் எதிர்பார்க்கக் கூடாது,'' என, தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேற்று நடந்த தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க.,வில் வழக்கறிஞர் அணி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டிருந்தேன். தற்போது, அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அப்படி கேள்வி கேட்டால் தான், "என்ன இப்படி கேட்டுவிட்டாய், நாங்கள் எல்லாம் எங்கே போய் விட்டோம்?' என்று மார்தட்டிக்கொண்டு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்டேன். ஒவ்வொரு நாளும் ஏடுகளைப் புரட்டினால், யார், என்ன காரணத்திற்காக கைது என்பதை படிக்க நேரிடுகிறது. இந்த வழக்குகளை எல்லாம் சட்ட ரீதியாக சந்திப்போம்.

நமது வழக்கறிஞர்களுக்கு எல்லாம், வேலை கொடுக்கின்ற ஒரு அற்புதமான வாய்ப்பை இன்றைய அரசு செய்திருக்கிறது. சிறையில் இருக்கும் தி.மு.க.,வினரை மீட்க, நீங்கள் எடுத்துள்ள முயற்சியை தொடர வேண்டும். அவர்களுக்கு ஜாமின் தர மாட்டோம் என்று சொல்லும்போது, அரணாக இருந்து மீட்க வேண்டும். அதற்கு செலவழிக்க வேண்டாமா என்று நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது. தி.மு.க., பொதுத் தேர்தலைச் சந்தித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கும் கட்சி என்பதை வழக்கறிஞர்கள் மறந்து விடக்கூடாது. செலவு செய்வதற்கு உங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எனவே இந்த கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மனதில் கொண்டு, வழக்கு செலவுகளுக்கு தலைமையிடம் எதிர்பார்க்கக் கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: