சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து படகு மூலம் இலங்கைத் தமிழ்
அகதிகளைக் கடத்த முயற்சித்ததாக தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல், 'தந்தை பெரியார் திராவிடர் கழக'த் தலைவர் லோகு.அய்யப்பன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 'வழக்கம்போல இதுவும் ஒரு கடத்தல் சம்பவம்...' என்ற ரீதியில் இது பார்க்கப் பட்டது. உண்மையில் இதற்குப் பின்னால் இருக்கும் அவலம், நம் எல்லோர் மனசையும் சுடக்கூடியது. தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் விரிவாகப் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
''தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 அகதிகள் முகாம்கள் உள்ளன. ஏறத்தாழ, 25 ஆயிரம் குடும்பங் களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கொட்டடிச் சிறைகளைப்போல ஒரு குடோனுக்குள்தான் வாழ்க்கை. சிமென்ட் பைகளால் ஆன தடுப்புச் சுவர்கள்... 80 சதுர அடிக்குள் புழங்க வேண்டிய நிலை. இங்கே அந்தரங் கத்துக்குப் பாதுகாப்பு இல்லை. முகாம்களைவிட்டு வெளியே செல்பவர்களுக்கு இரண்டு பேர் ஜாமீன் கொடுத்தால் மட்டுமே போக முடியும்.
அகதிகளின் பிள்ளைகளது உயர் கல்விக்கு எந்தவித உதவியும் கிடைப்பதில்லை. கல்வி கற்றாலும், வேலை தேடி வேறு இடங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை. பலரும் படிப்பதையே விட்டுக் கூலித் தொழிலாளிகள் ஆகிவிட்டனர். மண்டபம் முகாமில் கல் கட்டடத்தைத் தவிர எந்த வசதியும் இல்லை. விருத்தாசலம், காட்டுமன்னார் கோவில் முகாம்களில் வெயிலில் வதங்கியும், மழையில் நனைந்தும் கஷ்டப் படுகிறார்கள். நாமக்கல், பவானி முகாம்களில் அகதிகளின் பட்டதாரி பிள்ளைகள் கல் உடைத்து, வயிறு கழுவுகிறார்கள்!'' என்று அவலங்களை அடுக்கிக்கொண்டே போனார்கள்.
அகதிகளின் வாழ்வாதாரத்துக்குப் 'பணக்கொடை திட்டம்' என்ற பெயரில் மாதந்தோறும் 400 குடும்பத் தலைவருக்கும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 288-ம், அதற்குட்பட்டோருக்கு 90-ம் வழங்கப்பட்டது. அது கடந்த ஆண்டு மாதந்தோறும் முறையே 200 என அதிகரித்து வழங்கப்படுகிறது. நமது அங்கன்வாடிகளில் வழங்கப்படுவதுபோன்றே சத்துமாவு வழங்கப்படுகிறது. மலிவு விலையில் அரிசி வழங்கப்படுகிறது. இதுமட்டுமே அகதிகளைக் காக்குமா என்பது கேள்வி. ''கடந்த 30 ஆண்டுகளில் அகதி முகாம்களில் 22 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களின் தாய்நாடு இந்தியாவா? இலங்கையா? இவர்களின் எதிர்காலம் இங்கே அந்தஸ்தோடு அமைய எந்த வழியும் இல்லை. எனவே, தங்கள் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில்கொண்டும், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தை நினைத்தும்தான் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு 'மறு அகதிகளாக' செல்கின்றனர். அதுவும், நீண்ட தூர பயணத்துக்குப் பாதுகாப்பில்லாத சாதாரண மீன்பிடி படகுகளில் தங்கள் உயிரைப் பணயம்வைத்துத் தப்பிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு மாதந்தோறும் இந்திய மதிப்பின்படி 40 ஆயிரம் பணக்கொடை அளிக்கப்படுகிறது. பிள்ளைகளின் உயர் கல்விக்கு வழி செய்யப்படுகிறது. நிரந்தர தொகுப்பு வீடுகள் அளிக்கப்படுகின்றன. ஐந்தாண்டுகள் அங்குள்ள அகதி முகாமில் இருந்து பின்னர் நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றதும், 'ஒர்க் பர்மிட்' என்று வேலைக்கான ஆணை கிடைத்து, பணி பாதுகாப்பும், நிரந்தர வருவாயும் கிடைக்கும்.
இப்போது, ஆஸ்திரேலியாவும் இலங்கை அகதிகளை ஏற்பதில் முகம் சுளிக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர், 'இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்ட பின்னரும் அகதிகளாக இங்கு ஏன் வருகிறார்கள்?' என்று கேள்வி எழுப்புகிறார். 'தொப்புள் கொடி உறவு' என்று எல்லாம் பேசும் தமிழகமே, இலங்கை அகதிகள் விஷயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது, ஆஸ்திரேலியா என்ன செய்யும்?
இதுமட்டுமல்ல... இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய அகதிகளுக்கு வெண்ணெயும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சுண்ணாம்புமாக பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுவும் மாறவேண்டும்.
கடந்த 9-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்த முதல்வர்கூட, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து மனு ஒன்றைக் கொடுத்தார். இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், தமிழகத்தில் உள்ள அகதிகளில் நல்வாழ்வுக்கும் திட்டங்கள் தீட்டியாகவேண்டும். துணை முதல்வரையும், அமைச்சர்களையும் அகதி முகாம்களுக்கு ஆய்வுக்குச் செல்ல உத்தரவு போட்டு விட்டால் மட்டும் போதாது!
டி.கலைச்செல்வன்
படங்கள்: புதுவை இளவேனில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக