சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் போன்றவற்றை கொடுத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கும் சிறைக் காவலர்கள் அடிக்கடி மாற்றப்படுவது தமிழகச் சிறைகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி. ஆனால் கோவை சிறையிலோ, சட்டவிரோத சம்பவங்களை காட்டிக் கொடுப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்படு கிறார்கள். இதற்கு உயர்அதிகாரிகள் ஆசியும் இருக்கிறது. நீங்களே தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் தான் இங்குள்ள நேர்மையான காவலர்களை காப்பாற்ற முடியும்’’ என்று முதல்வருக்கு புகார் மனு அனுப்பியிருக்கிறார்கள் கோவை சிறைக் காவலர்கள்.
‘சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சிறைக்காவலர்களின் பட்டியலையும் முதல்வருக்கு அனுப்பிய புகாருடன் இணைத்துள்ளனர். ‘பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களே என்பதை பகவத்கீதை, பைபிள், குரான் ஆகிய புனித நூல்களின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறோம்!’ என்று பின்குறிப்பு இடப்பட்டிருக்கும் அந்த புகார் இப்போது புகைய ஆரம்பித்துள்ளது.
முதல்வருக்கு சிறைக்காவலர்கள் அனுப்பிய புகார் இதோ....
“கோவை மத்திய சிறையின் கோபுரத்தின் மீது காவலர்கள் ஓய்வு எடுக்கும் அறை ஒன்று உள்ளது. இது காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை பூட்டப்பட்டே இ ருக்கும். இதன் சாவி முக்கிய காவலரிடமே இருக்கும். பகல் நேரத்தில் எந்த ஒரு பணியாளரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.
அப்படியிருக்க வாரத்தில் ஓரிரு நாள் சிறையில் உள்ள இளம் கைதிகளைக் கொண்டுவந்து அறையை சுத்தம் செய்வதாகச் சொல்லி அவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார் இந்த முக்கிய காவலர். இவருக்கு இளம் கைதிகளை ‘செலக்ட்’ செய்யும் பணியை ஒரு தண்டனைக் கைதியே செய்கிறார்.
சிறைக்கு வரும் சிறைவாசிகளை சீர்திருத்தி நல்லவனாக்க வேண்டியது சிறைத்துறையின் கடமை. அப்படியிருக்க முக்கிய அலுவலரே இப்படியொரு கேவலமான விஷயத் தில் இளம் கைதிகளை ஈடுபடுத்துவது கேவலத்திலும் கேவலம்.
அழைத்து வரப்படுகிற இளம் கைதி இந்த ஓரினச்சேர்க்கைக்கு உடன்படாவிட்டால் அவனை சிறையில் உள்ள தனிமைச்சிறையில் (மனநோய்ப்பிரிவு) அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் பாதிக்கப்படும் கைதிகள் வெளியில் எதுவும் சொல்வதில்லை.
இச்சிறையின் கோபுரத்தினை சுற்றிலும் ஒன்பது தொகுதிகள் அமைந்துள்ளன. இதில் 1100 தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமே விதி மீற ல்களின் கூடாரமாகும். கோபுரத்தைச் சுற்றியுள்ள 9 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு தலா 2 செல்போன் வீதம் மொத்தம் 18 செல்போன்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
ஒரு அழைப்புக்கு கைதிகளிடம் ரூ.50 முதல் ரூ.100 வரை வசூல் செய்யப்படுகிறது. செல்போன் புழக்கம் அதிகமானதால் சிறைக்கு உறவினர்கள் வருவது கடந்த 4 மாதங் களாக வெகுவாக குறைந்து விட்டது. இந்த செல்போனை புழக்கத்தில் விட்டு, முக்கிய சிறைக் காவலர் நூதனமான முறையில் வசூல் நடத்தி வருகிறார்.
எப்படி என்றால், ஒரு கைதி தன் செல்போனுக்கு தினமும் ரூ.500 கப்பம் கட்டவேண்டும். இவரது கட்டுப்பாட்டில் மட்டும் இங்கே 12 செல்போன்கள் உள்ளது. ஆக ஒரு நாளைக்கு இதன்மூலம் மட்டும் இவருக்கு ரூ.6,000 வருமானம் வருகிறது. இதில், ஒரு குறிப்பிட்ட தொகையை சிறையின் உயர் அதிகாரிக்கு இவர் கப்பம் கட்டி விடு கிறார். இவரை பகைத்துக்கொள்பவர் வேறு இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவார். அவ்வளவு ‘பவர்’.
செல்போன்களை மட்டுமல்ல, பீடிகளையும் இவர் புழக்கத்தில் விடுகிறார். வெளியே ஒரு கட்டு பீடி 7 ரூபாய். இங்கு ஒரு கட்டு பீடி 80 ரூபாய். ஒரு நாளைக்கு சாதாரணமாக பத்துக் கட்டு பீடிகளை இவர் விற்பனை செய்கிறார். இவரை உள்ளே வரும்போது யாரும் சோதனை செய்வதில்லை. எனவே தடைசெய்யப்பட்ட பொரு ட்களை எளிதாக உள்ளே கொண்டு வந்து புழக்கத்தில் விடுகிறார்.
செல்போன் புழக்கத்தில் விடுவதால் வெளியே கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்துக்கள் அரங்கேறி வருகின்றன.
விசாரணைக் கைதிகளாக வருபவர்களை கோபுரத் தொகுதிகளுக்கு அழைத்
துச் சென்று இந்தக் காவலரும், தண்டனைக்கைதிகளும் மூளைச்சலவை செய்து கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நாசவேலைகளை உள்ளிருந்தபடியே அரங்கேற்றுகின்றனர்.
சேலம் சிறைத்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும் பழனியை இங்கே கூடுதல் பொறுப்பில் நியமித்தார் இங்குள்ள அதிகாரி. 2 முக்கிய சிறைகளை ஒரு கண்காணிப்பாளர் கண்காணிப்பது இயலாத காரியம். அல்உமா போன்ற உயர் பாதுகாப்பு சிறைக்கைதிகளை கண்காணிக்க வேண்டிய உளவுப்பிரிவு இப்போது உறங்கும் பிரிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்ற நீண்ட கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த புகார் கடிதம் தொடர்பாக, கோவை மத்திய சிறை அதிகாரிகளின் விளக்கத்தை கேட்க முயன்றோம். யாரும் விளக்கம் தர முன்வரவில்லை.
சில சிறைக்காவலர்களிடம் பேசியபோது, ‘இந்தக் கடிதம் மட்டுமல்ல, இன்னும் பல கடிதங்கள் சிறைக்குள்ளிருந்து முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சிறைக்குள் காவலர்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியின் காரணமாகவே இப்படிப்பட்ட கடிதங்கள் வெளிவருகின்றன!’’ என்றனர்.
கோவை சிறையில் செல்போன்களும், கரன்சிகளும் கூவிக்கொண்டிருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால்..‘.வெளியே இருப்பதைவிட சிறை வாழ்க்கை சிறப்பானது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடப்போகிறது’ என்று அச்சத்தை வெளிப்படுத்துகிறார் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக