வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

காஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை!


மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும் என்றும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பான மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தச் சூழலில் நேற்று (ஆகஸ்ட் 8) மாலை 8 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் அண்ணல் அம்பேத்கர், சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகியுள்ளது. அது காஷ்மீரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. ஊழலும் பயங்கரவாதம் வளரவும், சில குடும்பங்கள் கொள்ளையடிக்கவுமே பயன்பட்டது.
இந்தியாவைத் தாக்குவதற்கான மறைமுக ஆயுதமாக 370ஆவது பிரிவை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. பயங்கரவாதம் காரணமாக ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளில் 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரின் வளர்ச்சி இனிதான் ஆரம்பமாகப் போகிறது. காஷ்மீர், லடாக் மக்களுக்குப் புதிய விடியல் கிடைத்துள்ளது. குழந்தைகளின் கனவு இனி நனவாகும். பெண்களுக்கு இனி முழு பாதுகாப்பு கிடைக்கும். மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் காஷ்மீரைச் சென்றடையும்” என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதுதான். உங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் மீது எந்த அழுத்தத்தையும் மாநில அரசு திணிக்காது என்று உறுதியளித்த பிரதமர், “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர். ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும். அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “மாநிலத்தில் காலியாகவுள்ள அரசுப் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தப்படும். பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் தொடங்கப்படும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் தொடங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். காஷ்மீரில் வருவாய் பற்றாக்குறை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாகச் சிறந்த சுற்றுலாத் தலமாக காஷ்மீரை மாற்றுவோம். ஆன்மிக மற்றும் சாகச சுற்றுலாத் தலமாக காஷ்மீர் விரைவில் உருவெடுக்கும். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாக்களின் விருப்பமான படப்பிடிப்பு தலமாக காஷ்மீர் உள்ளது. வருங்காலத்தில் ஹாலிவுட் படங்கள் எடுக்கும் அளவுக்குத் தரம் உயர்த்துவோம்” என்று பட்டியலிட்ட பிரதமர்,
“காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு புதிய வழி பிறந்துள்ளது. அதில் தைரியமாகப் பயணிக்கலாம். காஷ்மீரும் நம் நாட்டில்தான் உள்ளது. அவர்களும் நம்மவர்கள்தான். லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பதற்றமான சூழலில் அமைதி காத்த காஷ்மீர் மக்களுக்கு நன்றி. இனி அவர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்” என்றும் பேசினார். மாற்றுக் கருத்தை மதிப்பதாகவும், ஆனால் தேச விரோத செயல்களை ஆதரிக்க முடியாது எனவும் தெரிவித்தார். சுமார் 39 நிமிடங்கள் பிரதமர் உரை நிகழ்த்தினார்

கருத்துகள் இல்லை: