புதன், 7 ஆகஸ்ட், 2019

அமெரிக்க என் ஆர் ஐ இந்திய அமைப்புகள் மத்திய அரசுக்கு பாராட்டு

தினமலர் : வாஷிங்டன் : 'ஜம்மு - காஷ்மீருக்கு
அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்தானது மற்றும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, அந்த பகுதியில் அமைதி ஏற்படுத்த, இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, அமெரிக்கா ஆதரவு அளிக்க
வேண்டும்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புக்கு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஹிந்து அமெரிக்க அமைப்பு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தொடர்பாக, இந்தியா எடுத்துள்ள முடிவுகளுக்கு, அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும். அதே நேரம், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை
நிறுத்திக் கொள்ள வேண்டும் என, பாகிஸ்தானுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் அமலாகியுள்ளது. சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த, காஷ்மீர் பிராமணர்களான, 'பண்டிட்'கள், மீண்டும் அங்கு குடியேற வாய்ப்பு கிடைத்துள்ளது.


பா.ஜ.,வின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பு:

இந்தியாவின், 73வது சுதந்திர தின பரிசாக, 370 மற்றும் 35 - ஏ பிரிவுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை, அமெரிக்கா முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

அமெரிக்காவின் உலக ஹிந்து கவுன்சில்:
இப்போது தான், இந்தியாவுடன், ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகள் இணைந்துள்ளன. இதனால், அந்த பகுதிகள், இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைந்து வளர்ச்சி அடையும்.
ரவி பத்ரா, வழக்கறிஞர், அமெரிக்கா:
இந்திய அரசின் நடவடிக்கை, ஜம்மு - காஷ்மீரிலும், இந்தியா - பாகிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்த வேண்டும். காலனி ஆதிக்க காலத்தில் பின்பற்றப்பட்ட செயல்பாடுகள் நீங்கியுள்ளன. பயங்கரவாதத்திலிருந்தும், இந்திய துணை கண்டத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது.

புனித் அலுவாலியா, இந்திய அமெரிக்கர்:
இந்த நடவடிக்கை, ஆச்சர்யம் அளிக்கவில்லை; பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் தான் இவை. இந்த நடவடிக்கை, காஷ்மீரில் இருக்கும் குழப்பத்தை அதிகரிக்கும் அல்லது காஷ்மீர் சமுதாயத்திற்கு, சொர்க்கத்தை அளிக்கும்.
காஷ்மீரி பண்டிட்டுகள் அமைப்பு:
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையால், நாங்கள் நாடு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் நடவடிக்கையால், அந்தப் பகுதியின் பாதுகாப்பு நிலைமை மேம்படும்.

இந்தியா - ஐரோப்பிய காஷ்மீர் அமைப்பு:
இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எங்கள் ஆதரவு உண்டு. கடைசியில், காஷ்மீர் பிராமணர்களான, பண்டிட்டுகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது. 1989 - 90ல், ஜம்மு - காஷ்மீரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட இவர்கள், மீண்டும் சொந்த பூமிக்கு செல்ல, வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு, பல்வேறு அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம். இந்தியாவிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் நடைபெறும் நிகழ்வுகளை, அமெரிக்கா உற்று கவனித்து வருகிறது. மேற்கொண்ட நடவடிக்கைகள், உள்நாட்டு விவகாரம் என, இந்தியா தெரிவித்துள்ளது. எனினும், சட்ட விரோத காவல், மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றன.
-
 மோர்க்கன் ஆர்டகஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்
இன்டர்நெட் இணைப்பு: ஊடகங்கள் கண்காணிப்பு அமைப்பு என்ற, அமெரிக்காவில் செயல்படும் அமைப்பு, 'ஜம்மு - காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ள, இணையதள இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்படும், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான கமிட்டி என்ற அமைப்பு, 'இணையதள தொடர்புகளை துண்டித்திருப்பது, சுதந்திரமான கருத்து தெரிவிப்பதற்கு எதிரான நடவடிக்கை. அனைத்து பத்திரிகையாளர்களும் சுதந்திரமாக செய்தி அளிக்க ஏற்ற சூழலை, பிரதமர் மோடி அரசு ஏற்படுத்த வேண்டும்' என, இந்த அமைப்பின் தலைவர், அலியா இப்திகர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: