வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு .. மொத்தமாக அள்ளிய வாணியம்பாடி ..

திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார் திமுகவின் கதிர் ஆனந்த். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றியை ஸ்டாலினுக்கு காணிக்கையாக வழங்குகிறேன் என கூறினார்.

ஜோதிட மேதாவிகளின் புரட்டு
மின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.
ஏ.சி.சண்முகம் மத்திய அரசின் திட்டங்களை பிரதானப்படுத்தியே தனது பிரச்சார வியூகத்தை வடிவமைத்தார். “37 எம்.பி.க்களை 38 ஆக்க வாக்களிக்க வேண்டாம். மத்திய அரசைச் சார்ந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறும்போதுதான் வேலூர் தொகுதி வளர்ச்சியடையும். மத்திய, மாநில அரசின் திட்டங்களும் தொகுதிக்குள் வரும்” என்று தனது பிரச்சாரத்தில் கூறினார்.
இருப்பினும் வேலூர் தொகுதிக்கு தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. பாஜக பிரச்சாரம் செய்தால் வேலூரில் கணிசமாக உள்ள இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்காது என்பதால் அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. முத்தலாக் விவகாரத்தை மக்களவையில் ஆதரித்ததும் அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், அதிமுக என்றைக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றே தெரிவித்துவந்தார்.

திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரண்டு கட்டங்களாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களவையில் திமுகவின் செயல்பாடுகளை முன்னிறுத்தியே வாக்கு கேட்கப்பட்டது. திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேரும் தமிழகத்தின் உரிமைகளுக்காக மக்களவையில் முழங்கிவருகின்றனர். அதிமுக வெற்றிபெற்றால் ஏற்கனவே சென்றுள்ள ஒருவருடன் இவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என்று ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கூறியிருந்தார். விரைவில் திமுக ஆட்சி வந்தவுடன் மக்களவைத் தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியையும் திமுக பலமாக நம்பியிருந்தது.
இந்த சூழலில் வேலூர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணிப்பேட்டையிலுள்ள பொறியியல் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு ஆரம்பமானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,402 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். திமுகவின் கதிர் ஆனந்துக்கு 3,994 வாக்குகளும், நாம் தமிழரின் தீபலட்சுமிக்கு 400 வாக்குகளும் கிடைத்தன.

அதன்பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நேரடி போட்டி உருவானது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார்.
இரண்டாவது சுற்றில் அவரை விட 1,541 வாக்குகள் கூடுதலாகப் பெற்று கதிர் ஆனந்த் முன்னிலைக்கு வந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் ஏறுமுகம் கண்ட ஏ.சி.சண்முகம், 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்க ஆரம்பித்தார்.
ஆனால் படிப்படியாக ஏ.சி.சண்முகத்தின் வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கி 11.30 மணி வாக்கில் 3,000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இந்த சூழலில்தான் இஸ்லாமியர்களின் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டது. அதில்தான் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வாக்குகள் கிடுகிடுவென உயரத் தொடங்கின.
12.50 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,73,584 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்துவருகிறார். ஏ.சி.சண்முகம் 3,50,782 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 16,802 என்ற அளவில் உள்ளது.
இருப்பினும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் கிராமப் புறங்களில் பதிவான வாக்குகளையே அதிமுகவினர் பெரிதும் நம்பியுள்ளனர். ஆனாலும் இங்கும் தங்களுக்குதான் பெரும்பான்மை கிடைக்கும் என திமுகவினர் கூறுகின்றனர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

This blog is awesome.. All the articles written are well researched. Fabulous blog

my cricket highlights