சனி, 30 ஜூன், 2018

மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு! சட்டவிரோத BSNL இணைப்பு வழக்கு

மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!மின்னம்பலம் : பி.எஸ்.என்.எல் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட ஏழு பேரை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கைக் கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மாறன் சகோதரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு இணைப்புகள், சன் தொலைக்காட்சி குழுமத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக கலாநிதிமாறன் மற்றும் தயாநிதிமாறன் உள்ளிட்ட ஏழுபேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் பி.எஸ்.என்.எல்.முறைகேடு வழக்கில் இருந்து ஏழு பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரும், பதில் மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜுன் 29) மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முழுவதும் ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கு என்பதால், மேலும் மேலும் காலதாமதம் செய்யக் கூடாது, இதனை விரைந்து முடிக்க வேண்டும் எனவே ஜூலை 17 ஆம் தேதியில் அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: