சனி, 30 ஜூன், 2018

திருவண்ணாமலையில் நிர்வாண யாகம் நடத்திய சாமியார்

அவத்தூதா நித்யா அன்கி ஹோத்ரி அட்ட யோகிஸ்வர மௌனி திகம்பரி ஷட்டகோபி என்பது இந்த நிர்வாண சாமியாரின் பெயர் 
Tiruvannamalaiராஜ்ப்ரியன்
நக்கீரன்:  திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கடந்த ஜூன் 28ந் தேதி இரவு வலம் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்படி வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது ஒரு நிர்வாண யாகம். கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை என்கிற பகுதியில் சந்நியாசிகள் நிறைந்து தங்கியுள்ளனர். அந்த திருநேர் அண்ணாமலை பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோயிலுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சாமியார் நிர்வாணமாக அமர்ந்து யாகம் வளர்த்துக்கொண்டு இருந்தார்.
10 பேர் கொண்ட ஒரு குழு சத்தமாக மந்திரங்கள் உச்சரித்துக்கொண்டு இருந்தது.

இந்த மந்திர சத்தமும், யாக புகையும் கிரிவலம் வந்தவர்களை அந்தப்பக்கம் இழுத்தது, பணக்கார தன்மையுடைய சிலர் அந்த யாகத்தின் முன் அமர்ந்து வணங்கிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்து கிரிவலம் வந்தவர்களும் நின்று வணங்கினர். வணங்கியவர்கள், யாகத்தின் முன் அமர்ந்திருந்தவரை உற்றுநோக்கிய பின்பே தெரிந்தது அந்த சாமியார் நிர்வாணமாக இருந்தது. அது பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பெரும்பாலான பெண் பக்தர்கள் அந்த பகுதியை வேகமாக கடந்து சென்றனர்.
கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான, கோயில் நிர்வாகத்தில் உள்ள இடத்தில் ஒருவர் நிர்வாணமாக அமர்ந்து யாகம் நடத்திக்கொண்டு இருக்கிறாரே யார் இவர் என அங்கிருந்த சந்நியாசிகள் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டனர்.
நாம் யாகம் நடத்திய குழுவில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது, தெலுங்கு கலந்த தமிழில் பேசினார். ஆந்திராவில் பொக்குல கொண்ட கைலாச ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் பெயர் அவத்தூதா நித்யா அன்கி ஹோத்ரி அட்ட யோகிஸ்வர மௌனி திகம்பரி ஷட்டகோபி என்பது அவர் பெயர் என்றும், உலக நன்மைக்காக இந்த யாகத்தை நடத்துவதாகவும், ஜீன் 25ந் தேதி காலை இந்த யாகத்தை தொடங்கியதாகவும், காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் நடைபெறும் இந்த யாகம் வரும் ஆகஸ்ட் 25ந்தேதி வரை 61 நாட்கள் நடைபெறவுள்ளது எனத்தெரிவித்தார்.

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் யாகம் நடத்துவது பற்றி காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கிரிவலப்பாதையில் நிர்வாண பூஜை நடத்தறாங்களா, என்னன்னு தெரியல. எங்ககிட்ட யாரும் அனுமதி வாங்கல என்றார்கள் சாதாரணமாக.
போலீஸ்க்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் வெளிப்படையாக நடப்பதே என்னவென தெரியவில்லை. அப்படியிருக்க இன்னும் என்னன்ன நடக்கிறதோ அந்த கிரிவலப்பாதையில்? என நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து திருவாண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். யாகம் நடத்துவதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும் என சாமியார் தரப்பு எதிர் கேள்வி கேட்டதால் என்ன செய்வது என்று போலீசார் முழித்தனர். புகார்கள் யாரும் தராததால் அடுத்து என்ன செய்வது என எஸ்.பி. அலுவலத்திற்கு தகவல் தந்துவிட்டு அமைதியாகிவிட்டனர்.‘

இந்த நிலையில் நமது இணையதள செய்தியை பார்த்துவிட்டு தினசரி பத்திரிகைகள் இன்று செய்திகள் வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி இன்று மாலை 4 மணி அளவில் கிரிவலப் பாதைக்கு சென்றவர், சம்மந்தப்பட்ட சாமியாரிடம் அனுமதி பெறாமல் யாகம் நடத்துவது சட்டப்படி குற்றம். இது வனத்துறைக்கு சொந்தமான இடம். இந்த அமைதியான இடத்தில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்வத சரியல்ல. நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நிர்வாண யாகம் நடத்திய சாமியார், யாகத்தை நிறுத்திவிட்டு உடனடியாக இங்கிருந்து புறப்பட்டு செல்லும் வேலையில் ஈடுபட்டார்.

கருத்துகள் இல்லை: