புதன், 27 ஜூன், 2018

பன்னீர் உள்பட 7 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் அப்பீல்.. தினகரன் தரப்பு அதிரடி

Balaji - ONEINDIA TAMIL  டெல்லி: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். 
அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். மேலும், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அப்போது நடத்தப்பட்ட சட்டசபை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
 
பின்னர், ஓ.பன்னீர் செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தது. அதிமுகவையும் கைப்பற்றினர். 
இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் எதிர்த்து தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். இவர்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 
இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அறிவித்ததால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 
இந்நிலையில் அதிமுகவின் அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைப் போல, ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 பேரையும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று அப்பீல் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை: