செவ்வாய், 26 ஜூன், 2018

மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !


போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத் தவிர." மக்கள் அதிகாரம் வழக்கு நிதி கோரிக்கை!
தமிழக போராட்ட வரலாற்றில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, பெரும் மக்கள் பங்கேற்று போராடி, அரசை பணிய வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த அர்ப்பணிப்பான போராட்டம் முக்கியமானது. சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போராட்டங்களுக்கு இது முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், போராடிய மக்கள் மீது பெரும் வன்முறையை − படுகொலையை திட்டமிட்டு நடத்தியுள்ளது போலீசு.
துப்பாக்கிச் சூடு படுகொலை, குண்டடிபட்டு காயம், நூற்றுக்கணக்கான வழக்குகள், கைது, சிறை, அடக்குமுறை என ஒரு மாத காலமாக தூத்துக்குடி மக்கள் நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆபத்தைவிட போலீசு ஆபத்து அவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆண்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீட்டில் தங்க முடியவில்லை. பெண்களும் இரவில் மாதா கோவிலில் தஞ்சமடைகிறார்கள். மக்கள் அதிகாரம் மட்டுமல்ல போராடிய மக்கள் பலரையும் தூத்துக்குடி போலீசு கைது செய்து மிரட்டி வருகிறது. போராடுவதை குற்றமாக – தீவிரவாத நடவடிக்கையைப் போல சித்தரித்து கைது செய்வது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பது அடக்குமுறையின் உச்சம்.

துப்பாக்கிச் சூடு படுகொலை நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • 144 தடை உத்திரவு போட்டது யார்?
  • அதன் நகலை ஏன் வெளியிடவில்லை?
  • முற்றுகைப் போராட்டம் நடந்த அன்று கலெக்டர் எங்கே போனார்?
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துப்பாக்கி சூடு நடந்தபோது என்ன செய்தார்?
  • துணை ஆட்சியர் பிராசாந்த் நியமித்த கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாமல் யாரோ மூன்று ஊழல் பேர்வழி துணை தாசில்தாரை வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக ஏன் சொன்னார்கள்?
  • துப்பாக்கிச் சூட்டில் எனக்கு சம்பந்தமில்லை என்பதை ஒரு தாசில்தார் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் ஏன் தனிச்சட்டம் போடவில்லை?
  • நூறு நாட்களாக பெருமளவில் நடந்த மக்கள் போராட்டத்தை வைத்து முன்பே ஏன் ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்கக் கூடாது?
  • முதல்வர் எடப்பாடியும், டி.ஜி.பி. ராஜேந்திரனும் சதித்திட்டம் தீட்டிதான் இந்த படுகொலை நடந்துள்ளது.
– எனவே, இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இவை எதற்கும் உரிய முடிவு காணாமல், போராடிய மக்களை, பங்கேற்ற மக்கள் அதிகார தோழர்களைத் துரத்தி கைது செய்வது ஏன்?
அனைத்து காவல் நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தூத்துக்குடி போலீசார், மதுரை, உசிலம்பட்டி, கோவில்பட்டி, ஆலங்குளம், நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்தி, கைது செய்யப்பட்டவர்களை அனைத்து வழக்குளிலும் சேர்க்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆரியபட்டி தோழர் ஜெயராமன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவர் கூட இருந்தார் என்பதற்காகவே கோட்டையன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.கலிலூர் ரகுமான், அவரது மகன்கள் முகம்மது அனஸ், நான்காம் ஆண்டு ஹோமியோ மருத்துவம் படிக்கிறார். முகம்மது இர்ஷாத் எம்.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மேலும் கோட்டையன், முருகன், சரவணன் இவர்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள். இவர்கள் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது எடப்பாடி அரசு. இவர்களால் இந்த தேசத்திற்கு என்ன ஆபத்து?
தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் எந்த மக்கள் பிரச்சினைக்கும் போஸ்டர் ஒட்டினால், பிரச்சாரம் செய்தால் கூட கைது –  சிறை; பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை. நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தும்  கூட்டங்களுக்குக் கூட அதிக அளவில் போலீசாரை குவித்து, மக்கள் அனைவரையும் வீடியோ எடுப்பது, அச்சுறுத்துவது என பிரிட்டிஷ் காலனி ஆட்சியை கண்ணில் நிறுத்துகிறார்கள். மக்கள் அதிகாரம் வைக்கும் அரசியல் இந்த அரசை – அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. போராடும் மக்களுக்கோ உற்சாகத்தை, நம்பிக்கையைக் கொடுக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை எப்படி முடக்குவது என மோடி, எடப்பாடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தடை செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் வதந்தியை பரப்புகிறது. தமிழக மக்கள் மத்தியில் போலீசின் இந்த அச்சுறுத்தல், பொய் பிரச்சாரம் தோற்றுவிட்டது.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் போராடும் மக்களை, முன்னணியாளர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வது என்ற வகையில் தூத்துக்குடி மாடல் படுகொலை” நடத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி – மோடி அரசுகளின் இத்தகைய ஒடுக்குமுறையால் அர்ப்பணிப்போடு மக்களுக்காகப் போராடும் இயக்கங்களை பணிய வைக்க முடியாது. மக்கள் போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பதிலிருந்து சற்றும் மக்கள் அதிகாரம் பின் வாங்காது. ஆனால், எங்களுடைய பணியை தொடர, கொள்கை உறுதியும் மனவலிமையும் மட்டுமே போதாது. உங்கள் ஆதரவுக்கரம் எங்களுக்கு வேண்டும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்திலிருந்து தோழர்களை மீட்க, எண்ணற்ற வழக்குகளை எதிர்கொள்ள, சிறையில் இருப்பவர்களின் குடும்பங்களை பராமரிக்க மற்றும் அரசியல் பணிகளை தடையின்றி தொடர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
உங்கள் பங்களிப்பாக பெரும் தொகையாக நிதி தாருங்கள்! உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் நிதி கொடுக்க உதவுங்கள். நீங்கள் தரும் நிதி நமது எதிரிகளை வீழ்த்தும் போராட்டத்திற்கு பெரிதும் உதவும். நன்றி!
வழக்குநிதி அனுப்ப வேண்டிய முகவரி:
C. VETRIVEL CHEZHIYAN,
SB A/C NO:62432032779,
STATE  BANK OF INDIA,
POZHICHALUR BRANCH,
CHENNAI.
IFSC: SBIN0021334
தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை: