Lakshmi Kanth Bharathi : அருவருப்பாகப் பார்க்கும் கண்கள் ஆதரவாகச் சேரும்
தோள்கள்
பாலின இணைத் தேர்வுச் சுதந்திரம் உள்பட மனித உரிமைகள் பற்றிப் பேசும் ‘லேடீஸ் அன் ஜென்டில்வுமென்’ ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம் Malini Jeevarathnam தனது உரையாடலைத் தொடர்கிறார்.
எல்லாவற்றிற்கும் அரசியல் பின்புலம் தேவைப்படுகிறது. இந்த தற்பாலின ஈர்ப்பைக் குற்றமெனக் கூறிச் சிறுமைப்படுத்தும் ஒடுக்குமுறையை எதிர்க்க எந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்?
இந்த ஒடுக்கப்பட்ட பாலின, பாலினயீர்ப்பு சார்ந்த மக்களுடைய அடிப்படை குரலாக இருக்க வேண்டியது தீண்டாமை எதிர்ப்பு அரசியலே. எனக்கு தலைவலிக்குது தூங்கணும்னா என் நண்பன் அவன் ரூம்ல தூங்க விட மாட்டான். தண்ணீர் வேணும்னா தண்ணீ கொடுக்க மாட்டான்.
இந்த தீண்டாமையில் இளக்காரத்தை தவிர அருவருப்பு அதிகமாக இருக்கும்.என் நடையை எப்படி இப்படிப்பட்டவர்கள் தீர்மானிப்பார்கள்?
அவள பாரு ஆம்பள மாதிரி நடக்குறான்னும்.
அவனைப் பாரு பொட்ட மாதிரி நடக்குறான்னும். எங்கேயெல்லாம் சாதி ஒடுக்கு முறை இருக்கோ அங்கேயெல்லாம் இந்த பாலின ஒடுக்குமுறையும் இருக்கு. வாயை திறந்து பேசுறதுக்கும், நான் நானா இருக்கிறதுக்கும், நடக்கிறதுக்கும் எதிராக அவ்வளவு ஒடுக்குமுறை.
எடுத்தவுடனே என் மார்பைப் பார்ப்பான் அதுக்கடுத்து என் இடுப்புக்குக் கீழே பார்ப்பான் அதுக்கப்புறம்தான் என்கிட்ட பேசலாமா வேண்டாமான்னு தீர்மானிப்பான். இது ஒரு வகையான உடல் அரசியல் சார்ந்து இருக்கும் ஒரு பெரிய ஒடுக்கு முறை. என் பான்ட்டுக்குள்ள என்ன இருக்குனு பார்த்துட்டு என்கூட பேசணுமா வேண்டாமான்னு முடிவு செய்றது பெரிய மோசமான அவமானம். நான் ஸ்கூல் படிக்கும்போது என் வாத்தியார் பாடம் நடத்தினாரு. யாரு வந்தாங்கனு தெரியாம நடந்து போறவள்தான் பொண்ணு. அப்படி ஒரு பெண் தன்னை கடந்து போறான்னு தெரியாம இருக்கணும், அதுதான் ஒரு பெண்ணுடைய பத்தினி தன்மை, கற்பு தன்மை... இதுதான் நம்ப கலாச்சாரம்னு சொன்னாரு.அவர் சொன்ன இந்த கலாச்சாரத்தில்தான் என் மார்பு என்ன அளவுவில் இருக்குனு பார்த்துட்டு அது ஒரு ஆணா பெண்ணானு தீர்மானிச்சிட்டு என்னுடன் பேசுறாங்க. அப்படி பார்த்தும் தெரியலன தைரியமா என் கிட்ட வந்து நீ ஆணா பொண்ணானு வாயத்திறந்து கேக்குற அளவுக்கு ஒழுக்கமுள்ள ஒரு கலாச்சாரம். இது ஒரு வன்கொடுமைக்கு சமமானது. அந்த வன்கொடுமைதான் இந்தச் சமூதாயத்தில் நடக்கிறது.
எல்.ஜி.பி.டி (LGBT) என்றால் என்ன?
ஒவ்வொரு பொதுமக்களுக்குள்ள இருந்துதான் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்காக குரல் கொடுக்கிறவங்களும் இருக்காங்க. இவர்கள் எல்லாரும் பொதுமக்களிலிருந்துதான் சமூக செயல்பாட்டாளர்களாக வந்திருக்காங்க.இங்கு சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் பெண்ணியவாதிகள் மீதும் ஒரு வெறுப்பு உள்ளது. அவர்கள் மீது ஒரு இளக்காரம் உள்ளது. மச்சா அவ ஒரு பெண்ணியவாதிடா நீ ஏன் அவகிட்டெல்லாம் பேசுற, அதோ பாரு டீ குடிக்கிறா. அவள் கூடெல்லாம் ஏன்டா பேசுற; பாரு ஜோல்னா பை போட்டுருக்கா.... இதெல்லாம் கூட வெறுப்பாகப் பார்க்கப்படுது.
அப்படிப்பட்ட வெறுப்பு வன்முறையை மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீதும் பெண்ணுரிமை பேசுவோர் மீதும் திணிக்கிறது இந்த சமூகம். இதற்கெல்லாம் எதிராக தற்பாலின ஈர்ப்பாளர்களான பெண்கள் (லெஸ்பியன்), ஆண்கள் (கேய்), இருபாலின பாலியல் தன்மை உள்ளவர்கள் (பைசெக்ஸ்சுவல்), திருநங்கை-திருநம்பி போன்ற மாறுபாலினத்தவர்கள் (டிரான்ஸ்ஜெண்டர்) இவர்கள்தான் எல்ஜிபீடி. இவர்களும் இவர்களுடைய நலன்களுக்காகச் செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்காகக் குரல்கொடுக்கிறவர்களில் தோழர்கள் நிறையப்பேர் இருககிறார்கள்.இவர்கள் தங்களுக்காக மட்டுமில்லாமல், எல்லா மக்களுக்குமாக பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். டுழுக்ஷகூ என்பதை குயர் என்று சொல்வது சரியாக இருக்கும். எல்ஜிபிடிசமூகத்தை குயீர் என்ற ஒற்றைச் சொல்லாலும் குறிப்பிடுகிறோம். குயீர் செயல்பாட்டாளர்கள் எல்லாவிதமான போராட்டங்களிலும் இருப்பார்கள். ஆசிஃபா கொலையாக இருக்கட்டும் அல்லது ஸ்டெர்லைட் போராட்டமாக இருக்கட்டும் எந்த பிரச்னையாக இருந்தாலும் இருப்பார்கள். குயீர் மக்களுடைய போராட்டங்களில் தோழர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் பெண்ணியவாதிகளாக இருக்கலாம், கம்யூனிஸ்ட்டுகளாக இருக்கலாம். ஒரு ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களால் இன்னொரு ஒடுக்கப்பட்டவருடைய வலியை புரிந்து கொள்ள முடியும். யாருக்கு எந்த ஒடுக்குமுறைகள் நடந்தாலும் சக தோழர்கள் இன்னும் நிறையப் பேர் கைகோர்த்து வர வேண்டும். நாங்க நடந்தால் ஒரு கிண்டல் சொல், நாங்கள் அணியும் ஆடையில் ஒரு கிண்டல் சொல் பிறக்கிறது. அதையே எங்களுடைய சுயமரியாதையாக அதையே எங்களுடைய கம்பீரமாக நடக்கும் போது, யார் எங்களை கிண்டல் பண்ணாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்க இப்படிதானு சக தோழர்கள் வந்து கைகோர்த்து நின்று ஒரு பெரிய சுயமரியாதையை நிகழ்த்தினோம் என்ற சந்தோசம். எதை வைத்து எங்களை ஒடுக்கிறார்களோ, அப்படி அசிங்கமா பார்க்கிற சமூகத்திற்கு முன்னே இதுதான் எங்களின் பெருமிதம் எங்களுடைய அடையாளம் என்பதற்காக நடக்கிறதுதான் சுயமரியாதை பெருமித (பிரைட்) கம்பீர நடை (ஜூன் 24ல் சென்னை உள்பட பல இடங்களில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது). எல்லா நாட்டிலிருந்தும் மக்கள் வருவார்கள். முகம் முழுக்க வண்ணங்களை பூசிக்கொள்வார்கள். தனக்கு பிடிச்ச பயனோட கைகோர்த்து வர அந்த நேரம் ஒரு சந்தோஷமும் பெருமிதமும் விடுதலையும் இருக்கும். பயங்கரமான பறை சத்தத்தில் நடப்போம். இந்தியாவில் எல்லா மூலையிலும் எங்கள் உரிமையைப் பேசி நடக்கிறோம் பாருங்கன்னு சொல்றதா இருக்கும். என்னுடைய முதல் பிரைட் நடைபயணதில் நான் நடந்தபோது முகமூடி அணிந்திருந்தேன். அங்க வந்த பாதிப்பேரு முகமூடி அணிஞ்சிருந்தாங்க. எங்களை சுத்தி முழுவதும் மீடியா. எங்க என் குடும்பத்துக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்கனு தன்னுடைய முகத்தை மறைச்சிக்குவாங்க.என்னுடைய அந்த முதல் பிரைட் நடைபயணதில் கொஞ்ச நேரத்துல என்னுடைய முகமூடியைத் தூக்கி எரிஞ்கிட்டேன். நான் இப்படி பிறந்ததற்காக என் குடும்பம் வருத்தப்படுகிறது என்றால் அந்த வருத்தத்த நான் மாத்துறேன். அந்த புரிதல நான் கொண்டுவறேன் அவங்களுக்கு. அதுக்காக காலம் முழுக்க நான் முகமூடி போடுகிட்டு இருக்க முடியாது...
தற்பாலின ஈர்ப்பு மக்களின் மரணங்களைப் பார்த்தும் பார்க்காமல் கடக்கிறது இந்தச் சமூகம் என்று குயீர் செயற்பாட்டாளர்ஒருவர் கூறினார். அது உண்மைதானா?
ஆமாம்! பார்த்தும் பார்க்காம கடந்து போறாங்க என்பதுதான் உண்மை. இது இன்னொரு வகையான நிராகரிப்பு. ஒருவரின் இறப்பை எப்படி நிராகரிக்க முடியும். உயிரோட இருக்கும்போது ஒரே வீட்டுல இருக்கிற ஒருத்தரை நிராகரிக்கிறாங்க, அதைக்கூட கடந்து முன்னேறி வர முடியும். ஆனால் இறந்துபோனவர் உடல்கிட்ட வரமாட்டோம்னு தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறாங்க. எதற்காக அவர்கள் இறந்தாங்கனு மறைப்பது எவ்வளோ பெரிய ஒடுக்குமுறை. வேறுபல ஒடுக்குமுறைகளால் மரணத்தைத் தழுவுகிறவர்களுக்காகக் கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன . ஆனால் ஒரு குயீர் சார்ந்த மக்களின் மர்மச் சாவுகள் பற்றி ஏனென்று கேட்க ஆளில்லை. ஒரு குயீர் தான் இந்த சமூதாயத்தில் வாழமுடியலனு தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் எந்த உரிமைக்காக இறந்தார் என்பதைகூட ஒரு வழக்காக பதிவு செய்ய வெட்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தெல்லாம் சொல்லி கேஸ் எழுதாதீங்க பத்திரிகையில் எழுதாதீங்க. அவன் எக்ஸாம்ல பையில் ஆகிட்டா, வயித்து வலியில தற்கொலை பண்ணிகிட்டான்னு சொல்லி எங்களின் இறப்பின் காரணத்தையே மறைச்சிடுவாங்க . காரணமே வெளியே தெரியாம செத்துப் போறது இருக்கே, அது உலகத்தில் இருக்கிற அத்தனை ஒடுக்குமுறைகளையும் விட மோசமான ஒடுக்குமுறை. ஒரு ஒடுக்குமுறையுடம் இன்னொரு ஒடுக்குமுறையை ஒப்பிடமுடியாது. அவர்கள் இறந்ததற்கு காரணமாக உள்ள உண்மையை மறைக்கும் அரசியல் எவ்வளவு பெரிய வலி! அந்த வலிதான் இத்தனை ஆண்டுகாலம் தொடருது.
உங்கள் ஆவணப்படத்தின் தயாரிப்பாளராகப் பங்களிக்க இயக்குநர் ப. ரஞ்சித் முன்வந்தது தொடர்பாக?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதை ரஞ்சித் விரும்புகிறார். அவரை அண்ணான்னு சொல்ல தோணுது. ஆனால் ஒரு வேளை அவரோட தங்கச்சிங்கிறதாலதான் இந்த ஆவணபடத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார் போலன்னு நினைச்சிடுவாங்கன்னு பல சந்தர்ப்பங்களில் அவரை அண்ணான்னு சொல்வதை தவிர்ப்பேன். நான் இல்லை, யார் இந்த பிரச்சனைகள் பற்றி பேசறதுக்காக அவரைச் சந்தித்திருந்தாலும் ஒப்புக்கொண்டிருப்பார்.நான் ஒரு அரசியல் கொள்கையை சார்ந்வராக இருந்தால் என்னுடைய அதே அரசியல் கொள்கையை சார்ந்தவர்களுக்காக மட்டும்தான் குரல் கொடுப்பேன் என்ற போக்கு இருக்குது. வேறொரு அரசியல் கொள்கையை சார்ந்த மக்களுக்கான உரிமைகளுக்கு நான் ஆதரவாளராக இருக்கலாம், ஆனால் அவர்களுடைய குரலாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற பார்வை இங்கே பலரிடம் இருக்கு. சில அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் பேசியபோது அருவருப்புடன் பார்த்தார்கள். “இப்ப நாட்டுல உங்க உரிமையை பேசுறதுதான் முக்கியமா? தலையிட வேண்டிய நிறைய பிரச்னைகள் இருக்குறப்ப அத விட்டுட்டு இரண்டு பொண்ணுங்களோட பெட் ரூம் விஷயத்தை பத்தி நாங்க பேசணுமா ன்னு சிலர் நினைக்கலாம். இது பெட் ரூம் விஷயம் மட்டும் அல்ல. அப்படியே இருந்தாலும் அது தவறும் கிடையாது. இது அதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு, காதல் சார்ந்த விஷயம். எல்லா மனுசங்களையும் போல எங்களுக்கு இயற்கையான ஈர்ப்பும் இருக்கு, காதலும் இருக்கு, காமமும் இருக்கு. காமத்தை இவங்க புனிதப் பட்டியலில் சேர்த்துக்கிடறது இல்ல. புனிதம் அப்படிங்குற அரசியலில் இவங்க எதையும் சேர்த்துகிறது இல்ல. ஆனால் புனிதத்திற்கு அப்பாற்பட்ட எல்லாமே இவங்களுக்கு வேணும். அதுவும் இவங்களுக்கு மட்டுமே வேணும். இன்னொருத்தருக்கு வந்தா அது அசிங்கம். யாருக்கு எது நடந்தா அசிங்கம், யாருக்கு எது நடந்தா அது காதல்னு தெளிவான புரிதலோட எடுத்துக்கிடறது நீலம் தயாரிப்பகம்.இதே புரிதலோட எங்களப் பார்க்கிற தோழர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் எங்களுக்குப் பெரிய ஊக்க சக்தி. அவங்களோட துணையோடு சமூகத்தின் பொதுப்புத்திக்கு எங்க வலிகளையும் உரிமைகளையும் கொண்டுசெல்லமுடியும், ஆதரவைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.
சந்திப்பு: ஆ. லட்சுமிகாந்த் பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக