ஞாயிறு, 24 ஜூன், 2018

அமித் ஷா மோசடி 14293 கோடி பற்றிய செய்தி .. சில நிமிடங்களில் நீக்கிய ஊடகங்கள்

அமித் ஷா செய்தி: நீக்கிய ஊடகங்கள்  மின்னம்பலம்: பண மதிப்பழிப்பு
நடவடிக்கைக்கு முன்னதாக, குஜராத்திலுள்ள மாவட்ட
கூட்டுறவு வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. டைம்ஸ் நவ், நியூஸ் 18, பர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் எந்தவித விளக்கங்களும் இல்லாமல் நீக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் சரியாக ஐந்து நாட்கள் கழித்து, பழைய நோட்டுகளைச் செலுத்தி புதிய நோட்டுகளை வழங்கும் நடவடிக்கையில் கூட்டுறவு வங்கிகளை ஈடுபடுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இடைப்பட்ட ஐந்து நாட்களில், அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியானது 745.59 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. இந்த வங்கியின் இணையதளத்திலுள்ள தகவல்கள் படி, இதன் இயக்குனராக நீண்டகாலமாகப் பதவி வகித்து வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா. இரண்டாயிரமாவது ஆண்டு வாக்கில், இந்த வங்கியின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கணக்குப்படி இந்த வங்கியின் மொத்த முதலீட்டுத் தொகை 5,050 கோடியாகவும் 2016-17ஆம் ஆண்டுக்கான லாபம் 14.31 கோடியாகவும் இருந்தது.
மனோரஞ்சன் ராய் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்திக் கேட்டதன்படி, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த சரவணவேல் என்பவர் அளித்த தகவல்படி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம்.
இதுபற்றி டைம்ஸ் நவ், நியூஸ் 18, பர்ஸ்ட்போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டது. ஜூன் 21ஆம் தேதியன்று, எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் உடனடியாக இந்த செய்தி அகற்றப்பட்டது. இதனைச் சுட்டிக்கட்டியுள்ளது தி வயர் ஊடகம்.
பர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூஸ் 18 ஆகியன ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நெட்வொர்க் 18 குழுமத்தினால் நடத்தப்படுகிறது. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு இயக்குனர் பிரபு சாவ்லாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியது தி வயர். அதற்கு, ஒரு தினசரியின் ஆசிரியரே எல்லா செய்திகளையும் வெளியிடுவது குறித்த இறுதி முடிவை மேற்கொள்வார் என்று விளக்கமளித்துள்ளார். இதனால், அதன் ஆசிரியரிடமும் மற்ற நிறுவனங்களைச் சார்ந்த ஆசிரியர்களிடமும் கேள்விஅக்ளை முன்வைத்தது தி வயர். சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் அனைத்தும், இதுவரை இதுகுறித்துப் பதிலளிக்கவில்லை.
பாஜக தலைவர்கள் பற்றிய செய்திகள் வெளியானபிறகு, அவை நீக்கப்படும் விவகாரம் முதன்முறையாக இப்போது மட்டும் நடக்கவில்லை. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக தலைவர் அமித் ஷாவின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் அகமதாபாத் பதிப்பில் தகவல் வெளியானது. அதன்பின் சில மணி நேரங்களில் அதன் இணையதளத்திலிருந்து அந்த செய்தி நீக்கம் செய்யப்பட்டது. இதேபோல மத்திய ஜவுளி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வணிகவியலில் பட்டம் பெறவில்லை என்ற செய்தியை வெளியிட்டன டிஎன்ஏ மற்றும் அவுட்லுக் இந்தி இணையதளங்கள். அதன்பின் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல், அவற்றில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது.
தற்போதும் இது தொடர்வதாகக் கூறியுள்ளது தி வயர். சம்பந்தப்பட்ட ஊடகங்கள் என்ன விளக்கம் அளிக்கப் போகின்றனவோ?

கருத்துகள் இல்லை: