சனி, 30 ஜூன், 2018

மத்திய அரசின் முழுமையான ஆசி இருக்கும் வரைக்கும் இந்த ஆட்சி தொடரும்.

Troll Trousers 2.0 : ஸ்டாலினின் அரசியல்
சேலத்தைச் சார்ந்த ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எட்டு வழிச் சாலை என்பதை கடுமையாக எதிர்க்கிறவர் அவர். 'கலைஞர் அரசியலில் இருந்திருந்தால் இந்த ஆட்சியை கலைத்திருப்பார்; ஸ்டாலின் விட்டுவிடுகிறார்' என்றார். 'அது எப்படிங்க சாத்தியம்?' என்றேன். 'எப்படியாவது கலைக்கணும்' என்கிறார். சீட்டுக்கட்டா அது? இப்படித்தான் நிறையப் பேர்கள் சொல்கிறார்கள். அப்படியான பிம்பம் உருவாவதைதான் எதிர்கட்சியினரும் கூட விரும்புகிறார்கள். 'அவரளவுக்கு இவர் இல்லை' என்பதான பிம்பம். இதையே மக்களையும் நம்ப வைக்க சில ஊடகங்கள் படாதபாடு படுகின்றன.
ஸ்டாலின் மீது அதிகப்படியான அழுத்தம் உருவாக்கப்படுகிறது. அவர் இருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு அழுத்தத்தில் பதறித்தான் போவார்கள். மத்தியில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. அவர்கள் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சி வேண்டும் என விரும்புகிறார்கள். மத்திய அரசின் உதவியில்லாமல் ஆட்சியைக் கலைப்பதற்கு எந்த சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கூவாத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது வேண்டுமானால் ஸ்டாலின் பாஜகவுடன் பேரம் பேசி எதையாவது செய்திருக்கலாம். ஒருவேளை அந்தத் தவறை அவர் செய்திருந்தால் இப்பொழுது அவருக்கு அது மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும்.
கடந்த ஒரு வருடத்தில் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எடப்பாடியின் அரசு மீது வெறுப்பு உண்டாகியிருக்கிறது. அதனால்தான் 'இந்த ஆட்சியை இவர் ஏன் விட்டு வைத்திருக்கிறார்' என்று யோசிக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புதான் 'கருணாநிதி இருந்திருந்தால் விட்டு வைத்திருக்க மாட்டார்' என்கிற பேச்சாக மாறுகிறது. அவராகவே இருந்திருந்தாலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் ஆட்சியை கலைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.
இப்போதைக்கு ஸ்டாலினுக்கு முன்பாக சில வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒன்று:
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி அரசை தோல்வியடையச் செய்வது. சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு எம்.எல்.ஏக்கள் குறித்தான தீர்ப்பு இதனைச் செய்யவிடாமல் இழுத்தடிக்கிறது. தீர்ப்புகள் குறித்தான பின்னணிக் காரணங்களைத் தனியாக அலச வேண்டியதில்லை. அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான்.
இரண்டு:
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா- இது எந்த விதத்திலும் அதிமுக அரசை பாதிக்காது. ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு திமுகவின் தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும். திமுக போட்டியிட்டு, செலவு செய்து, இதே எண்ணிக்கையில் மீண்டும் வென்று வந்தாலும் இதே அரசுதான் தொடரும். ஒருவேளை சில தொகுதிகளில் அதிமுக அரசு வெற்றி பெறுமானால் இப்போதைய மைனாரிட்டி அரசானது தன்னை மெஜாரிட்டி அரசாக மாற்றிக் கொண்டு தனது ஆட்சியைத் தொடரும். எனவே எனவே கூண்டோடு ராஜினாமா என்பது முட்டாள்தனமான முடிவாக அமையும்.
மூன்று:
சட்டப்பேரவையிலும் மாநிலத்திலும் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை கலைப்பதற்கான முகாந்திரங்களை உண்டாக்குவது. இத்தகைய செயலை ஸ்டாலின் செய்வார் என்று தோன்றவில்லை.
இன்றைய சூழலில் எடப்பாடி அரசும் மத்திய பாஜக அரசும் இறுக்கமாக பிணைந்திருக்கின்றன. மத்திய அரசின் முழுமையான ஆசி இருக்கும் வரைக்கும் இந்த ஆட்சி தொடரும். அதையும் மீறி இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டுமானால் ஸ்டாலினுக்கு முன்பாக வேறு சில சாத்தியங்கள் இருக்கின்றன.
1) தினகரனுடன் கூட்டு சேர்ந்து சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கலாம். 'ஒரு முறை நான் முதல்வராகிக் கொள்கிறேன். அடுத்த முறை நீங்கள் முதல்வர் ஆகுங்கள்' என்று பேரம் பேசலாம்.
(அல்லது)
2) பாஜகவுடன் நேரடியான அல்லது மறைமுக கூட்டணிக்கு காய் நகர்த்தலாம். தமிழக அரசை கலைத்தால் பா.ஜ.வுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று சிக்னல் கொடுக்கலாம். எடப்பாடியை விடவும் ஸ்டாலினின் ஆதரவு பாஜகவுக்கு சாதகமானதுதான். அவர்கள் ஒத்துக் கொள்ளக் கூடும்.
மேற்சொன்ன இரண்டில் எதுவுமே முறையற்ற செயல்கள்தான். இதைத்தாண்டி வேறு சாத்தியங்கள் எதுவும் இருக்கின்றனவா என்ன? எனக்குத் தெரியவில்லை.
அரசியல் ரீதியாக 'முறையான' எதிர்ப்பு அரசியலைச் செய்கிற அரசியல்வாதியாக மட்டுமே ஸ்டாலின் இருக்க வேண்டும் என உள்மனம் விரும்புகிறது. அவரும் அப்படிதான் இருக்கிறார்.
அரசியலில் ஹீரோயிசம் என்பதைவிடவும் இத்தகைய மேம்பட்ட போக்குதான் அவசியமும் கூட. 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரைக்கும் ஸ்டாலின் இப்படியே தொடர்வதுதான் சரி. மக்கள் தீர்ப்பு பா.ஜ.கவுக்கு எதிராக வருமானால் எடப்பாடியின் அரசு தானாக கவிழும். ஒருவேளை மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்குமானால் மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
'ஆட்சியைக் கவிழுங்கள்' என்று கேட்பது எளிது. ஆனால் அது அவசியமில்லை. இப்போதைக்கு ஸ்டாலின் செய்யும் அரசியல்தான் சரி. சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளை பேசவே விடுவதில்லை. ஆனால் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. தமிழகத்தில் உருவாகும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராக குரல் எழுப்புகிறார். போராட்டங்களை நடத்துகிறார். ஆனால் என்ன கொடுமையென்றால் தமிழகத்தில் தினசரி ஒரு பிரச்சினை முளைத்துக் கொண்டே இருக்கிறது.
வெறுமனே அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்துவிடலாம் என்று மாநில அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்கட்சிகளாவது முறையான செயல்களில் ஈடுபடட்டும். இல்லையென்றால் மக்களுக்கு வெறுத்துப் போய்விடும்.
'தொண்ணூறு எம்.எல்.ஏக்கள் நம் கைவசமிருக்கிறார்கள். எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்' என்று கசமுசா வேலைகளில் ஸ்டாலின் இறங்காதிருப்பது பெரிய ஆசுவாசம். அப்படியான செயல்களில் இறங்கி தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தினால் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்காவது ஆளாளுக்கு மாற்றி மாற்றி கோல்மால்களைச் செய்யத் தொடங்குவார்கள். ஸ்டாலின் எந்தவிதமான கீழ்நிலை அரசியலையும் செய்யாமல் இருப்பதை பாராட்டவே மனம் விரும்புகிறது. அது மிகப்பெரிய ஆசுவாசம். இந்த பக்குவத் தன்மைதான் அவருடைய பலமாகவும் இருக்கிறது.
#shared

கருத்துகள் இல்லை: