சனி, 30 ஜூன், 2018

நாமக்கல் கந்துவட்டி டி.எஸ்.பி.ஈஸ்வரமூர்த்தியை கைது செய்யாமல் விட்ட எடப்பாடி கமிஷன் முதல்வர் .. ரூ.1.60 கோடி கந்துவட்டி கும்பல்

ராசிபுரம் தொழில் அதிபரிடம் ரூ.1.60 கோடி கந்துவட்டி கேட்ட டி.எஸ்.பி. அதிரடி மாற்றம்மாலைமலர் : கந்துவட்டி புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டி.எஸ்.பி.யாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. இவர்மீது ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த ஆண்டு கந்துவட்டி புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-
; ராசிபுரத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஈஸ்வரமூர்த்தியை 10 வருடங்களாக தெரியும். நான் கடந்த 25-12-2014 அன்று எனது நிறுவனத்தின் தொழில் அபிவிருத்திக்காக டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தியை அணுகி ரூ.3 லட்சம் கடன் கேட்டேன். அவர் அவரது மனைவி சுமதிக்கு போன் செய்து எனக்கு கடனாக ரூ.3 லட்சம் கொடுக்கும்படி கூறினார். நான் சுமதியிடம் கடனாக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டேன். அதற்கு ஈடாக கையொப்பம் மட்டும் இட்ட தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் இரண்டையும், கையொப்பம், கைரேகை மட்டும் பூர்த்தி செய்த தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத புரோ நோட் இரண்டிணையும் கொடுத்தேன். கடனுக்கு மாதந்தோறும் ரூ.100-க்கு ரூ.5 வீதம் வட்டி தர வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.3 லட்சம் கடன் தொகைக்கு 3 மாதங்கள் முறையாக வட்டி செலுத்தினேன். அப்போது ஈஸ்வர மூர்த்தி, அவரது மனைவி சுமதி, அவர்களது மகன் ரஞ்சி ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி என்னிடம் தொழிலுக்கு பணம் தேவைப்பட்டால் மேலும் ரூ.10 லட்சம் வேண்டுமானால் வாங்கிக் கொள் என்று கூறினார்கள்.
நானும் பணத்தை கடனாக வாங்கினேன். கடன் தொகை ரூ.13 லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் கொடுத்து வந்தேன்.


கடந்த 2015-ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதனால் என்னால் வட்டி செலுத்த இயலவில்லை.

டி.எஸ்.பி.ஈஸ்வர மூர்த்தியும் அவரது மனைவி சுமதியும் எனக்கு போன் செய்து வீட்டிற்கு கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டுக்கு சென்றதும் சுமதி என் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். ரஞ்சித் என் வயிற்றில் காலால் எட்டி உதைத்ததோடு, அடித்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்.

நான் அவகாசம் கொடுங்கள் என்று காலைப்பிடித்து கெஞ்சினேன். அவர்கள் வீட்டில் இருந்த தூணில் என்னை நிற்க வைத்து கயிற்றில் கட்டிவிட்டார்கள்.

எனக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ கொடுக்கவில்லை. இரவு நான் மயக்கம் அடையவே கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுத்தனர். 3 மாதத்திற்கு வட்டி செலுத்தாததால் மாதம் ரூ.5 லட்சம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.15 லட்சம் அபராத வட்டியாக தர வேண்டும். போன் செய்தபோது எடுக்க தவறிய குற்றத்திற்காக அபராதமாக ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கூறினார்கள்.

மொத்தம் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டதோடு, ரூ.30 லட்சத்திற்கும் அன்றைய தேதியிலிருந்து ரூ.100-க்கு வட்டி வீதம் ரூ.10 என தர வேண்டும் என்றனர். எனது காரில் இருந்த உறவினர் குட்டலாடம்பட்டி மாணிக்கத்தின் விவசாய நிலத்தின் அசல் பத்திரத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.

மாதம் தோறும் வட்டியாக ரூ.3 லட்சம் கட்டி வந்தேன். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் சமயம் என்பதால் 15 நாட்கள் தள்ளி வட்டி செலுத்தினேன். அதற்கு அபராதமாக ரூ.5 லட்சம் என்று கூறி அன்றைய தேதியில் இருந்து அசல் ரூ. 35 லட்சம் என்றும் அதற்கு ஒவ்வொரு மாதம் வட்டி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் என்று கூறி விட்டனர்.

நானும் மாதம் தோறும் கடனுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து வந்தேன். கடந்த 10.9.2016-ம் தேதி அவர்கள் வீட்டில் கட்டி கொண்டிருந்த விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் தந்தாக வேண்டும் என்று மிரட்டி வாங்கிக் கொண்டார்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 27 பட்டு சேலைகளும் வாங்கி கொண்டனர்.

தொழிலில் எனக்கு மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2017-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மாத வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் சுமதியும் அவரது மகன் ரஞ்சித்தும் என்னை போனில் கேவலமாக திட்டி அசிங்கப்படுத்தினார்கள். அடியாட்களை எனது வீட்டிற்கு அனுப்பி மிரட்டி வந்தார்கள்.

என்னை டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி போனில் தொடர்பு கொண்டார். அவர் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு செல்வதாகவும், அதற்கு ஆகும் செலவு ரூ. 3 லட்சத்தையும் கொடுத்தால் வட்டி செலுத்த கால தாமதம் தருவதாகவும் கூறி என்னிடம் ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டார்.

தொடர்ந்து என்னால் 6 மாதங்கள் வட்டி கட்ட முடியவில்லை. டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி, சுமதி, ரஞ்சித் ஆகியோர் அசல் மற்றும் வட்டி சேர்த்து நான் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். இதனால் என்னால் தொழில் செய்ய முடியவில்லை. 3 பேரும் தொடர்ந்து போனிலும், அடியாட்களை அனுப்பியும், கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

எந்த நேரத்திலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எனக்கு பயமாக உள்ளது. நான் வாங்கிய கடன் ரூ.13 லட்சத்திற்கு இதுவரை ரூ.81 லட்சத்து 45 ஆயிரம் வரை கட்டியுள்ளேன்.

ரூ.2 லட்சத்துக்கு பட்டு புடவைகள் கொடுத்துள்ளேன். இன்னும் நான் ரூ. 1 கோடியே 60 லட்சம் கொடுக்க வேண்டும் என கந்து வட்டி கொடுமை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு பாஸ்கரன் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பாஸ்கரன் ராசிபுரம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுமதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஜயராகவன் ராசிபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

கந்துவட்டி புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: