மைதிலி- பிரவீன் - மீனாட்சி - தர்மலிங்கம் |
சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40) இவர்கள் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்தனர். மீனாட்சியின் தங்கை மைதிலி (37) இவருக்கும் பிரவீன் (45) என்பவருக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. பிரவீன் கோவையில் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். வருமானத்திற்குப் பஞ்சமில்லை, வசதியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி தர்மலிங்கம் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஐந்து நாட்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை ரிப்போர்ட்டில் தொண்டை, குடல் மற்றும் உள் உறுப்புகள் ஏதோ ஒரு திரவத்தால் தீய்ந்து போயுள்ளது என்று ரிப்போர்ட் கொடுக்க தர்மலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் உறவினர்களும் அலட்சியமாக இருந்துவிட்டனர்.
தர்மலிங்கத்தின் ஈமச்சடங்கு முடிந்த அந்த துக்கத்தில் இருக்கும்போதே அவரது மனைவி மீனாட்சி மூன்று நாட்கள் கழித்து திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2017 ஜனவரி 12 அன்று உயிரிழந்தார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மீனாட்சியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
துணை ஆணையர் புகாரின் பேரில் மீனாட்சியின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது தெரிந்துள்ளது. இதையடுத்து மீனாட்சியின் கணவரும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து போலீஸார் இருவரின் உயிரிழப்பு குறித்து உறவினர்கள், நண்பர்கள், பூக்கடை ஊழியர்கள் என பலரிடமும் விசாரித்து வந்தனர். ஆனால் ஒரு துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் தர்மலிங்கம், மீனாட்சி இருவரின் வங்கிக்கணக்கிலிருந்து சிறிது சிறிதாக ரூ.17 லட்சம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சந்தேகமடைந்த போலீஸார் வங்கியில் அவர்கள் எடுத்த தேதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வாங்கி சோதித்தபோது அவர்களுக்கு முக்கியமான துப்பு சிக்கியது. அதில் இறந்து போன மீனாட்சியின் தங்கை மைதிலியும், அவருடன் ஒரு இளைஞரும் அடிக்கடி வந்து பணம் எடுப்பதும் சில நேரம் அந்த இளைஞர் மட்டும் பணம் எடுப்பதும் தெரியவந்தது.
அந்த ஆண் நபர் யார் என போலீஸார் தர்மலிங்கத்தின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் ரகசியமாக விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(29) என்பது தெரியவந்தது. உடனடியாக பாலமுருகனை தங்கள் விசாரணையின் கீழ் போலீஸார் கொண்டுவர அனைத்து உண்மைகளையும் கொட்டிவிட்டார்.
அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், 'சினிமாவில் கூட இப்படி காட்சி இல்லையே' என்று வியந்துள்ளனர். பாலமுருகன் வாக்குமூலத்தில் சொன்ன சம்பவங்கள் அதிர்ச்சிகரமானவை. மீனாட்சியின் தங்கை மைதிலிக்கு திருமணமாகி கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகனும், பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் கோவையில் சொந்தமாக தொழில் செய்வதால் பத்து நாளைக்கு ஒருதடவை சென்னை வருவதுண்டு.
மகளையும் கோவையில் தன்னுடனே படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகனுடன் மைதிலிக்குப் பழக்கம் ஏற்பட நாளடைவில் அது தவறான தொடர்பாக மாறியுள்ளது. சமூகத்தில் அந்தஸ்துள்ள குடும்பம் என்பதை மறந்து இருவரும் தங்கள் தொடர்பைத் தொடர நாளடைவில் அரசல் புரசலாக மைதிலியின் அக்கா மீனாட்சிக்கு தெரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி இதுகுறித்து தன் கணவரிடம் கூற இருவரும் மைதிலியை அழைத்துக் கண்டித்துள்ளனர். 'உன் கணவர் உன் மேல் உள்ள நம்பிக்கையில் தான் கோவையில் பணம் சம்பாதிக்கச் சென்றுள்ளார். இங்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் வாழும் அவருக்கு துரோகம் செய்யலாமா? வயது வந்த இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கவுரவமாக நடந்துகொள் இல்லாவிட்டால் உன் கணவரிடம் சொல்லி விடுவோம்' என்று கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மைதிலி இதுகுறித்து பாலமுருகனிடம் கூறியுள்ளார். பாலமுருகனும், மைதிலியும் தங்களது கூடா நட்புக்குத் தடையாக இருக்கும் மீனாட்சியையும், அவரது கணவரையும் கொன்று விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்காக பாலமுருகன் திட்டம் போட்டுள்ளார். இருவருக்கும் மெல்லக்கொல்லும் விஷத்தை கொடுத்து வந்தால் நாளடைவில் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விடுவார்கள் நம் மீது சந்தேகம் வராது என்று கூறியுள்ளார்.
அதன்படி ஏற்கெனவே தர்மலிங்கத்துக்கு பழக்கமாகி இருந்த பாலமுருகன் அவருடன் சேர்ந்து அவ்வப்போது மது அருந்தியுள்ளார். அப்போதெல்லாம் மெல்லக்கொல்லும் விஷத்தை மதுவில் கலந்து கொடுத்துள்ளார். இதே போல் மனம் திருந்தி விட்டதாக அக்காவிடம் கூறிய மைதிலி அக்கா மீனாட்சி உண்ணும் உணவில் சிறுக சிறுக மெல்லக்கொல்லும் விஷத்தை கலந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.
தங்கள் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். இதில் செக் புத்தகம் எப்படி என்று கேட்டபோது, பாலமுருகன் கூறியது போலீஸாரை திடுக்கிட வைத்துள்ளது. உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட சமயம் மருத்துவ செலவுக்காக வேண்டும் என்று தர்மலிங்கம், மீனாட்சி இருவரிடமும் பல செக் தாள்களில் மைதிலி கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்.
அவர்கள் இறந்தவுடன் நானும் மைதிலியும் அவ்வப்போது அதில் தொகைகளை நிரப்பி சிறிது சிறிதாகப் பணத்தை எடுத்தோம் என்று கூறியுள்ளார். எவ்வளவு பணம் எடுத்தீர்கள் என்று கேட்டபோது ரூ.17 லட்சம் எடுத்ததாகக் கூறியுள்ளனர். உங்கள் தொடர்பு கோவையில் உள்ள மைதிலியின் கணவர் பிரவீனுக்கு தெரியுமா என்று போலீஸார் கேட்டுள்ளனர்.
அவருக்கும் அரசல் புரசலாகத் தெரிந்து சந்தேகப்பட ஆரம்பித்தார். ஒன்றரை ஆண்டுகளாக இருவர் மரணத்திலும் துப்பு துலக்க முடியாத போலீஸார் மேலும் ஒரு கொலை செய்தால் கண்டுபிடிக்கவா போகிறார்கள் என்று, மைதிலியின் கணவரையும் அதே பாணியில் கொன்று பின்னர் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்தான் நீங்கள் பிடித்துவிட்டீர்கள் என்று பாலமுருகன் கூறியுள்ளார்.
பாலமுருகன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மைதிலியை கைது செய்த போலீஸார் அவரிடமும் வாக்குமூலம் பெற்றனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ரூ.3 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். தவறான தொடர்புக்காக தனது உடன் பிறந்த அக்காவையும் அவரது கணவரையும் கொலை செய்தது மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக