செவ்வாய், 17 ஜனவரி, 2017

பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் .ஸ்டாலின்

மத்திய விலங்குகள் நலவாரியத்தை கலைத்து, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்குவதுடன், பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் திரண்டதுடன், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்குத் தங்கள் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


‘ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வோம்’, என்று வாக்குறுதி அளித்த மத்திய பா.ஜ.க அரசின் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய இயலாமையை ஏற்று, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, ’ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை’ என்பதைத் தெரிவித்து விட்டார். ’இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்’ என உறுதியளித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசோ, தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காகக் குழுமிய இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவி, கண்மூடித்தனமானத் தடியடித் தாக்குதலை நடத்தி, தமிழகத்தில் நடப்பது ’போலிஸ்ராஜ்’ என்பதை நிரூபித்துள்ளது. அதன் உச்சகட்டமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை இன்று (16.1-17) தனித்தீவாக்கி கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளதற்கு தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழர் கலாச்சாரப் பெருமைமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை இன்றைய காலத்திற்கேற்ப உத்வேகத்துடனும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்பதில் தி.மு.கழகம் உறுதியாக இருக்கிறது. கழக ஆட்சியின்போது, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுகு ஏற்ப, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காக சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, உரிய முறையில் போட்டிகள் நடைபெற்றன என்பதை இந்த நேரத்தில் மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அலங்காநல்லூரில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் இதனை விளக்கி வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய - மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும். அப்போது தான், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் ’விலங்குகளை வதை செய்பவையல்ல’ என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதை உணர முடியும். நாட்டு மாடுகளை வளர்க்கவும், பெருக்கவும் வாழ்வியல் முறையிலான அமைப்பு முறையே ஜல்லிக்கட்டு என்பதை உணர்த்தக் கூடியவர்கள் இந்த வாரியத்தில் இடம் பெற வேண்டும். இதன் அடிப்படையில், உரிய பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளத்தைக் காட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற முடியும்.

இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உடனடியாக செயல்படுவதுடன், தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா எனும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் பண்பாட்டுக்கூறுகளையும், அவற்றின் தொன்மை அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கடைசியில் அதனைத் தகர்க்கும் போக்கினை மத்திய – மாநில அரசுகள் இனியும் கடைப்பிடிக்காமல், உச்சநீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு இனியேனும் அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக தீரத்தோடும், உறுதியோடும் போராடி வரும் இளைஞர்கள் தங்களுடைய பண்பாட்டுப் பாதுகாப்புப் போரில் வெற்றி பெறும் நாள் விரைந்து வரும் என நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். tamilthehindu

கருத்துகள் இல்லை: