சனி, 21 ஜனவரி, 2017

தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு? தற்காலிக அனுமதி?

தமிழகத்தில், நாளை ஜல்லிக்கட்டு நடத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தடையை நீக்கி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனக்கோரி, தமிழகம் முழுவதும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அகிம்சை வழியில் போராடி வருகின்றனர்.< 'அலங்காநல்லுாரில் வாடிவாசல் திறந்து, ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என, அவர்கள் அறிவித்துள்ளனர்./>எனவே, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் பன்னீர்செல்வம்
மேற்கொண்டு உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளை, அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதை, முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்க வாய்ப்பு உள்ளது.

'அவசர சட்டம் பிறப்பிக்க, ஒரு நாள் தாமதமானால், ஜல்லிக்கட்டு நாள் தள்ளிப் போகலாம்' என, அதிகாரிகள் கூறினர்.
நேரில் பார்க்க கட்ஜூ ஆர்வம்

'தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்; அதை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், மார்கண்டேய கட்ஜூ. பணி ஓய்விற்குப் பின் டில்லியில் வசிக்கிறார். பல பிரச்னைகளில், தன் கருத்துக்களை, முகநுாலில், துணிச்சலாக எடுத்து வைப்பவர். ஜல்லிக்கட்டு நடத்த, இவர் பல காலமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். தற்போது, தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு பின், ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்புகள் வந்துள்ளன. அதை சுட்டிக்காட்டிய, மார்கண்டேய கட்ஜூ, தன் முகநுாலில் வெளியிட்ட பதிவில், 'அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு விரைவில் நடக்கும். அப்போது, தமிழகம் வந்து, ஜல்லிக்கட்டை பார்க்க விரும்புகிறேன்' என, தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: