வெள்ளி, 20 ஜனவரி, 2017

தமிழகமெங்கும் ஜல்லிகட்டு முழக்கம்! அரசியல்வாதிகளை மிரள வைத்து ஆட்சியாளர்களை நடுங்க வைத்து ...


மின்னம்பலம் :ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி கைவிரித்து விட்ட நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் இன்னும் தமிழகம் திரும்பவில்லை. ஆனால் மோடியின் அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ட்விட்டர் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழகத்தில் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.  
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் மட்டுமல்லாது, தமிழகத்திற்குள்ளேயே ஓடும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
தஞ்சாவூர்
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று 3-வது நாளாக மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, தஞ்சை மருத்துவக்கல்லுரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள்வகுப்புகளை புறக்கணித்து விட்டு பங்கேற்றனர். இவர்கள் அனைவரும், தஞ்சை ரயில் நிலையத்துக்குள் சென்று ரயில் மறியல் போராட்டம்நடத்தினர். இதனால் அந்த பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால் போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.
தஞ்சை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வக்கீல்களும் நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரத்தநாடுபாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிர் கல்லூரி முன் அக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாப்பாநாட்டிலும் 50-க்கும்அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடமான அலங்காநல்லூரில் மக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலங்காநல்லூர் கிராமத்தில் தற்போதைய நிலைமையை விவரிக்கிறார் வளர்மதி “ நூற்றுக்கணக்கான காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்குள் பொதுமக்கள் யாரையும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வாடிவாசல் அருகில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட்டாவை தடை செய்யவேண்டும் என்பதே இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் முக்கிய கோஷங்களாக உள்ளது. இந்த போராட்டத்தில் குறிப்பாக 8 வயது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 5 ஆயிரத்திருக்கும் மேலாக குவிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு போன்றவைகளை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களே கவனித்து கொள்வதாக தெரிவித்தனர். தங்களுக்கு தேவையானது ஜல்லிக்கட்டு மட்டுமே. அதை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜல்லிக்கட்டு அறிவிப்பு வரும்வரை போராட்டம் முடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அலங்காநல்லூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இரவு நேரங்களில் அலங்காநல்லூர் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் டார்ச், மெழுகுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தி இரவிலும் தங்களது போராட்டங்களை தொடர்கின்றனர்.
மதுரை

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் இன்று மதியம் பேரணியாக புறப்பட்டு மதுரை ரயில்நிலையத்தை அடைந்தனர். அங்கு ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டம் செய்தனர். அதையடுத்து,செகந்திராபாத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலை மதுரைக்கு வெளியே வைகை ஆற்றுப்பாலத்தின் மேல் நிறுத்தினர். அது போல கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலை கூடல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், மதுரை செல்லூரில் ஓடும் விரைவு ரயிலை நிறுத்த போராட்ட மாணவர்கள் விரைந்தனர். அதைக்கண்ட ரயில் இஞ்சின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து ஏற்படவிருந்தது தவிர்க்கப்பட்டது.
மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தைதொடங்கினார். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து சீமான் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக நாளை (20-ந் தேதி) வரை மதுரையில் தங்கி இருந்து போராடுவேன். மத்திய- மாநிலஅரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவேன் என்றார்.
போலீசார் எச்சரிக்கை
மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த போலீசார் தடை வித்தித்துள்ளனர். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறைஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து வரும் நிலையில் போராட்டத்தை நசுக்க காவல்துறையும், அரசும் முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்.
சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய சாலையிலேயேபடுத்து தூங்கினர். இன்று 2-வது நாளாக நீடித்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.அதையடுத்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் சேலம் ரயில் நிலையத்திற்குள் சென்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.அப்போது, ரயில் நிலையத்திற்குள் நின்று கொண்டிருந்த பெங்களுரூ ரயில்மீது மாணவர்கள் ஏறியபோது லோகேஷ் என்ற 17 வயது மாணவன் உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராமல் மோதி தூக்கிவீசப்பட்டார். 65% தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். ஆனாலும் ரயிலை விட்டு மாணவர்கள் இறங்க மறுத்து ரயிலை பிடித்து வைத்துள்ளார்கள். அதன் காரணமாக சேலம் ரயில் நிலையம் மூடப்பட்டது. அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதட்டம் நிலவுகிறது.
சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 3-வது நாளாக இன்று போராட்டம் தீவிரமானது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் வருகிற 22-ஆம் தேதி வரை விடுமுறை என்றுஅறிவித்தது. இருப்பினும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல்விடிய விடிய போராட்டம் நீடித்தது.
கோவை

கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மைதானத்திலேயே அமர்ந்து ஜல்லிக்கட்டுக்குஆதரவாக கோ‌ஷமிட்டனர்.
இன்று 3- வது நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இன்று காலையிலேயே மைதானத்தில் திரண்ட ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பாடல்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தபகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கோவையில் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து ஆட்டோ தொழிற் சங்கம் நாளை ஆட்டோக்கள்ஓடாது என அறிவித்துள்ளது. அதேபோல் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள பெரியார் திடலில் வரலாறு காணாத வகையில்பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.
. கோவையில் உள்ள நிகழ்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் தமிழ் மறை, “மாணவர்கள் அனைவரும் மிகவும் தன்னெழுச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர். தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். கோவையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மாணவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களுக்கு கல்லூரி நிர்வாகம் விடுமுறை எதுவும் வழங்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாக தெரிவித்தனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து தங்களது பிள்ளைகளை நாளை முதல் வகுப்புக்கு வருமாறு தகவல் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளனர். 4௦௦ மாணவர்கள் போராடிவந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் கண்டிப்பால் இன்று போராடும் மாணவர்களின் எண்ணிக்கை 1௦௦ ஆக குறைந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் தங்களை அச்சுறுத்தினாலும் தாங்கள் இந்த போராட்டத்தை கைவிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதேபோல கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்டம் முழுவதும் போராடி வருகின்றனர்.
ஈரோடு

ஈரோட்டில் இன்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. வ.உ.சி திடலில் குவிந்த மாணவிகளை மாணவர்கள் இரவில் வீட்டுக்குஅனுப்பி வைத்தனர். ஆனால், இன்று கல்லூரிகளை புறக்கணித்து திரண்ட மாணவர்கள் வ.உ.சி. திடலிலேயே கொட்டும் பனியில் விடிய-விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திசையன்விளை
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம்திசையன்விளையில் மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரி, கொம்மடிகோட்டை சங்கரபகவதி கல்லூரி மாணவர்கள் இணைந்துதிசையன்விளைநேருஜி கலையரங்கம் முன்பு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தப்பட்டது. இரவு விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 3-வதுநாளாக நீடித்தது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பீர்க்கன்கரணை
பீர்க்கன்கரணை பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சுமார் 300 பேர் போராட்டம் நடத்தினர். தாம்பரம் சானட்டோரியம்ஜி.எஸ்.டி. சாலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குதாம்பரம் பூண்டி பஜார் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலையூரை அடுத்த அகரம் தென்சாலை, சிட்லபாக்கம் ஆர்.பி.சாலை,முடிச்சூர் லட்சுமிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை
பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். அனகாபுத்தூர் பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடுவில் இன்று காலை மகளிர் சுய உதவி குழுக்களைசேர்ந்த பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க முடியாது என மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம்கொந்தளித்து நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: