வியாழன், 19 ஜனவரி, 2017

தமிழகம் ஸ்தம்பித்தது தமிழ்த்தலைகள் எல்லாம் ஓரணியில் ! சாது மிரண்டால் ....

சிங்கத்தை தூக்கி மிதித்தி புலிப்படையடா நாங்கள்சென்னை: ஊர் உலகமே உன்னை உற்றுப்பார்க்க வேண்டும் என்பார்கள். இன்று ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் மொத்தமாக திருப்பி வருகிறது தமிழ்நாட்டு இளைஞர் படை, பெண்கள் படை. தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றில் இது மாபெரும் தருணமாக, பெருமை மிகு போராட்டமாக பதிவாகியுள்ளது.
இது எங்க ஏரியா உள்ளே வராதே.. இதுதான் போராட்டக் களத்தில் இருக்கும் புரட்சி நாயகர்கள் அரசியல்வாதிகளுக்கும், பிறருக்கும் தரும் ஒரே பதிலாக இருக்கிறது. எங்க பிரச்சினையை இதுவரை தீர்க்காத நீங்க எங்களுக்கு வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பதே இதற்கு அர்த்தமாகும். இதுவரை தமிழ் கூறும் நல்லுலகம் காணாத வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாட்கள் இவை. தமிழர்களின் பொற்காலமாக இது மாறியிருப்பதுதான் வியப்பின் உச்சமாகும். ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் திரண்டு நிற்பதை நாடே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்காரர்கள் முட்டாள்கள், எதற்குமே ஒன்று சேர மாட்டார்கள், சினிமா அடிமைகள், வாய்ச் சொல் வீரர்கள், பழம் பெருமை பேசியே வீணாய்ப் போனவர்கள் என்று கூறி வந்த அத்தனை வாய்களும் இன்று அடைத்துப் போய்க் கிடக்கின்றன. ஏன் தமிழக அரசியல்வாதிகளையே ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி விட்டு பூரித்து ஆர்ப்பரித்து தனது கலாச்சாரத்தைக் காக்க ஆரவாரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.< கடற்கரையில் தமிழ் தலைகள்< இன்று போராட்டக் களத்தில் புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர் படை தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்து விட்டது.
வரலாறு இவர்களை என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கு வியாபித்து விஸ்வரூபம் காட்டி அதிரடித்துக் கொண்டிருக்கிறது இந்த இளைஞர் படை.

சிங்கத்தை தூக்கி மிதித்தி புலிப்படையடா நாங்கள்

சிங்கத்தை அடக்கு என்று சவால் விட்ட நீதிபதிக்கு நேற்று மதுரையில் இயக்குநர் கெளதமன் இப்படிப் பதில் கொடுத்தார்.. சிங்களன் என்ற சிங்கத்தை தூக்கி மிதித்து விரட்டியடித்த புலிப்படையடா நாங்கள் என்று. உண்மைதான், ஒவ்வொரு தமிழனும், புலியாக, சிங்கமாக, காளையாக சீறிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு ஊரிலும்.

ஒரு கலவரம் இல்லை.. பிரச்சினை இல்லை

எந்த இடத்திலும் போராட்டம் நடத்தி வருவோரால் பிரச்சினை இல்லை. ஒரு பஸ் கண்ணாடி கூட உடைக்கப்படவில்லை. பஸ்கள் தாக்கப்படவில்லை. எங்கும் பிரச்சினை இல்லை. எத்தனை ஆச்சரியமான செய்தி இது. பஸ்களைக் கொளுத்தியும், மாணவிகளை உயிருடன் தீவைத்தும், எப்போது பார்த்தாலும் வன்முறை தீவைப்பு பஸ் உடைப்பு அடிதடி ரத்தக்களறி என்று மட்டுமே பார்த்து வந்த தமிழகத்தை தங்கள் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார்கள் தமிழ்ப் பிள்ளைகள்.

பொறுப்பு என்றால் இதுதான்

பொறுப்பில்லாமல் சுற்றுபவர்கள், எப்பப் பாரு ஊர் சுற்றுவதே வேலை. வாட்ஸ் ஆப், பேஸ்புக், செல்போன், சினிமா, பீட்ஸா, பர்கர், சினிமா.. இதுதான் தமிழக இளைஞர்கள் குறித்த பொதுவான பார்வையாக இருந்தது. அப்படியே அதைத் தூக்கி துடைத்துப் போட்டு எப்பூடி என்று கேட்க வைத்து பாகுபலி பிரபாஸ் போல நெடிதுயர்ந்து நிற்கிறார்கள் தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும்.

பிரமிக்க வைத்த பெண்கள்

இளைஞர்கள் கூட்டத்திற்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று சவால் விடும் வகையில் இல்லத்தரசிகளும் வரிந்து கட்டிக்கொண்டு வாடி வாசல் முன்பும், ஒவ்வொரு போராட்டக் களத்திலும் அசர வைத்து வருகிறார்கள். கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளுடன் பல தாய்மார்களைப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.. இந்த பிள்ளைகள் போராடுவதைப் பார்த்தபோது புருஷனாவது, பிள்ளையாவது என்று விட்டு விட்டு இங்கு வந்து உட்கார்ந்து விட்டேன் என்கிறார். என்னவென்று சொல்வது இதை!

சங்க கால வீரப் பரம்பரை

தமிழர்கள் ஒரே நாளில் சங்க காலத்திற்குப் போய் விட்டனரா என்று கேட்கும் வகையில் அயர்ந்து போகும் வகையில் வீரம் மிக்க போராட்டத்தை ஜஸ்ட் லைக் தட் ஆரம்பித்து விட்ட அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்து காளைகளும், கன்னிகளும், பெண்களும் மற்றவர்களும்.

வரலாறு காணாத வீராவேசம்

நமது வரலாற்றில் படிக்க மட்டுமே செய்த வீராவேசத்தை இன்று நம் முன் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழகத்து சிங்கப்படை. இது டெல்லி செங்கோட்டையையும் தகர்க்கும்.. காரணம் வங்கத்தையே நடுங்க வைத்த எங்க படை என்று பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது தங்கத் தமிழகம்.

நாங்க இருக்கோம்

உலகத தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. மிகப் பெரிய நம்பிக்கையை இந்த இளைஞர் கூட்டம் ஒவ்வொரு தமிழ்நாட்டவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனி ஒவ்வொரு பிரச்சினையையும் நாங்க தீர்த்து வைக்கிறோம் கவலைப்படாதீர்கள்.. ஒரு கை பார்த்து விடலாம் என்று தமிழ் மக்களுக்கு இந்த இளம் படை தைரியம் கொடுப்பதாக இந்த எழுச்சி மிக்க புரட்சி அமைந்துள்ளது.
பெருமையுடன் இந்த இளம் படைக்கு உறுதுணையாக இருப்போம்

கருத்துகள் இல்லை: