புதன், 18 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு! அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி!! விகடன்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு யாரும் எதிர்பாராத வகையில், ஆதரவு பெருகி வரும் நிலையில், சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் தமிழக அமைச்சர்கள் பேச்சு நடத்தினர் இந்தப் பேச்சில், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கும், குடியரசுத்தலைவருக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு விஷயத்தில், முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிகை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், தங்களது போராட்டம் தொடரும் என்றும், தமிழக அரசின் அறிக்கையைப் பொறுத்து, அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே தங்களது போராட்டம் திரும்பப் பெறும் என்றும் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்தோடுதான் தொடங்கியது. ஆனால், தைப்பொங்கல் தினத்தையொட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு எப்படியும் நடைபெறும் என எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பேரிடியாக அமைந்தது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பை, உடனடியாக அறிவிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தமிழக மக்கள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கினால்தான், இப்போட்டிகளை நடத்த முடியவில்லை என்பதால், அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புகழ்பெற்ற அலங்காநல்லூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு, அப்பகுதி மக்களுடன் கைகோர்த்து விடிய விடிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை செவ்வாய்க்கிழமை காலையில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இளைஞர்களும், அலங்காநல்லூர் மக்களும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடித்தது.

ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலை தளங்கள் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரவிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் வெடித்துள்ளது.
அலங்காநல்லூர், திருநெல்வேலி, வேலூர், கடலூர், புதுச்சேரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், சென்னை மெரினாவில் நேற்று மிகப்பெரிய அளவில் பரவி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு அரசியல் தேவையில்லை; எந்தக் கட்சியின் சாயலும் எங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்து வருவதுதான். இளைஞர்கள் இந்த அளவுக்கு திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்காத சில அரசியல் கட்சியினரும் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருந்த தமிழர்களின் எண்ணத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றத்தை உருவாக்கியது. ஒருபுறம் விவசாயம் பொய்த்துப் போய் சோகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்த சோகத்தில் இருந்த மக்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாமல் போனது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில், தமிழக அரசின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் கொண்ட குழுவினர் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், “ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் அரசுக்கும் உடன்பாடு உள்ளது. இதுதொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் தமிழக அரசின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அரசின் சார்பில் வலியுறுத்தப்படும்” என்று அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்தே தங்களது போராட்டம் முடிவுக்கு வரும் என்றும், முதல்வர் ஒ.பி.எஸ் வெளியிடப்பட உள்ள அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதைப் பொறுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெரினாவில் இளைஞர்கள் தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்திய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய-மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வரை இளைஞர்கள் போராட்டம் நீடிக்கும் என்று பலரும் தெரிவித்திருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறையினரும் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். தடியடி நடத்தினாலும் அது வேறுவிதமான சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாகி விடும் என்பதால், போராட்டக்காரர்களைக் கலைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

சென்னை மெரினா, அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள், தமிழக அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிகழ்வும் ஏற்பட்டது
அ.தி.மு.க என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெ. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் வெளிப்படையாக உணர்த்தும் வகையில் உள்ளது.
ஒருவேளை ஜெயலலிதா உயிருடன் இருந்து, செயல்பட்டிருப்பாரேயானால், பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலம் தொடர்பு கொண்டோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்தோ, ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்திருப்பார் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எப்படி இருப்பினும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க-வுக்கும். எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க-வுக்கும், இதர அரசியல் கட்சிகளுக்கும், இளைஞர்களின் இதுபோன்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள் எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. எதிர்காலத்தில், இதனை உணர்ந்து அரசியல் கட்சிகள் செயலாற்ற வேண்டிய தருணம் இது!
– சி.வெங்கட சேது
vikatan.com

கருத்துகள் இல்லை: