வியாழன், 3 மார்ச், 2016

அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி ட்ரம்ப் Trump?....ஜனநாயக கட்சி ஹிலாரி Hillary?

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தலில், 'சூப்பர் செவ்வாய்' எனப்படும், 12 மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில், ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப், தலா ஏழு மாகாணங்களில் வென்று முன்னிலையில் உள்ளனர்.
அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், இந்தாண்டு நவ., 8ல் நடக்க உள்ளது.அதற்கு முன்னதாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில், அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல், மாகாணம் வாரியாக கடந்த மாதம், 1ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.


அதன்படி, சூப்பர் செவ்வாய் எனப்படும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல், 12 மாகாணங்களில், நேற்று முன்தினம் நடந்தது.இதில் குடியரசு கட்சியின் முக்கிய வேட்பாளரான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன், தலா, ஏழு மாகாணங்களில் வென்றனர்.
இதன் மூலம், அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இருவரும், அவர்களுடைய கட்சியில் முன்னிலையில் உள்ளனர்.

குடியரசு கட்சி:குடியரசு கட்சியில், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், டெட் குரூஸ், மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளனர்.நேற்று நடந்த தேர்தலில், அலபாமா, அர்கான்சஸ், ஜார்ஜியா, மசாசூட்டஸ், டென்னசி, வெர்மாண்ட், விர்ஜினியா மாகாணங்களில் டிரம்ப் வென்றார். அலாஸ்கா, ஓக்லஹாமா, டெக்சாஸ் மாகாணங்களில் குரூஸ், மின்னசோடா மாகாணத்தில் ரூபியோ வென்றனர்.

இதுவரை நடந்த மற்ற மாகாணத் தேர்தல்களில் நியூ ஹாம்ஷையர், தெற்கு கரோலினா, நவெடாவில் டிரம்ப்பும், லோவாவில் குரூஸும் வென்றனர். இதுவரை, 10 மாகாணங்களில் வென்று, டிரம்ப் முன்னிலையில் உள்ளார். குரூஸ் நான்கு மாகாணங்களிலும், ரூபியோ ஒரு மாகாணத்திலும் வென்றுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி:ஜனநாயகக் கட்சியில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் போட்டியிடுகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த, 12 மாகாண தேர்தலில், அலபாமா, அர்கான்சஸ், ஜார்ஜியா, மசாசூட்டஸ், டென்னசி, டெக்சாஸ், விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் ஹிலாரி வென்று, அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ளார்.

கொலராடோ, மின்னசோடா, ஓக்லஹாமா, வெர்மாண்ட் மாகாணங்களில், சாண்டர்ஸ் வென்றார்.
இதற்கு முன் நடந்த பிரைமரி தேர்தல்களில், லோவா, நவெடா, தெற்கு கரோலினா ஆகியவற்றில் ஹிலாரியும், நியூ ஹாம்ஷையர் மாகாணத்தில் சாண்டர்ஸும் வென்றனர்.  dinakaran.com

கருத்துகள் இல்லை: