கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர் குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள், அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.அப்போது நாடக உலகுக்கும், பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்தார். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்துவாக மாறினார்.தனது வாழ்நாள் எல்லாம் திமுக பிரசாரகராகவே இருந்தார்.பதவி சுகம் அனுபவித்த பலரும் எங்கெங்கோ ஓடிய பொழுதும் இவர் இறுதிவரை கலைஞரின் தொண்டராகவே இருந்தார்
நடிகர் குமரிமுத்து உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். நகைச்சுவை நடிகர் என தொழில் ரீதியாக அவரை குறிப்பிட்டாலும், சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர் குமரிமுத்து. சினிமாவில்தான் குமரிமுத்து. நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.
ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது அங்க சேஷ்டைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி. அவரது பெயரை குறிப்பிட்டால் நம்மையுமறியாமல் அவரது பாணியிலேயே ஒருமுறை சிரித்துவிடுவோம். அதுதான் குமரிமுத்து.
நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து, சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. அவரது சகோதரர் நம்பிராஜன் அந்நாளில் மேடை மற்றும் சினிமா பிரபலம்தான். பராசக்தியில் பூசாரியாக வருபவர்தான் குமரிமுத்துவின் சகோதரர். இவரது அண்ணியும் பிரபல நடிகையே. தாம்பரம் லலிதா என்றால் அந்நாளில் கொடுமையான அண்ணி, வெடுக் வெடுக் என பேசும் ஈவு இரக்கமற்ற பெண்மணி போன்ற கதாபாத்திரம் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார். மீண்ட சொர்க்கம், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, உள்ளிட்ட படங்களில் தாம்பரம் லலிதாவின் நடிப்பு பிரபலம்.
பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறினார். சகோதரர் நம்பிராஜன் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அண்ணனிடம் இருந்து சமிக்ஞை கிடைக்காததால் தனது முயற்சியிலேயே வைரம் நாடக சபாவின் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.
ஆயினும் சினிமா வாய்ப்புகள் சிரமமாகவே இருந்தது. நொந்துபோய் ஊருக்கு திரும்பினார் குமரிமுத்து. இந்நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர். இதில் பல நாடகங்களை இயக்கவும் செய்தார். நாடகங்களில் பிரதான நகைச்சுவை வேடம் ஏற்று மக்களிடையே பிரபலம் அடைந்தார். அந்த ஆசையில் மீண்டும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் குமரிமுத்து.
அண்ணனின் முயற்சியில் சிறுசிறுவேடங்கள் எப்போதாவது கிடைத்தன. கூட்டத்துடன் கூட்டமாக எட்டாவது வரிசையில் நிற்கும் வாய்ப்புதான் அவருக்கு அப்போது கிடைத்த பெரிய வாய்ப்பு. 70களின் மத்தியில் சில படங்களில் தலைகாட்டினார் குமரிமுத்து. சினிமா உலகில் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது அவரது பெயர் கே.எம்.முத்து. சினிமா உலகை பீடித்திருக்கும் ராசி, நம்பிக்கை இவரையும் விடவில்லை. ராசிக்காக தன் பெயரை குமரி முத்து என மாற்றிக்கொண்டார்.
1968 ல், சென்னை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தை பார்க்க வந்த பிரபல கதை-வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனுக்கு குமரிமுத்துவின் நடிப்பு பிடித்துவிட, எல்.பாலுவிடம் அவரை அறிமுகப்படுத்தினார். விளைவு, பாலு அப்போது இயக்கிவந்த ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாகேஷுடன் ஒரே ஒரு காட்சியில் முடிதிருத்துபவராக வருவார். தொடர்ந்து ‘தங்கதுரை’ நடிகை தேவிகா சொந்தமாக தயாரித்த ‘’வெகுளிப் பெண்’’ என சில படங்களில் நடித்தார். ‘இவள் ஒரு சீதை’ படத்தில் காந்திமதியுடன் இணையாக நடித்தார்.
குமரிமுத்துவுக்கென தனியே கைதட்டல்கள் கிடைக்க ஆரம்பித்தது அந்தநாளிலிருந்துதான். முள்ளும் மலரும்’ , ‘உதிரிப்பூக்கள்’, ‘நண்டு’ போன்ற படங்கள் குமரிமுத்துவை திறமையான நடிகராக சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. சினிமா உலகில் நன்கு அறியப்பட்ட நடிகரானார். ‘அழகிய கண்ணே’ படம் வரை ஒன்பது படங்களில் மகேந்திரனுடன் இணைந்து பணியாற்றினார். இவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தவை ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகியவை. இனிவரும் தலைமுறைகளுக் கும் குமரிமுத்துவை அறிமுகப்படுத்தப்போகும் திரைப்படங்கள் என இவற்றை குறிப்பிட்டால் மிகையல்ல. தொடரந்து பல படங்களில் பிசியான நடிகரானார்.
சினிமாவில் சீனியராக இருந்தாலும், தன்னைவிட இளையவர்களிடம் எந்தவிதமான ஈகோவுமின்றி நடித்தார் குமரிமுத்து. இவரது ஒற்றைப்பார்வையையும் அகன்ற சிரிப்பையும் கவுண்டமணி பல படங்களில் கிண்டலடிப்பதுண்டு. சினிமாவின் மீதும், ரசிகர்களை சிரிக்கவைப்பதிலும் உள்ள ஆர்வத்தில் அவற்றை அனுமதிப்பார்.
குமரி முத்து கருணாநிதியிடம் காட்டிய நேர்மை!
திரைப்படங்களில் பிரபலமானபிறகும் நாடக ஆர்வத்தை குறைத்துக்கொள்ளவில்லை அவர். தனது சொந்த நாடகக் குழுவான குமரி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக்குழுவை நீண்டநாட்கள் நடத்திவந்தார். ‘சிரிப்புத்தான் வருகுதய்யா’, ‘சிந்திக்க ஒரு நிமிடம்’ ஆகிய நாடகங்களை இந்த நாடக குழு அரங்கேற்றிவந்தது. திமுக மீதும், கருணாநிதி மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் குமரிமுத்து. கட்சியின் சீனியர் நடிகர்கள் பலரும் ஏதோ ஒருவேளையில் மனத்தாங்கல் அடைந்து எதிர்கூடாரத்தை அண்டியபோதும் இறுதிவரை திமுக மற்றும் அதன் தலைவர் மீது பற்றுடன் இருந்தவர் குமரிமுத்து. காரணம் எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்தியதே.
இது நடிகர் குமரிமுத்து கருணாநிதியிடம் காட்டிய நேர்மை. ஆனால் அந்த கருணாநிதி கடைசி வரை அவரை வெறும் பேச்சாளராகவே வைத்திருந்தார் என்பது வேறு விஷயம்.
தென்னிந்திய நடிகர் சங்க விவகாரத்தில் முதலில் பலியான நடிகரும் இவர்தான். இளம் தலைமுறை நடிகர்கள் சங்கத்தை கொண்டுசெல்லும் முறையை எதிர்த்து நீண்டபோராட்டம் நடத்தியவர். அதற்காக சங்கத்தின் நிர்வாகிகளால் அவமானத்தை சந்தித்தவர். தனது போராட்டத்தின் எதிரொலியாக சந்தாவை புதுப்பிக்கவைில்லையென காரணம் கூறி சங்க உறுப்பினராக தொடர முடியாதபோது சட்டப்போராட்டம் நடத்தினார்.
குமரிமுத்து மறைந்தாலும் அவரது சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதான் இருக்கும்!
-எஸ். கிருபாகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக