திங்கள், 29 பிப்ரவரி, 2016

மும்பை சேரி வறுமையில் ஒரு தலித் சிறுமி இன்று 112 மில்லியன் டாலர்கள் டேர்ன் ஓவர் கம்பனிக்கு CEO !


வறுமையின் கடுமை,
தீண்டாமைக் கொடுமை,
பாலியல் சித்ரவதை,
தற்கொலை முயற்சி
இத்தனை அவலங்களுக்கும் 12 வயதிலேயே ஆளான அந்த பரிதாபச் சிறுமி... இன்று ஒரு பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மிகப் பெரிய கோடீஸ்வரர். இவரை நிஜ ஸ்லம்டாக் மில்லியனர் என்று வர்ணிக்கிறது உலகப் புகழ் ‘டைம்ஸ்’ பத்திரிகை. இவருடைய நிறுவனத்தின் பெயர் மும்பையில் இரு சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
கல்பனா சரோஜ்... வறுமையோடு மல்லுக்கட்டும் மிகச் சிறிய தலித் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் சக மாணவர்களாலும் வெளியே தன் ஊரைச் சேர்ந்த உயர் ஜாதியினராலும் பல கொடுமைகளுக்கும் ஆளானார்.

"பள்ளியில் எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களுடைய வீடுகளுக்குள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். தண்ணீர்கூட தர மறுப்பார்கள். எனக்கு அழுகையாக வரும். ஏன்தான் இந்த ஊரில் வந்து பிறந்தோமோ என நினைப்பேன். பள்ளியிலேகூட சில நிகழ்ச்சிகளில்நான் பங்கேற்க முடியாது. ஏன் என்றால் நான் ஒரு தலித்! நானும் அவர்களைப்போலவே ஒரு மனுஷிதானே... என்னை ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று அப்போதெல்லாம் நினைப்பேன்" என தன் பள்ளி நாட்களை நினைவு கூர்கிறார் கல்பனா.
பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே வலுக்கட்டாயமாக பால்ய விவாகம் செய்து வைக்கப்பட, தன் கணவரோடு மும்பையில் குடியேறினார். மும்பையின் ஒரு குடிசைப்பகுதியில் வசிக்க வேண்டியிருந்தது. குழந்தை கல்பனாவை எல்லாவிதக் கொடுமைகளுக்கும் ஆளாக்கியது கணவரின் குடும்பம். எதிர்த்துப் போராட முடியாத வயதில் தற்கொலைக்கு முயன்றார். அதுவும் தோல்வி. கணவரின் குடும்பத்து ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு தொடர்ந்து ஆளானார்.
மகளைப் பார்க்க ஊரிலிருந்து மும்பை வந்த தந்தை... கல்பனாவின் நிலையைப் பார்த்து தாங்கமுடியாமல், ‘இனி இவனோட நீ வாழ வேண்டாம்’ என்று கூறி மகளை மீண்டும் தன் கிராமத்திற்கே அழைத்துச் சென்றார். ஊருக்குத் திரும்பினால் பலவிதமாகவும் ஏதேதோ பேசியும் அவமானத்திற்குள்ளாக்கியது ஊர். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசிக்கஆரம்பித்தார். டெய்லரிங் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். ஆனாலும் தொடர்ந்து ஊர் மக்களின் ஆபாசப் பேச்சுகளால் நான்கு பாட்டில் பூச்சிமருந்தினைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
"நல்லவேளையாக என்னுடைய அத்தை என்னைக் காப்பாற்றிவிட்டார்... இனி செத்துப்போனாலும் எதையாவது உருப்படியாக செய்துவிட்டுத்தான் சாகவேண்டும் என்று அப்போது முடிவுசெய்தேன்" என்கிறார் கல்பனா.
ஒருகட்டத்தில் ‘இனி நமக்கு இந்த ஊர் வேண்டாம்.மும்பைக்கு செல்வோம்’ என 16 வயதில்தீர்க்கமாக ஒரு முடிவெடுத்துக் கிளம்பினார். அங்கே உறவினர் ஒருவரின் மூலமாக டெய்லர் வேலைக்கு சேர்ந்தார். முதல் சம்பளம் 20 ரூபாய். அது போதாது என நினைத்தவர், பக்கத்தில் உள்ள பெரிய தொழிற்சாலையில் தையல் இயந்திரங்களை இயக்கும் பணிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். அது அவருக்கு கூடுதல் சம்பளத்தினைப் பெற்றுத்தந்தது.
"என்னுடைய தங்கை என்னோடு வந்து மும்பையில் துணையாக இருந்தாள். அவளுக்கு உடல்நிலை திடீரென மோசமாகவே, மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றித் தவித்தேன். சம்பாதிக்கும் பணம் சாப்பாட்டிற்கும் வசிப்பிடத்திற்குமே சரியாய் போய்விடும். பணத்தின் உண்மையான மதிப்பினை அப்போதுதான் உணர ஆரம்பித்தேன்" என்று கூறும் கல்பனா, வீட்டிலிருந்தே டெய்லரிங் வேலைகளையும் செய்தபடி தன் நண்பர்கள் மூலமாக வங்கியில் கடன் பெற்று, சிறிய அளவில் ஃபர்னிச்சர்கள் வாங்கி விற்கும் தொழிலை தொடங்கினார். ஒருநாளில் 16 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை பார்க்கத் தொடங்கினார். இப்போதும் அதே பழக்கம் தொடர்கிறது. ஃபர்னிச்சர் வியாபாரம் இன்னொரு திருமண வாழ்க்கையையும் அவருக்கு பரிசளித்தது. வியாபாரத்தின் மூலமாக பழக்கமான நண்பரையே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
கல்பனாவின் நேர்மையான உழைப்பும், விடாமுயற்சியும் அவருக்கு நிறைய நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது. அந்த நேரம் பார்த்து, பெருங்கடனில் இருந்த கமானி ட்யூப்ஸ் என்னும் சிறிய நிறுவனத்தை மூடிவிட முடிவெடுத்தார். அந்நிறுவனத்தின் தலைவர். தனது நண்பரான அவரிடம் உரிமையோடு, ‘என்னிடம் கொடுங்க... நான் இந்த நிறுவனத்தை லாபகரமாக நடத்திக் காட்டுகிறேன்’ என கல்பனா சொன்ன வார்த்தைகளில் தெறித்த உறுதியைப் பார்த்து, மொத்தப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார் அவர்.
"கமானி ட்யூப்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின் முதலில் ஒவ்வொரு தொழிலாளியிடமும் கரிசனத்தோடு பேசினேன். நிறுவனத்தின் வீழ்ச்சி அவர்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை விளக்கினேன். நிறுவனத்தை மீண்டும் வளர்த்தெடுக்க என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டேன். இரவு, பகல் பாராமல் தொழிலாளர்களோடு சேர்ந்து உழைத்தேன். ஜெயித்தோம்" என்று பெருமிதப்படுகிறார் கல்பனா.
இப்போது எல்லாமே மாறிவிட்டது. கமானி ட்யூப்ஸ் நிறுவனத்தின் டேர்ன் ஓவர் நூறு மில்லியன் டாலர்கள். பல ஆயிரம் பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இவருடைய ஆதர்ச நாயகர்கள் ரத்தன் டாடா மற்றும் முகேஷ் அம்பானி. 2006ம் ஆண்டு சிறந்த தொழில் நிறுவனத் தலைவருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார் கல்பனா.
ஒரு தலித் பெண்ணாக இருந்து அத்தனை தடைகளையும் தகர்த்து வெற்றிபெற்று இன்று இந்தியாவில் மிக முக்கிய தொழில் அதிபராக அசாத்திய உயரத்தை எட்டியிருக்கிறார் கல்பனா. தான் எவ்வளவு வளர்ந்தாலும் கடந்துவந்த பாதையை ஒருநாளும் மறக்கவில்லை இவர். இன்றும் தன்னுடைய கிராமத்திற்கு அடிக்கடி விசிட் அடிப்பதோடு அங்குள்ள தலித் குழந்தைகளின் கல்விக்கும் அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்க்கைக்கும் தொடர்ந்து உதவி வருகிறார்.
"நாம் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்... அது எத்தனை மோசமானதாக பிறர் கேலி செய்யக் கூடியதாகவும் இருக்கலாம். அதற்கெல்லாம் செவி கொடுக்காமல் உறுதியான உள்ளத்தோடும், வெற்றிக்கான வேட்கையோடும் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றி நிச்சயம். அதுதான் என் வெற்றி ரகசியம்" என்கிறார் கல்பனா.
நன்றி... puthiyathalaimurai.com

கருத்துகள் இல்லை: