சனி, 5 மார்ச், 2016

எது தேசதுரோகம் ? வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் போராட்டம்..JNU...


தோழர்.ஆனந்த்,ஜே.என்.யு மாணவர், TNMடெல்லி.
ஜே.என்.யு வை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் வடிவமாய் வள்ளுவர் கோட்டம் பதாகைகளாலும், மாணவர்கள், தோழர்களாலும், செங்கொடிகளாலும் நிரம்பியிருந்தது.
rsyf 3.2.2016 demo part 1 (3)
இந்த ஆர்ப்பாட்டத்திற்கென்றே சென்னை, விழுப்புரம், கடலூர், விருதை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தின் இறுதிவரை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருந்தது போலீசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

பு.மா.இ.மு 50 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தாலே நூற்றுக்கணக்கில் போலீசு குவிந்துவிடும். ஆனால் இங்கு கிட்டதட்ட ஆயிரத்தை நெருங்கும் மாணவர்கள் கூட்டம் திரண்டதை கண்டு கண்ணீர் புகை குண்டுவீச்சு ‘வஜ்ரா’ வாகனங்கள் இரண்டுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர் போலீசார்.
தலைமை_ ராஜா,  புமாஇமு.செயலர், சென்னை கிளை,
பு.மா.இ.மு சென்னை கிளைச் செயலாளர் தோழர் ராஜா
தோழர்.வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
தோழர் வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
பு.மா.இ.மு சென்னை கிளைச் செயலாளர் தோழர் ராஜாவின் தலைமையில் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் எது தேசம்? என்ற தலைப்புடன் உரையைத் துவங்கினார் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியை சார்ந்த தோழர் வாலாசா வல்லவன். இந்தியா ஒரு தேசிய இனங்களின் சிறைக்கூடமே! இதை எதிர்த்து அன்றே பெரியார் முழங்கினார் என இந்து தேசியத்தினை திரைகிழித்து உரை நிகழ்த்தினார்.
பேராசியர்.சாந்தி, சென்னை
பேராசியர் சாந்தி, சென்னை
அவரைத்தொடர்ந்து பேசிய ஆவடி வேல்டெக் முன்னாள் பேராசிரியர் சாந்தி எது தேசத்துரோகம்? என்ற தலைப்பில் கேள்விகளை எழுப்பினார். மாணவர்களை தேசவிரோதிகள் என்றும், துர்கையை இழிவுப்படுத்திவிட்டனர் என அவதூறுகளை அள்ளிவீசும் ஸ்மிரிதி இரானி எனும் முன்னாள் டிவி சீரியல் நடிகையிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் மாணவர்கள் சமூக, அரசியல் விசயங்களிலும் அக்கறை செலுத்தவேண்டுமென பேசியமர்ந்தார்.
திரு.சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர், ஜே.என்.யு முன்னாள் மாணவர்
திரு.சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர், ஜே.என்.யு முன்னாள் மாணவர்
அதன் பின்னர் ஜெ.என்.யூ முன்னாள் மாணவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளருமான சின்னப்பராஜ், ஜெ.என்.யூ கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் நிர்வாக முறைகளையும் விரிவாக விளக்கினார். காலை முதல் இரவு வரை அரசியல் விவாதங்கள் நடைபெறும். தனி ஒரு நபராக இருந்தால் கூட தன்னுடைய கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அப்பல்கலைக்கழகம் யாரையும் புறக்கணித்தது கிடையாது. மாற்றுக் கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் ஜனநாயக உரிமைக்காக எல்லோரும் சேர்ந்து போராடுவோம் என்றார். அதே போல் போராடினால், போலிசு கைது செய்து வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைக்காது என்பது ஒரு பொய் என தன் அனுபவத்திலிருந்து கூறினார். ஜெ.என்.யூவில் போராடி போலிசால் வழக்கு பதியப்பட்ட அவரது நண்பர்கள் மத்திய தேர்வாணைய தேர்வுகளில் வென்று சிவில் சர்வீஸ் பணிகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் போராடத் தயங்க வேண்டாமென நம்பிக்கையூட்டினார்.
பின்னர், ஜெ.என்.யூ மாணவர் பிரதிநிதி, புதிய பொருள்முதல்வாதிகள் (The New Materialists) அமைப்பை சார்ந்த தோழர் ஆனந்த் முதலில் முழக்கங்களை எழுப்பி விட்டு பேச்சினை துவங்கினார். இந்திராகாந்தி துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் – நெருக்கடி நிலையை அறிவித்து பாசிசத்தை அமல்படுத்திய காலத்தில் பல்கலைகழகத்திற்குள் அவரை நுழையவிடாமல் துணைவேந்தர் பதவியை விட்டு விலகுமாறு போராட்டம் நடத்திய பாரம்பரியமிக்கவர்கள் ஜெ.என்.யூ மாணவர்கள் என கூறினார். அத்தகைய சமரசமற்ற போராட்டக் குணமும், மாற்றுக் கருத்திற்கான ஜனநாயகத் தன்மையையும் நசுக்கும் முயற்சியிலே இந்த அரசு ஈடுபட்டுள்ளதை அம்பலப்படுத்தினார்.
தோழர்.ஆனந்த்,ஜே.என்.யு மாணவர், டெல்லி.
மேலும் சம்பவம் நடந்த அன்று மாவோயிச ஆதரவு மாணவர்கள் சிலரே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதை எதிர்த்து ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பை சார்ந்த சவுரவ் சர்மா துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பி, கூட்டத்தை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் சவுரவ் சர்மா தன் சொந்த அனுமதியில் ஜீ செய்திகள் மற்றும் ஆஜ் தக் செய்தி நிருபர்களை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே – பிரச்சனை ஏற்படும் என்பதை முன்னறிந்து அழைத்து வந்து வீடியோ எடுக்க வைத்து செய்தி பரப்பியுள்ளார். எப்படி இவர்களுக்கு தேசவிரோத முழக்கங்கள் எழுப்புவது முன்கூட்டியே தெரியும்? இந்த கூட்டத்தை கலவரமாக மாற்ற ஏ.பி.வி.பி-யினர் துவக்கத்திலிருந்தே முயற்சித்தனர் என தெரிவித்தார். மேலும் தேசவிரோத முழக்கங்கள் ஏதும் அங்கு எழுப்பப்படவில்லை என்பதே உண்மை. அதேபோல் மாணவர் தலைவர் கண்ணையா குமார் விடுதலை மட்டும் இந்த போராட்டத்தின் இலக்கு அல்ல. ஒட்டுமொத்த பார்ப்பனிய பாசிசத்தையும் ஒழித்துக்கட்டுவதே இதன் இலக்கு என பேசி முடித்தார்.
பேராசிரியர். சிவக்குமார், கல்லூரி முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
பேராசிரியர் சிவக்குமார், கல்லூரி முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
அடுத்து குடியாத்தம் அரசுக் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துத்துவம் என்ற வார்த்தைக்கு பதிலாக தேசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். மேலும் இதுபோல் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு இப்போது மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது ஒரு வகையில் சரியானதே! ஏனெனில் புதிய கல்விக்கொள்கை, கல்வியில் காட்ஸ் ஒப்பந்தம் போன்றவற்றுக்கெதிராக மாணவர்கள் இனி போராடத் துவங்கிவிடுவர். எனவே மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக போராட வேண்டும். அந்த காலத்திலே இருந்தாற்போல ஒவ்வொரு கல்லூரியிலும் அரசியல் விவாதங்களை நடத்தவேண்டுமென அறைகூவல் விடுத்தார்.
பின்னர் பேசிய ஐதராபாத் பல்கலைகழக மாணவரும் ரோகித் வெமுலா தற்கொலைக்கான போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவின் உறுப்பினருமான வெங்கட்ராவ், ரோகித் வெமுலா தற்கொலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ‘மனு’ ஸ்மிரிதி இரானி, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, கல்லூரி முதல்வர் ஆகியோரின் கூட்டுச்சதியே என்பதனை தக்க ஆதாரங்களுடன் எடுத்து வைத்து பேசி அம்பலப்படுத்தினார். உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர் பார்ப்பனியத்தை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம் என்ற அறைகூவலுடன் உரையை முடித்தார்.
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ பேசுகையில், இது அறிவியலுக்கும் அறிவற்ற அடிமுட்டாளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் என குறிப்பிட்டார். மேலும் மாங்காய் திருட செல்லும் குரங்கு, கூட்டமாக சென்று மாங்காய் திருடும்போது செய்யும் அட்டகாசத்தால் தோட்டக்காரன் விழிப்படைந்து அதை அடித்து விரட்டிவிடுவான். உடனே அடுத்த தோட்டத்திற்கு இந்த குரங்கு செல்லும். அங்கும் தோட்டக்காரனால் அடித்து விரட்டப்படும். பின்னர் அனைவரும் இந்த குரங்கை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக அடித்து துரத்துவர். அதுபோல் சென்னை ஐ.ஐ.டி-யில் வாலாட்டிய பார்ப்பனிய குரங்கு, இங்கு அடித்து விரட்டப்பட்டு ஐதராபாத் சென்றது. அங்கும் விரட்டப்பட்டு இப்போது டெல்லி சென்றுள்ளது. இனி ஒட்டு மொத்தமாக அனைவரும் சேர்ந்து அதனை விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது என் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எப்படி நாட்டாமைகள் போல் நடந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினார். அதேபோல் தோற்றுப்போய் விட்ட இந்த அரசுக் கட்டமைப்பிற்கு பதிலாக மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.
கனிமொழி, சென்னை சட்டக்கல்லூரி மாணவி.அடுத்துப் பேசிய சட்டக்கல்லூரி மாணவி தோழர் கனிமொழி, ஜெ.என்.யூ மாணவர்கள் மீது குத்தப்பட்டிருக்கும் தேசத்துரோகி முத்திரை இனி அடுத்தடுத்து நம் மீதும் குத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே, இன்றே பார்ப்பனியத்தை முறியடிக்க மாணவர்கள் நாம் அனைவரும் களமிறங்கி போராடவேண்டுமென சுருக்கமாக தன் உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்ததாக ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதைய்யன் பேசுகையில், ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு பிணை வழங்கிய நீதிபதி தன் தீர்ப்பில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போலவே தீர்ப்பு சொல்லியிருப்பதை அம்பலப்படுத்தினார். ஜெ.என்.யூ வை ஒரு கிருமி தாக்கியிருப்பதாகவும் அது பரவுவதற்குள் அதற்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டுமெனவும், அதைத் தாண்டி போனால் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். முழுக்க பொய்களாலும், மோசடியாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கில் நிபந்தனை பிணை வழங்கும்போதே குற்றத்தை உறுதிப்படுத்திவிட்டார் அந்த நீதிபதி என்றார்.
தோழர் மருதையன்
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மேலும் சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்து போன ராணுவ வீரர்களின் உடலை கொண்டுவந்து வைத்து இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? என ஜெ.என்.யூ மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அவர்களை அங்கு அனுப்பியவர்களைத்தானே கேள்வி எழுப்ப வேண்டும். 1947-க்கு பிறகே காஷ்மீர், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்கள் வலுக் கட்டாயமாக இணைக்கப்பட்டன. இன்றும் அதனை ‘தேசபக்தி’ என்ற பெயரில் ராணுவத்தைக் கொண்டு இருத்தி வைப்பதற்காக இது போன்று சியாச்சின் பகுதிகளில் ராணுவ வீரர்களை பலிகொடுக்கிறது இந்த அரசு. உண்மையில் இப்படி போலி தேசியவெறி கிளப்பிவிடப்பட்டுத்தானே ஈழத்தில் சிங்களவர்கள் இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுக் குவித்தனர். அதேபோல்தான் இங்கும் தேசவெறி என்ற பெயரில் இந்துவெறி ஊட்டப்பட்டு முசுலீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுகின்றனர். அதே தேசவெறிக்குத்தான் அப்சல் குரு பலியிடப்பட்டார். அதே தேசவெறி – இந்துவெறி ஊட்டப்பட்டுத்தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரப்பப்பட்டு ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்.
உணமையில் எது தேசவிரோதம்? இராமநாதபுரத்தில் பாதியை அதானிக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். தேயிலைத்தோட்டங்களை டாடாவுக்கு இன்னும் பல்வேறு கனிம வளம் நிறைந்த பகுதிகளை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதே இதுதான் தேசத்துரோகம் என பேசினார்.
அரவிந்த், சென்னை தியாகராயக் கல்லூரி
தோழர் அரவிந்த், சென்னை தியாகராயக் கல்லூரி
அவருக்கடுத்து அனைத்துக் கல்லூரி மாணவர்களின் தலைவர் தோழர் அரவிந்தன் பேசுகையில் செய்முறைத் தேர்வுகளையும் தாண்டி சென்னைக் கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும் அடுப்பில் வாய் வைத்த பூனை கதையாக ஆர்.எஸ்.எஸ் இப்போது உள்ளது. ஒரு பூனை சமையலறையில் நுழைந்து பால், வெண்ணெய் என இருக்கும் அனைத்திலும் வாய் வைத்து ருசிகண்டு கொழுத்துப் போய் அடுப்பில் வாய் வைத்து வாயை பொசுக்கிக் கொண்டது. அதுபோல இப்போது ஆர்.எஸ்.எஸ்., மாணவர்களிடம் பிரச்சனை செய்கிறது. இது நெருப்பு என்பதை அறியாமல் வாயை வைத்துவிட்டது. அது பொசுங்காமல் திரும்பாது என பேசிமுடித்தார்.
தோழர். கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புமாஇமு, தமிழ்நாடு.
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புமாஇமு, தமிழ்நாடு.
இறுதியாக உரை நிகழ்த்திய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை பற்றி எச்சரிக்கை விடுத்தார். நானும் மாணவர் அமைப்பே, நானும் உன்னுடன் படிப்பவனே என சொல்லிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைவான், கவனமாக இருந்து அவனை அடித்து விரட்ட வேண்டுமென எச்சரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சிகளின் இடையிடையே ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. டாஸ்மாக்கிற்கெதிராக பாடல் பாடி ‘தேசத்துரோக’ வழக்கில் கைதாகி சிறை சென்ற தோழர் கோவன் கலந்து கொண்டு ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டப் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் தொழிலாளர் பிரச்சனை பெண்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மாணவர் பிரச்சனை என அனைத்திற்காகவும் போராடும் “ஜெ.என்.யூ பேரைத் தெரியுமா? அங்கு மாணவர் போராட்டம் தெரியுமா?” என்ற பாடலைப் பாடினார். மேலும் மாணவர் தலைவர் தோழர் கண்ணையா குமாரின் புகழ்பெற்ற ‘ஆசாதி’ உரையை கண்டு அஞ்சி நடுங்கும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்களை கண்டு கேள்வி எழுப்பும் விதமாக “ஆசாதி சொல் மீது உனக்கேன் வெறுப்பு?” என உணர்ச்சிப் பூர்வமாக பாடினார். மேலும் பார்ப்பனியத்தை திரை கிழிக்கும் வகையில் ‘நாமக்கட்டி ஆளப்போகுது’ போன்ற பாடல்களை பாடி மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும், போராட்ட உணர்வையும் ஊட்டினர்.  வினவு.com

கருத்துகள் இல்லை: