சனி, 5 மார்ச், 2016

அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு இந்தியா விசா மறுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.
 இதுகுறித்து வாஷிங்டனில் அந்த ஆணையத்தின் தலைவர் ராபர்ட் பி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்திய அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கும் பொருட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந் திர ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் ஒரு வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், எங்கள் ஆணைய உறுப்பினர்களுக்கு இந்திய அரசு நுழைவு இசைவு வழங்குவதற்கு மறுத்துவிட்டது. 
இந்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார் ராபர்ட் பி. ஜார்ஜ்.
 அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்கள், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளில் மதச் சுதந்திரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆணைய உறுப்பினர்களின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது  dinamani.com

கருத்துகள் இல்லை: