வெள்ளி, 4 மார்ச், 2016

அதானி குழுமம் + தமிழக அரசு 23 ஆயிரம் கோடி,648 மெகாவாட் ஊழல் ! வழக்கறிஞர் கபிலன் மனோகரன் அதானியை பிளாக் மெயில் செய்கிறாராம்? எப்படீஈஈ ?

13103PJuly-04---B-BIGExplosive allegations made by Adani’s own lawyer could blow lid off Tamil Nadu solar scam - thenewsminute.com/
 savukkuonline.com
:மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகலசாமி, இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, இந்த ஒப்பந்ததினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 23 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்று கூறினார் ஜுலை 2015ல், அதானி நிறுவனத்துடன், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது முதலாகவே இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன.  தற்போது புதிதாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் விதத்தில் உள்ளது. 4 ஜுலை 2015 அன்று தமிழக அரசு,அதானி குழுமத்துடன் 4536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில்  25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது.     இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோதுதான் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
   மத்திய பிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  ஆனால் அதானி நிறுவனத்தின் இந்த விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப் பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில், 25 ஆண்டுளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து கேள்விகள் எழுப்பின.    திமுக பொருளாளர் ஸ்டாலின், இந்த ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.   பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிஜேபியின் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைவரும் இந்த ஒப்பந்தம் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.    ஆனால் அதிமுக அரசா இதற்கெல்லாம் கவலைப்படப் போகிறது ?   எதிர்க்கட்சிகளின் கேள்விகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஒப்பந்தத்தை செயல்படுத்தியது தமிழக அரசு.
அதானி நிறுவனம், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்சாரப் பூங்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்க நிலங்களை வாங்கத் தொடங்கியது.    இவ்வாறு நிலம் வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இடைத்தரகர்கள் இடையில் புகுந்து குறைந்த விலைக்கு நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதானி நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தாலும் அதற்கெல்லாம் எவ்விதமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.
ஆனால் கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்று, இந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது.    அதானி நிறுவனத்தின் சார்பாக, நில ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு கபிலன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார்.     அந்த கபிலன் அதானி நிறுவனம் தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் சார்பாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.   இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் கிடைத்தன.
சென்னை அண்ணாசாலையிலிருந்து செயல்படும் கபிலன் அசோசியேட்ஸ் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் கபிலன் மனோகரன் .   அதானி நிறுவனம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வாங்கப்படும் நிலங்களின் ஆவணங்களை சரிபார்த்து தருவதற்காக கபிலன் நியமிக்கப்படுகிறார்.    கபிலனுக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூபாய் 6000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.     இக்கட்டணத்தின் அடிப்படையில் கபிலனுக்கு அதானி நிறுவனம் 70 லட்ச ரூபாயை இது வரை அளித்திருக்கிறது.    இந்த நிலையில், கபிலன் அதானி நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூபாய் 15,000 வேண்டும் என்றும், அவ்வாறு தரத் தவறினால் அதானி நிறுவனம் அமைக்கும் சூரிய ஒளி மின் பூங்காக்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவேன் என்றும், அவ்வாறு வெளியிட்டால், அதானி நிறுவனம், தமிழகத்தில் சூரிய ஒளி மின் பூங்கா அமைக்கும் திட்டத்தையே கை விட வேண்டி வரும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.
கபிலன் அதானி நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், “சூரிய ஒளி மின் பூங்கா அமைப்பதற்காக நிலம் வாங்கியதில் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்துள்ளன.   மின்சாரம் வாங்குவதற்காக தமிழக மின் வாரியத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல்வேறு சட்டவிரோதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   இந்த சட்டவிரோதமான ஆவணங்களின் அடிப்படையிலேயே ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விலைக்கு அதானி நிறுவனத்தோடு மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தஸ் இந்த் வங்கியிலிருந்து 2303.98 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து 1000 கோடி, யெஸ் பேங்கிலிருந்து 500 கோடி மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியிலிருந்து 803.98 கோடி கடன் பெற்றுள்ளது அதானி நிறுவனம்.
இவ்வாறு கடன் பெறப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.         செபி விதிகள், ஒப்பந்த விதிகள், போன்ற பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன.    இந்த விதி மீறல்கள் ஒரு துளி மட்டுமே.    தமிழக மின் வாரியம், இதர அரசுத் துறைகள், பொது நல வழக்கு தொடுக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் போன்றவற்றிற்கு இத்தகவல் தெரிந்தால், அதானி நிறுவனம் தமிழக அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படும்.

அதன் விளைவாக நீதிமன்றத்தில் நிலம் வாங்கியது தொடர்பான பல வழக்குகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தொடரும் வழக்குகள், போன்றவை தொடுக்கப்படலாம்.   அதானி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படலாம்.   போலியான மற்றும் சட்டவிரோதமான ஆவணங்களை அளித்து தமிழக மின் வாரியத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக அதானி நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மீது விசாரணை வரலாம். இந்த வழக்குகள் காரணமாக தமிழக அரசோடு மின்சாரம் வாங்க செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம்.
இது தவிர, போலியான ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்றதற்காக, கடன் அளித்த வங்கிகள் அதானி நிறுவனம் மீது புகார் அளித்து அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.     இந்த ஒப்பந்தம் தொடர்பான பல தகவல்களை வெளியில் சொல்லவில்லை என்ற காரணத்துக்காக செபி அதானி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
உங்களின் அரசியல் செல்வாக்கின் காரணமாக, இந்த குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து விடலாம் என்றால் அது நடக்காது.   ஒரு சாதாரண பூர்வாங்க விசாரணை நடத்தினாலே, தமிழக மின் வாரியத்தை அதானி நிறுவனம் எப்படி ஏமாற்றியிருக்கிறது என்பது தெரிந்து விடும்.”   என்று கபிலன் அதானி நிறுவனத்துக்கு  எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில்,  வழக்கறிஞர் கபிலன் தங்களை ப்ளாக் மெயில் செய்வதாகவும், அவர் அதானி நிறுவனம் தொடர்பான எந்த ரகசியங்களையும் எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.   இந்த வழக்கில் கடந்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி கே.கே.சசிதரன்,   வழக்கறிஞர் கபிலன் அதானி நிறுவனத்தின் சூரிய ஒளி மின் பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக, எந்த விதமான தகவல்களையும் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.   இந்த வழக்கு மீண்டும் மார்ச் இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
வழக்கறிஞர் கபிலன் ப்ளாக் மெயில் செய்தாரா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளும், அந்த குற்றச்சாட்டுகள் வெளியாகி விடுமோ என்ற அச்சத்தில், அதானி நிறுவனம் அவசர அவசரமாக நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றதும், அதானி சூரிய ஒளி பூங்காவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
வழக்கறிஞர் கபிலன் அதானி நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிடுகிறார்.   ரூபாய் 7.01 என்ற விலைக்கு தமிழக மின் வாரியம் அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்க செய்துள்ள ஒப்பந்தமே முறைகேடான ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று கூறியுள்ளார்.     மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகலசாமி, இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, இந்த ஒப்பந்ததினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 23 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்று கூறினார்.   ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்ப்புகளையும் காற்றில் பறக்க விட்டு அதானி ஒப்பந்தத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
கடந்த புதனன்று கூட, அதானி குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் “அ.தி.மு.க. அரசு அடானி குழுமத்தோடு அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அந்தக் குழுமத்திற்கு சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக, மோசடியாக இந்த மின் திட்டத்தை எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளிகளும் கோராமல் அளித்திருக்கிறது என்பதை இந்த வழக்கிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தை அடானி குழுமத்திற்கு அ.தி.மு.க. அரசு அளித்தது பற்றி சட்டப்படியான குற்ற விசாரணை நடைபெற்று, மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அதானி ஒப்பந்தம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.   குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.    நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: