சனி, 22 நவம்பர், 2014

தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்! உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு -


உத்தரபிரதேசத்தின் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான அசம்கான், ‘தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு முஸ்லிம்களின் சமாதி இடம் பெற்றுள்ள தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த விரும்புகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களின் சமாதியும், நினைவிடங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் மத்திய வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மோசமான இடங்களாக இருந்தால் அது வக்பு வாரியத்திடம் இருக்கும். மிகவும் விலை மதிப்பு உடையது எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமாகுமா?தாஜ்மகாலில் இருந்து வரும் வருமானத்தை முஸ்லிம் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு இரண்டு பல்கலை கழகங்களை வக்பு வாரியத்தால் நடத்தி விட முடியும் என்றார்.

அசம்கானின் கருத்துக்கு லக்னோ இமாம் கலீத் ரஷீத்தும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அசம்கான் கூறியது போல தாஜ்மகால் முஸ்லிம்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாகும். அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் கூறுகையில், தாஜ்மகால் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவிடமாகும். அது இந்திய தொல்லியல் துறையின் வசம் உள்ளது என்பது அசம்கானுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அசம்கான் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தாஜ்மகால் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்தார்.அதே போல் டெல்லி வக்பு வாரிய தலைவர் சவுத்ரி மதீன் அகமது கூறுகையில், இந்திய தொல்லியல் துறையால் தாஜ்மகால் சிறப்பாகவே பரமாரிக்கப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற கோரிக்கைகளை எழுப்புவது சரியானதல்ல என்றார் - /tamilmurasu.org

கருத்துகள் இல்லை: