செவ்வாய், 18 நவம்பர், 2014

வித்தியா பாலன் : சமூக வலைதளங்கள் மிக மோசமான வைரஸ்? madam, Dirty பிக்ச்சரை விட இது dirty யா?

சமூக வலைதளங்கள் உலகத்தை கெடுக்கும் மிக மோசமான வைரஸ்’’ என்று அதிரடியாக தாக்குதல் தொடுக்கிறார், பிரபல நடிகை வித்யாபாலன். இப்படி அவர் சூடாக சொல்ல என்ன காரணம்..! அவரிடமே கேட்போம்..!பெண்கள் வாழ்க்கையில் முன்னேற தேவைப்படுவது எது?
பெண்களுக்கு தன்னம்பிக்கைதான் முதல் தேவை. தன் வாழ்க்கை தன் கையில்தான் இருக்கிறது என்பதை பெண்கள் உணரவேண்டும். பிரச்சினைகளை கண்டு மனம் துவண்டு விடாமல், அதிலிருந்து வெளிவரும் வழி முறையை பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை வலிமைப்படுத்தும். சிக்கலில் இருந்து  விடுபடுவதன் மூலம் புதிய அனுபவத்தை பெறுவோம். அந்த அனுபவம்தான் நம்மை வழி நடத்தும். அதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்யும்.
தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறதா?
சமீபகாலமாக பெண்கள் விழிப்புணர்வு பற்றிய செய்திகளே பெருமளவு ஒளிபரப்பாகின்றன. அவை பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானவை.  பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க சட்டத்தையும், காவல் துறையையும் நாட அவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம். அதில் சினிமாக்களின் பங்களிப்பும் உண்டு.

பெண்களின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு என்ன?

நான் சினிமாவில் சொல்லும் கருத்தை தவிர தனிப்பட்ட முறையில் பெண்களுக்காக எதையும் செய்யவில்லை. ஒவ்வொரு வெற்றிபெற்ற பெண்ணுக்கு பின்னாலும் ஒரு பெரிய போராட்டம் இருக்கும். அந்த போராட்டத்தில் பெண்களுக்கு  ஆதரவு தெரிவிக்காதவர்கள்கூட, அந்த பெண் வெற்றியடைந்ததும் அதில் தங்களுக்கும் பங்கு இருப்பதுபோல் காட்டிக்கொள்ள போட்டிபோடுவார்கள். நான் என் கருத்தை சினிமா கதாபாத்திரங்கள் மூலம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

கணவருக்கும், உங்களுக்கும் சண்டையாமே உண்மையா..?

முற்றிலும் பொய். சமீபத்தில் எனக்கு உடல் நலம் சரியில்லாததால் துர்கா ராணி சிங் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். உடனே ‘வித்யா சினிமாவில் நடிக்க சித்தார்த் எதிர்ப்பு’ என்று  செய்தியை பரப்பிவிட்டார்கள். ‘நான் எப்போது உன்னைத் தடுத்தேன்’ என்று சித்தார்த் அதிர்ச்சியோடு என்னிடம் கேட்டார். நடிகையின் கணவராக இருந்தால் இதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நீங்கள் ஏன் எழுதுவதில்லை..?

எனக்கு அதில் நாட்டமில்லை. வலைதளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக சில விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால் பலரும் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை உணர்ந்துகொள்ள முடிகிறது. பாத்ரூம் போவதைக்கூட டுவிட்டரில் தெரிவித்து விட்டுதான் போகிறார்கள். மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும் செய்யக்கூடாது என்பது ஒரு மனோ வியாதியாக மாறிவிட்டது.

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம்?

‘டர்ட்டி பிக்சர்ஸ்’ கதாபாத்திரம்தான் எனக்கு பிடித்தது. அது ஜீவனுள்ள கதாபாத்திரம். அதேநேரம் மிகவும் விமர்சிக்கப்பட்ட கதாபாத்திரமும் அதுதான். இந்தியாவிலுள்ள எல்லோர் மனதிலும் வித்யாபாலன் என்ற பெயரை அந்த கதாபாத்திரம்தான் பதிவு செய்தது.

அரசாங்கம் பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

முதலில் பெண்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்ய வேண்டும். பெண் கல்வியுடன், தற்காப்பு கலையையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.

திருமணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

அது அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆணை பொறுத்தது. ஒரு நபரின் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவருடைய சமூக பொறுப்பு, பெண்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம், சுயமரியாதை, கடமையுணர்வு போன்றவைகளை எல்லாம் சீர்தூக்கிப்பார்த்து பொருத்தமானவரை திருமணம் செய்துகொண்டால், பாதுகாப்பு கிடைக்கும்.

நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம் எது?

‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்திற்காகத்தான் கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. ஒரு நடிகை இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா என்றுகூட அப்போது நான் நினைத்ததுண்டு. dailythanthi.com

கருத்துகள் இல்லை: