செவ்வாய், 18 நவம்பர், 2014

160 சிஷ்யர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கமா ! சாமியார் குர்மீத் ராம்சிங்கின் கடவுள் பாதை?

சண்டிகர்: ஹரியானாவின் சர்ச்சை சாமியார்களுக்கு 'நேரம்' சரியில்லை போல.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ராம்பாலைப் போல 'கட்டாய ஆண்மை நீக்க' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ராம்சிங். குர்மீத்தின் 160க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து பரிசோதிக்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களில் ஒரு பிரிவுதான் தேரா சச்சா சவுதா. சில ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் வியன்னாவில் மற்றொரு சீக்கியர் பிரிவினரால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே இந்தியாவிலும் பெரும் மோதல் வெடிக்க பதற்றம் பற்றி எரிந்தது. அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ் சவுகான் என்ற முன்னாள் சீடர், குர்மீத்தின் ஆசிரமத்தில் சீடர்களுக்கு கட்டாயமாக ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.. ஆண்கள் ஆண்மையை நீக்கிவிட்டால் ஆண்டவனை அடையலாம் என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி இந்த சட்டவிரோத செயலில் குர்மீத் ஈடுபடுகிறார் என்று வழக்கு தொடர்ந்தார். சாமியார் குர்மீத் ராம்சிங்கின் சீடர்கள் 160 பேருக்கு கட்டாய ஆண்மை நீக்கமா? பரிசோதிக்க கோர்ட் உத்தரவு இந்த வழக்கில் ராஜ் சவுகானுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது ராஜ் சவுகானுக்கு ஆண்மை நீக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குர்மீத் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கூட 7 சீடர்கள் குர்மீத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். இந்த நிலையில் ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தேரா சச்சா அமைப்பு பாஜகவை முழுமையாக ஆதரித்தது. தற்போது ஹரியானாவில் பாஜக அரசு அமைந்துள்ள நிலையில் மீண்டும் நீதிமன்றக் கதவைத் தட்டியுள்ளார் ராஜ் சவுகான். அதில் குர்மீத்தின் ஆசிரமத்தில் உள்ள 160 முதல் 400 வரையிலான சீடர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அத்துடன் தற்போது ஹரியானா அரசியலில் செல்வாக்கு மிக்க நபராக குர்மீத் உருவெடுத்திருப்பதால் சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ராஜ் சவுகான் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே. கண்ணன், ராஜ் சவுகான் தாக்கல் செய்திருக்கும் 160க்கும் மேற்பட்ட குர்மீத்தின் சீடர்களுக்கு ஆண்மை நீக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய குர்மீத் மீது ஏற்கெனவே பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: