திங்கள், 17 நவம்பர், 2014

ஜெயாவை நிரபராதியாக காட்ட துடியாக துடிக்கும் ஆரிய,பார்பன,மேல்தட்டு,மதவெறி,ஜாதிவெறி, ஊழல் கிருமிகள்.

சோ ராமஸ்வாமி அய்யர் குற்றவாளி ஜெயாவைத் தியாகி போலக் காட்டுவதற்காக தீர்ப்பு குறித்து துணிந்து பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவிட்டு வரும் துக்ளக் சோ ராமஸ்வாமி அய்யர்.
ஜெயா – சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அவ்வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் இந்தியச் சமுதாயத்தின் தலைமை சக்தியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் கிரிமினல் புத்தியை, பித்தலாட்டத்தனத்தைப் புரிந்துகொள்ளும் வாப்பைத் தமிழக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்பார்ப்பனக் கும்பல் ஊடகங்களில் தமக்குள்ள ஆதிக்கம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இச்சொத்துக் குவிப்பு வழக்கே மோசடியானது போலவும், தேர்தல்கள் மூலம் ஜெயாவை வீழ்த்த முடியாத தி.மு.க., அவரைப் பழிதீர்த்துக் கொள்ள பின்னிய சதிவலை போலவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநியாயமானதென்றும் ஒரு அயோக்கியத்தனமான கருத்தைத் தமிழக மக்களின் பொதுப்புத்தியில் விதைத்துவிட முயலுகின்றன. இந்த வகையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அம்மாவின் அடிமைகளைவிட, தினமணி, இந்து, துக்ளக், கல்கி, விகடன் குழும இதழ்கள் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும்; தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட சூத்திர ஊடகங்களும் தம்மை அபாயகரமானவையாகத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுள்ளன.


2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசாவை உலக மகா வழிப்பறிக் கொள்ளையன் போலச் சித்தரித்து செய்திகளையும், கருத்துப் படங்களையும் வெளியிட்டு வரும் இந்த ஊடகங்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பெற்ற ஜெயாவை மறந்தும்கூட குற்றவாளி என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை.
“குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து கூடா நட்பு கேடா முடியும் என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார், ஜெயலலிதா” என ஜெயாவை ஏதுமறியா அப்பாவியாக, நம்பி ஏமாந்து போன வெகுளிப் பெண்ணாக முன்னிறுத்துகிறது, ஆனந்த விகடன் (08.10.2014). அ.தி.மு.க. அடிமைகள் ஜெயாவின் மீதான தமது விசுவாசத்தை, பக்தியைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகின்றனர் என்றால், பார்ப்பன ஊடகங்களும் அவர்களுக்குச் சளைத்ததாகத் தெரியவில்லை. விகடன் குழுமம் ஜெயாவிற்காக உப்புக் கண்ணீரை உகுக்கிறது என்றால், கல்கி இதழோ இரத்தக் கண்ணீரே வடிக்கிறது.
“நல்ல கல்வியறிவு, விசயஞானம் உள்ளவர், ஏராளமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுள்ள அறிவாளி, சாமானிய மக்களிடம் பரிவு காட்டியவர்,  மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்றெல்லாம் பெயர் பெற்றுள்ள ஜெயலலிதா இத்தகைய தண்டனையை அடைந்தது அனைவர் மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியுள்ளது” எனப் படிக்கும் வாசகனே நெளியும் அளவிற்கு ஒரு குற்றவாளியை அனுதாபம் கொள்ளத்தக்க தியாகியைப் போலக் காட்டுகிறது, கல்கி (12.10.2014).
2ஜி, ஆதர்ஷ், நிலக்கரிச் சுரங்க ஊழல்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் ஊழலை இனியும் சகித்துக் கொள்ளக் கூடாது என அறம் பேசிய இப்பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகின்றன. “2ஜி முறைகேடு, நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற பல இலட்சம் கோடி ஊழல்களுக்கு முன்னால், 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு பொருட்டாகவே பொதுமக்கள் பார்வையில் படாதது ஜெயாவின் அனுதாபத்திற்கான காரணமாக இருக்கலாம்” என எழுதியும், (29.9.2014), “65 கோடி ரூபாவுக்கு 4 வருஷம் தண்டனைன்னா, 1,76,000 கோடி ரூபாவுக்கு 10,828 வருஷம் தண்டனை வருது” (28.9.2014) எனக் கணக்குப் போட்டுக் காண்பித்தும் ஜெயாவின் ஊழலை சப்பை மேட்டராகக் காட்ட முயலுகிறது, தினமணி.
தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்
தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்
போலீசு போடும் பொய் வழக்குகளைக்கூட நியாயப்படுத்தி எழுதும் குரூரப் புத்தி கொண்ட துக்ளக் சோ, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு குறித்து எந்தவொரு எதிர்வாதத்தையும் முன்வைக்காமல், குப்பையைப் போல அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார். “ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி, அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும் என்ற அளவுக்கு வெளியே பிரச்சாரம் நடந்தது” எனக் குறிப்பிட்டு, குன்ஹாவின் தீர்ப்பை அரசியல் நிர்பந்தம் காரணமாக அளிக்கப்பட்ட தீர்ப்பாகக் கொச்சைப்படுத்தியிருப்பதோடு, “அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில், எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வந்திருக்க முடியும்.  அதற்குத் தேவையான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்” எனக் கிசுகிசு பாணியில் தலையங்கமே தீட்டி, பழிவாங்கும் நோக்கில் ஜெயாவிற்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகக் காட்ட முயலுகிறார், அவர்.  மேலும், இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்னடைவோ, இல்லையோ, தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு சோதனைக் காலமாகிவிடும்” எனக் குறிப்பிடும் துக்ளக் சோ, இதன் மூலம் ஜெயாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தமிழகத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டனையாகக் காட்டி ஜெயாவைக் குற்றத்திலிருந்தும், தண்டனையிலிருந்து விடுவித்துவிடுகிறார்.
“உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் மேல்முறையீடுகளுக்குப் பிறகுதான், இந்தப் பிரச்சினை பற்றி முடிவான கருத்தைத் தெரிவிக்க முடியும். குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயலலிதா அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்கிற ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் பொய்யானது என்று தள்ளிவிட முடியாது” என எழுதி குன்ஹாவின் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளுகிறது, தினமணி (29.9.2014).
தினமணி கருத்துப்படம்
சொத்துக் குவிப்புக் குற்றத்தைச் சப்பையாகக் காட்டும் நோக்கில் தினமணி நாளிதழ் வெளியிட்ட கருத்துப்படம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இப்படி ஒதுக்கித் தள்ளும் தினமணி வைத்தியநாத அயரும், துக்ளக் சோ இராமஸ்வாமி அயரும் 2ஜி வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி விசாரிப்பதையே இறுதியான தீர்ப்பு போலக் காட்டி தி.மு.க.வின் வாயை அடைத்து வருகிறார்கள். ஒரு கீழமை நீதிமன்றம் ஜெயாவிற்கு அளித்த தண்டனையைத் தகுதியற்றதாகப் பார்க்கும் இக்கும்பல், 2ஜி வழக்கிலோ வேறோரு அளவுகோலைப் பிரயோகிக்கிறது. “ஜெயாவிற்கு எதிரான தீர்ப்பு அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தும். ஆனால், தி.மு.க.வின் 2ஜி ஊழல் கறை மற்றும் குடும்ப அரசியலை மக்கள் மறக்கவில்லை” எனக் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமின்றி ஒருதலைப்பட்சமாக எழுதுகிறார், துக்ளக் சோ (08.10.2014). பார்ப்பானுக்கும் சூத்திரனுக்கும் ஒரேவிதமான நீதி இருக்கக்கூடாது, இருக்க முடியாது என்பதுதான் இதன் மூலம் இக்கும்பல் சொல்லவரும் செய்தி.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்காக தமிழகத்தையே நிலைகுலையச் செய்தனர் அ.தி.மு.க. காலிகள்.  தமிழக அமைச்சரவையே பரப்பன அக்ரஹாரா சிறையின் முன் தவம் கிடந்தது. தனது விசுவாச அடிமையைத் தமிழக முதல்வராக்கி, அதன் மூலம் மிகவும் வெளிப்படையாகவே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார், ஊழல் குற்றவாளி ஜெயா. தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இழிநிலை குறித்து ஒரு வார்த்தைக்கூடக் கண்டித்துப் பேசாத பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின், அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்துதான் அதிகம் கவலை கொள்கின்றன.
அ.தி.மு.க. கும்பல் பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய வெறியாட்டங்களை ஊடகங்கள் வன்முறையாகச் சித்தரிக்கவில்லை.  “போராட்டம்” என்று திரித்து எழுதின. இது குறித்து துக்ளக் சோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ஒருநாள் கடையடைப்பு, பொதுச் சொத்து சேதம், தெருவில் ரகளை போன்றவை நடந்திருக்கின்றன. அடுத்தநாள் இவை போன்று கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறவில்லை. இதை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கே சீர்குலைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கேவலமான முறையில் நியாயப்படுத்தி பதில் அளித்தார், அவர். (துக்ளக், 15.10.2014)
“உங்க வீட்ல ஒருவன் ஜெயிலுக்குப் போனால் அழமாட்டீர்களா? தனி நபருக்குக் குடும்ப அளவில் என்றால், ஒரு தலைவிக்கு மாநில அளவில் நடக்கிறது” என்று இந்தக் கேவலத்திற்கு வியாக்கியானம் அளித்தது, தினமணி (02.10.2014).
ஜெயாவின் அரசியல் வாழ்வே இப்படிபட்ட வன்முறைகளும் ஆபாசக் கூத்துக்களும் நிறைந்ததுதான் என்பதற்கு மகளிரணி நடத்திய ஆபாச நடனம் தொடங்கி, மூன்று மாணவிகளை எரித்துக் கொன்றது வரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்து நாளேடோ, “தீர்ப்பு வெளியான நிமிடம் தொடங்கி, அதை அ.தி.மு.க.வினர்எதிர்கொண்டவிதமும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளும் அவர்களின் தலைவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.  கடையடைப்பு, வாகனங்கள் எரிப்பு, வன்முறைகள் இது போன்ற எதிர்வினைகள், ஜெயலலிதாவின் துணிவான, உறுதியான அணுகுமுறை மீது மதிப்பு கொண்டவர்களுக்கும்கூட அதிருப்தியையே உருவாக்கியுள்ளது. அடுத்து, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவைப் பிணையில் வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும்போதே, இங்கு அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அவர்களின் தலைவிக்கு மேலும் இடைஞ்சல்களை ஏற்படுத்துமே தவிர, எந்தவகையிலும் உதவாது என்பது சட்டத்தின் போக்கை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்” எனப் பதைபதைத்து தலையங்கம் (அக்.4) தீட்டியது.
மூத்த பத்திரிகையாளர் ஞாநி
“ஜெயா தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்” என இந்தியா டுடே இதழ் வழியாக வேண்டுகோள் விடுத்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி.
ஜெயாவின் தலையாட்டி பொம்மை என்பதைத் தவிர ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. ஓ.பி. முதல்வராகியிருப்பதும், அவரைப் பின்னிருந்து ஜெயா இயக்குவதும் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள அவமானம். ஆனால், இந்து நாளேடோ, “முதல்வர் பதவியில் தனக்குப் பதிலாக இன்னொருவரை அமர்த்திய விதம் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்று” என விசிலடித்து வரவேற்கிறது. மேலும், “ஜெயா தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து, அதன்பின் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும்” எனத் தனது ஆலோசனையைப் பணிவோடு முன்வைக்கிறது. (அக்.18)
உச்சநீதி மன்றம் ஜெயாவிற்காக சட்டத்தையே வளைத்து அளித்திருக்கும் பிணையை அ.தி.மு.க. அடிமைகள் மட்டுமா கொண்டாடினார்கள்?  புதிய தலைமுறை, தினத்தந்தி, பாலிமர் ஆகிய தொலைக்காட்சிகள் உற்சவ மூர்த்தி போல ஜெயா பெங்களூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டதைக் கொண்டாட்டமாக ஒளிபரப்பின. இதைக் கண்டு ஜெயா டி.வி.கூட கூச்சத்தில் நெளிந்திருக்கக் கூடும். ஊடகங்களில் ஜெயா டி.வி.க்கு இணையான ஊதுகுழலைக் குறிப்பிட வேண்டும் என்றால், அது தந்தி டி.வி.யாகத்தான் இருக்க முடியும். ஜெயாவிற்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதைக்கூட மூடிமறைத்து, மழுப்பலாகக் கூறும் அளவிற்கு அதனின் ஜெயா விசுவாசம் கொடிகட்டிப் பறந்தது.
ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம். தீர்ப்பு குறித்து கருத்துக் கூறாமல் தமது விசுவாசத்தைப் பறைசாற்றிக் கொண்டவர்கள் மத்தியில், வாயைத் திறந்த ஒரு சிலரோ ஜெயாவிற்கு அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துக்களைப் பதிவு செய்தனர்.  குறிப்பாக, தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரான ஞாநி, “தன் கடந்த 23 வருட அதிகாரப் பயணத்தில் தன் தவறுகள் என்னென்ன, நண்பர்கள் முதல் கொள்கைகள் வரை தன் தேர்வுகளில் நடந்த பிழைகள் என்னென்ன? என்றெல்லாம் தனியே, தன்னந்தனியே அமர்ந்து ஜெயலலிதா யோசிப்பாரானால், இந்த 30 வருட அரசியலையும்கூடத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவராகத் தன்னை வடிவமைத்துக் கொண்டுவிடலாம். அதற்கான திறனும் சாத்தியமும் உடையவர்தான் ஜெயா” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் (இந்தியா டுடே, அக்.29). ஜெயா, பார்ப்பன பாசிசத் திமிரும் அகங்காரமும் நிறைந்த தனது நடவடிக்கைகளின் மூலம் எத்தனை தடவை இந்த அறிவுஜீவிகளின் முகத்தில் காரி உமிழ்ந்தாலும், அவர்களோ அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு, சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல, ஜெயாவைத் திருத்தியே தீருவது என்ற கனவோடு எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஜெயாவை அம்மா என அழைக்கும் அ.தி.மு.க. தொண்டனின் பிழைப்புவாதத்தைவிட, ஜெயாவை அறிவும் திறமையும் கொண்டவராகக் காட்டும் அறிவுஜீவிகளின் காரியவாதக் கற்பிதம்தான் சகிக்கவே முடியாத அசிங்கமாகத் தெரிகிறது.
ரெங்கராஜ் பாண்டே
தந்தி டி.வி.யின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே – ஊடகத்துறையில் உள்ள ஜெயா விவசாயிகளுக்கு ஒரு வகை மாதிரி.
2ஜி, நிலக்கரி ஊழல் ஆகியவற்றைக் காட்டி ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் மோசடித்தனத்தில் மட்டும் ஊடகங்கள் ஈடுபடவில்லை. “பொதுமக்கள் மட்டும் யோக்கியமா? அவர்களும்கூடத்தான் சமயம் வாய்த்தால் ஊழலில் ஈடுபடுகிறார்கள். நீதிபதி குன்ஹா தீர்ப்பு வந்த நாளின் கலவரச் சூழலில், ரூ.14-க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட்டை ஒரு கடைக்காரர் ரூ.20-க்கு விற்கிறார். ரூ.30-க்குச் செல்ல வேண்டிய சவாரிக்கு ரூ.100 கேட்கிறார் ஆட்டோக்காரர்” என உதாரணங்களைக் குறிப்பிட்டு, மக்களைக் குற்றவாளிகளாக்கி, ஜெயாவை விடுவித்துவிட்டது, இந்து நாளேடு. (எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?, இந்து, செப்.30).  1,76,000 கோடி ரூபாய்க்கு 66 கோடி ரூபாய் ஈடாகாது என வாதாட வந்த ஊடகங்கள், 66 கோடி ரூபாய் ஊழலை 20 ரூபாய்க்கு ஈடாக்கிவிட்டன.
நடுநிலை எனக் கூறிக்கொள்ளும் ஊடகங்களின் குதர்க்கமும் வக்கிரமும் நிறைந்த இந்த ஆவுகளை ஒப்பிடும்பொழுது, “அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர்களிடமே 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும்பொழுது, அம்மாவிடம் 66 கோடி ரூபாய் சொத்து இருக்க முடியாதா?” என ஜெயாவின் குற்றத்தை நியாயப்படுத்திப் பேசும் அ.தி.மு.க. தொண்டன் யோக்கியவானாகத் தெரிகிறான்.
- குப்பன் vinavu.com

கருத்துகள் இல்லை: