வியாழன், 20 நவம்பர், 2014

ஜெயா வழக்கில் ஆச்சாரியா மீது அழுத்தம் கொடுத்த பா.ஜ.,வினர் மீது உளவுத்துறை ரகசிய விசாரணை

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து செயல்பட்ட பி.வி.ஆச்சாரியா, சமீபத்தில் சுயசரிதை எழுதி வெளியிட்டார். அதில், தன்னை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகச் சொல்லி, கர்நாடக பா.ஜ., அரசு அழுத்தம் கொடுத்தது என்றும், ஜெயலலிதா தரப்பில், தன்னை பலமுறை, நேரிலும், போனிலும் அச்சுறுத்தினர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.இந்த விவகாரம், கர்நாடக பா.ஜ.,வில், தற்போது கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா வரையில் கொண்டு செல்லப்பட, இதுகுறித்து, தீவிரமாக விசாரிக்குமாறு, மத்திய உளவுத் துறைக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக ஆச்சாரியா, சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து பணியாற்றிய காலங்களில், அவரை வந்து சந்தித்தவர்கள், அவருக்கு போன் செய்தவர்கள் எண்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதில், கர்நாடக பா.ஜ.,வினர் மட்டுமல்லாமல், தமிழக பா.ஜ.,வினர் சிலருடைய தொலைபேசி எண்களும் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
அதோடு, டில்லியில் இருந்தும், பா.ஜ., தரப்பிலும், சிலர், ஆச்சாரியாவிடம் பேசியிருக்கும் தகவலும் தெரிய வந்திருக்கிறது. இப்படி பல கட்டங்களிலும், ஆச்சாரியாவிடம் பேசியிருக்கும் தகவல்களையெல்லாம் சேகரிக்கும் உளவுத் துறையினர், இறுதியாக, அந்த தகவல்களை வைத்து, ஆச்சாரியாவிடமும் பேசி, எல்லாவற்றையும் உறுதி செய்திருப்பதாகவும் தெரிகிறது.


சிலருக்கு கிலி:


இந்த தகவல், டில்லியில் கசிய, ஆச்சாரியாவிடம் பேசிய பா.ஜ., தலைவர்கள் சிலருக்கு, கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த அச்சுறுத்தல் தொடர்பாக, அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, விரைவில், பிரதமர் மோடிக்கு அறிக்கையாக வழங்கப்படும் என்பதால், அதை பார்த்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், தொடர்புடைய பலரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து, உளவுத் துறை வட்டாரங்களில் கூறியதாவது:நீதித் துறையின் நடைமுறையில், எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதை, ஆரம்ப கட்டத்தில் இருந்தே, பிரதமர் மோடி வலியுறுத்தி சொல்லி வருகிறார்.அதனால் தான், வழக்குகளில் சிக்கி இருப்பவர்களைக் கூட, தன் அமைச்சரவையில் சேர்க்காமல், தள்ளி வைத்திருக்கிறார். இதனால், மோடி மீதே, கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையே புறக்கணிக்கும் பிரதமர் மோடி, சொத்து குவிப்பு வழக்கை, நீர்த்துப் போக செய்யும் விதமாக, பா.ஜ., அரசும், பா.ஜ.,வினரும் நெருக்கடி கொடுத்தனர் என்ற ஆச்சாரியாவின் குற்றச்சாட்டை, பிரதமர் மோடி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நடவடிக்கை:



அதனால், ரகசியமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை நடந்திருக்கிறது. மொத்த தகவல்களும், விரைவில், பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து, அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: