திங்கள், 17 நவம்பர், 2014

நமக்கு வாய்த்த 37 எம்.பி க்கள் ? கேள்வியே கேட்பதில்லை! ஒரே அமைதி சதா அம்மா பயம்?

ஜெயலலிதா என்ற தனி மனுஷியை குஷிப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் அளப்பெரிய லாபமீட்டுவதே குறிக்கோளாக கொண்டிருக்கும் பிரதிநிதிகளை தேர்வு செய்த மக்கள் தான் தங்கள் தவறை முதலில் உணர வேண்டும். சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1960 களில் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த திமுக உறுப்பினர்கள் புதியவர்களாயிருந்தும் மாநில நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் எதிர்க்கட்சிகளோடு இணைந்து குரலெழுப்பி காரியம் சாதித்தார்களே.....அது என் இப்போது தயக்கமாக மாறி விட்டது? மக்களிடம் இல்லாத எழுச்சி. மக்களுக்கு இல்லாத அக்கறை அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எப்படி வரும். ஒரு ரூபாய் கொடுத்தால் அம்மா கடையில் இட்லி, இப்போதைக்கு அது போதும் என்ற அலட்சியம் மேலோங்கி விட்டது. எது சரி எது தவறு என்று உணர முடியாத நிலையில் மக்களின் மனோபாவம் இருக்கும் வரை தமிழகம் பின்னோக்கித்தான் போகும். 
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசின் பல துறைகளின் திட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் கேள்விகள் எழுப்புவதற்கான தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து, கேள்விகள் எழுப்ப, தமிழக எம்.பி.,க்கள் தயக்கம் காட்டுவதாகவும், நடைமுறைகள் பற்றி தெரியாததால், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது கேள்வி நேரம். ஒவ்வொரு நாளும், காலை, 11:00 மணிக்கு துவங்கி, 12:00 மணி வரை கேள்வி நேரம் நடக்கும். அப்போது, லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும், எம்.பி.,க்கள் பெருமளவில் ஆஜராகி இருப்பர்.அதற்கு காரணம், எம்.பி.,க்கள் எழுப்பும், காரசாரமான கேள்விகளையும், அதற்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே


24ல் துவக்கம்:வரும், 24ம் தேதி, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஒவ்வொரு துறைகளுக்கான கேள்விகளையும், எந்தெந்த தேதியில் அனுப்ப வேண்டும் என்பது குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்துவதோடு, அதற்காக கோடிக்கணக்கான பணத்தையும் செலவிடுகிறது. ஒவ்வொரு துறையிலும், பரவலாக அறியப்படாத திட்டங்கள் பல உள்ளன. இவற்றில், தமிழகத்திற்கு, என்னென்ன திட்டங்களை மத்திய அரசு தருகிறது... மற்ற மாநிலங்களுக்கு கிடைத்து, தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும் திட்டங்கள் என்ன... அப்படியே கிடைத்தாலும், அவை எந்தளவில் நிறைவேற்றப்படுகின்றன; அவற்றுக்கான நிதி என, நிறைய தகவல்களை, கேள்வி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக பெற முடியும்.எம்.பி.,க்கள், சபையில் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும். எம்.பி., கேள்வி கேட்கும்போது, பிரதமரும், மற்ற அமைச்சர்களும் கவனித்துக் கொண்டிருப்பர். துறையின் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் அதை கவனிப்பர்.

அமைச்சர் பதில்:அமைச்சர் அளிக்கும் பதில் விவரம் மற்றும் உறுதிமொழி போன்றவற்றை, அதிகாரிகள் குறிப்பெடுத்து, அவற்றை விரைந்து நிறைவேற்ற வழி ஏற்படுத்துவர். கேள்வி நேரத்தை பயன்படுத்தும் எம்.பி.,க்கு பொறுப்பான உறுதிமொழியை அளிக்க வேண்டிய கடமைக்கு, மத்திய அரசை கொண்டு செல்ல முடியும். தற்போதைய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின் போது, தமிழக எம்.பி.,க்கள் பலர், எவ்வித கேள்விகளையும் கேட்கவில்லை. எம்.பி.,க்களில் பலர் புதியவர்கள் என்பதால், பார்லிமென்ட் நடைமுறைகள் புரியாமல், கேள்வி நேரத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம் என, அப்போது சொல்லப்பட்டது.ஆனால், வரும் குளிர்கால கூட்டத் தொடரிலும், தமிழக எம்.பி.,க்கள் பலர், கேள்விகள் கேட்க தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இவ்வளவு நாட்களாகியும் நடைமுறைகள் தெரியாமல் இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. தற்போதைய நிலவரப்படி, தமிழக எம்.பி.,க்களிடமிருந்து வந்துள்ள கேள்விகளின் எண்ணிக்கை, சொற்பமாக இருக்கிறது.

சம்பளத்துடன் தனி அலுவலர்: கேள்விகளை தயார் செய்ய ஒவ்வொரு எம்.பி.,யும், தனி அலுவலர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். அவருக்கு சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாயும், எழுது பொருட்களுக்காக, 4,000 ரூபாயும் வழங்கப்படும். கேள்விகளை தயார் செய்து, அவற்றை தொகுத்து, உரிய நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது தான்
இவர்களுடைய பணி. ஆனால், இதுபோன்ற அலுவலர்களை, எத்தனை தமிழக எம்.பி.,க்கள்வைத்துள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது.

10 கேள்விகள் மட்டும்...:பார்லிமென்டில் கேள்வி கேட்க விரும்பும் எம்.பி.,க்கள், 15 நாட்களுக்கு முன்னதாகவே, கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கேள்விகளில், 10 கேள்விகள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டு பதில் பெறப்படும். கேள்வி கேட்ட, எம்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமான பதில், கேள்வி நேரத்தன்று காலையில் வழங்கப்படும்.அந்த பதில் மூலம், எம்.பி., துணைக் கேள்விகள் கேட்கலாம். சம்பந்தப்பட்ட அமைச்சரை மடக்கும் விதத்தில் கேள்விகள் கேட்டு, தங்களுக்குரிய பதிலை பெறலாம்.ஆனால், தமிழக எம்.பி.,க்களைப் பொறுத்தவரை, துணைக்கேள்விகளை கேட்பது அரிதாகவே உள்ளது. அதற்கு, மாநிலத்தின் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்களை, அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- நமது டில்லி நிருபர் -;தினமலர்.com

கருத்துகள் இல்லை: