வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மதுரை மரகதலிங்கம் மாயமாகி மீண்டும் வந்த விவகாரத்தில் மர்மம்

நவீன காலத்தில் ஊழல் என்பது பல்வேறு வகைகளில் விரிந்து கொண்டே
செல்கிறது. அரசு பணத்தை கையாடல் செய்வது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது என்பதெல்லாம் போய், அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த சொத்துக்களும் கொள்ளை போகின்றன. இந்த வகையில், மதுரையில் விலை மதிப்புமிக்க மரகதலிங்கம் ஒன்று மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த குன்னத்தூர் சத்திரம் இடிக்கப்பட்டபோது, அங்கு வழிபாட்டில் இருந்த பச்சை மரகதலிங்கம் பத்திரமாக மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபூர்வமான இந்த மரகதலிங்கம் திடீரென மாயமானது. இது தொடர்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மீது கூட சந்தேகம் கிளப்பப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு, அதன் விசாரணை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


ஆனால், மரகதலிங்கம் மாயமானது குறித்து மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. அதனால், போலீசாரும் வழக்கு பதிவு செய்யாமல், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். லிங்கம், சிங்கப்பூருக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூட புகார் எழுந்தது. ஒரு விவசாயி நிலத்தில் சாதாரண சிலை கிடைத்தால் கூட ஓடி சென்று மீட்கும் வருவாய்த் துறை அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகளோ பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மாயமான விஷயத்தில் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. இந்த விவகாரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரிதாக வெடித்தது. இதில், ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மாநகராட்சி ஆணையர் அறைக்கு ஒரு பச்சை மரகதலிங்கம் வந்து சேர்ந்துள்ளது. அதோடு ஒரு தாமிர பட்டயமும் இருந்தது. மாயமான லிங்கம் திடீரென்று வந்தது எப்படி? அதை யார் கொண்டு வந்து வைத்தது என்பது மர்மமாக உள்ளது. இது குன்னத்தூர் சத்திரத்தில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் பச்சை மரகதலிங்கமா அல்லது  வேறு சாதாரண லிங்கமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த மர்மம் எப்போது கலையும் என தெரியவில்லை.  அரசு சொத்துக்கள் பறிபோகும் போது அதிகாரிகள் நேர்மையுடன் விரைவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதை தடுக்க முடியும். ஆனால், அதிகாரிகளே சில சமயங்களில் உடந்தையாக இருப்பது வேதனை. - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: