திங்கள், 2 செப்டம்பர், 2013

பட அதிபர் சங்க தேர்தல் : தாணுவின் வேட்பாளர்களை பாலச்சந்தர் அறிமுகம் செய்தார் ! ஏராளமான சலுகைகளை அறிவித்தார் !

பட அதிபர்கள் சங்க தேர்தலில் போட்டி இடும் எஸ்.தாணு அணியின் வேட்பாளர்களை டைரக்டர் கே.பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.தாணு அண தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 2013–2015 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 7–ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.இந்த தேர்தலில், கேயார் தலைமையில் ஒரு அணியும், எஸ்.தாணு தலைமையில் இன்னொரு அணியும், சிவசக்தி பாண்டியன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. கேயார் அணி வேட்பாளர்களை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
எஸ்.தாணு அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. வேட்பாளர்களை டைரக்டர் கே.பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த அணியில் தலைவர் பதவிக்கு எஸ்.தாணு, துணைத் தலைவர்கள் பதவிக்கு எஸ்.கதிரேசன், பவித்திரன், செயலாளர் பதவிக்கு சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி ஆகியோர் போட்டி இடுகிறார்கள்.செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டி இடுகிறார்கள். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து டைரக்டர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:–
ஆந்திராவில் ஒற்றுமை
ஆந்திராவில் சினிமா படத்தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழ் திரை உலகில் மட்டும் ஏன் ஒற்றுமை இல்லை என்று புரியவில்லை. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இனிமேலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக் கேட்டுக் கொள்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. 45 வருட சினிமா அனுபவத்தில் இதை சொல்கிறேன். பட அதிபர்களுக்குள் பல விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். தேர்தல் வரும் போகும். அதற்காக சண்டைப்போட்டுக் கொள்ளக் கூடாது. திரைத்துறையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு கே.பாலச்சந்தர் பேசினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எஸ்.தாணு கூறியதாவது:–
தமிழ் படங்களுக்கு முன்னுரிமை
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், சங்க உறுப்பினர்களுக்கு ½ கிரவுண்டு நிலம் வழங்கப்படும். நிரந்தர உறுப்பினருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.20 லட்சமும் சங்கத்தின் மூலமாக பெற்றுத் தரப்படும். சென்னை நகரில் தமிழ் படங்களை திரையிட முன்னுரிமை அளித்திடவும், விகிதாச்சார அடிப்படையில் படங்களை திரையிட வலியுறுத்தியும், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்வோம்.மேற்கண்டவாறு எஸ். தாணு கூறினார்

கருத்துகள் இல்லை: