திங்கள், 2 செப்டம்பர், 2013

மாற்று பண்பாட்டு கருத்தரங்கம் : பொது எதிரியான ஆணாதிக்கத்திற்கு துணைபோகும் சமயம் ஜாதி ....

மாற்றுப் பண்பாடு கருத்தரங்கம் (படங்கள் )
காலங்காலமாக சமூகப் பொதுவெளிகள் அனைத்தும் ஆண்களுக்கானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை பெண்களுக்கும் பொதுவானதாக மாறும் பொழுதுதான் மேம்பட்ட சமுதாயத்தை அடைய முடியும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கா.பிரகதீஸ்வரன்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆலங்குடி கிளைக்கூட்டம் கிளைத் தலைவர் சுபி தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆலங்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘மாற்றுப் பண்பாடு’ குறித்து உரையாற்றிய பிரகதீஸ்வரன் மேலும் கூறியதாவது:சமூகம் நாளுக்கு நாள் மேம்பட்டே வருகிறது. இது அறிவியலுக்குப் புறம்பான மதவாதிகளையும், பிற்போக்குச் சக்திகளையும் கலக்கமடையச் செய்கிறது. எந்த நேரத்திலும் தங்கள் கூடாரம் மடமடவெனச் சரிந்துவிடக்கூடும் என்கிற அச்சம் அவர்களை வதைக்கிறது.இதனால்தான் திட்டமிட்டே பொது எதிரியை உருவாக்கி மதவெறியை வளர்த்து வருகிறார்கள். இந்த மதவெறிக்கு வலுச்சேர்க்கும் வகையில் சாதியக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்த முனைகிறார்கள்.இதனொரு பகுதியாகத்தான் பெண்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றன. காலம் காலமாக தேசம் முதல் தெரு வரை அனைத்துப் பொது வெளிகளும் ஆண்களுக்கானதாகவே கட்டமைக்கப்பட்டு வருகிறது. பெண்கள் இரண்டாம்பட்சமானவள் எனக்கிற பொதுப்புத்தி ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுதான் டில்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, நள்ளிரவு நேரத்தில் பெண் வீதியில் நிற்கலாமா என்கிற கருத்தியல் நியாயப்படுத்தப்படுகிறது. இத்தகைய பொதுப் புத்தியை உடைத் தெறியாமல் சமூகத்தை மேம்படுத்த முடியாது. சமூகத்தை சகலருக்குமானதாக மாற்றுகின்ற மாற்றுப் பண்பாட்டை நோக்கி நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் எனப் பேசினார் கூட்டத்தில் தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து மாநில துணைத்தலைவர் ஆர்.நீலா பேசினார். மாவட்டச் செயலாளர் ரமா.ராமநாதன், பொருளாளர் சு.மதியழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர்கள் தமிழ்வரதன், ஜெய்சங்கர் ஆகியோர் கவிதை வாசித்தனர். க.சரவணன், என்.தமிழரசன், ராஜா, சாகுல் ஹமீது ஆகியோர் கிராமியப் பாடல்களைப் பாடினர்.முன்னதாக கிளையின் துணைத் தலைவர் எஸ்.ஏ.கருப்பையா வரவேற்க, செயலாளர் எல்;.வடிவேல் நன்றி கூறினார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை: