வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வன்சாரா: மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் ! கூட்டு கொலையாளிகளை கைவிட்ட மோடி

வன்சாரா காவலில்வினவு : குஜராத்தில் மோடியின் அரசியல் தலைமையும், உயர் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ‘மோதல்’ கொலைகளுக்கு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பழி வாங்கப்படுகிறார்கள் என்றும் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இத்தகைய வழக்குகளில் சிறையில் வாடும் போது முதலமைச்சர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் சுதந்திரமாக உலாவுகிறார்கள் என்றும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி டி ஜி வன்சாரா குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்படும் குஜராத் அரசு உண்மையில் அகமதாபாத்தின் சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குத்தலாக பரிந்துரைத்துள்ளார். டி ஜி வன்சாரா 2002 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் முதலில் அகமதாபாத் நகரின் துணை ஆணையராகவும், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு படையின் துணை தலைமை ஆய்வாளராகவும் பணி புரிந்தவர். போலி மோதல் (என்கவுண்டர்) வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அகமதாபாத்திலும், மும்பையிலும் சிறை வைக்கப்பட்டுள்ள வன்சாரா, தான் தெய்வமாக போற்றிய நரேந்திர மோடி தன்னையும், சக போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்றாமல் கை விட்டு விட்டது குறித்து மனம் கசந்து எழுதியிருக்கிறார்.
தனது நம்பிக்கையை இழந்து விட்ட குஜராத் அரசுக்கு இனிமேலும் சேவை செய்ய விரும்பவில்லை என்று தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், ஓய்வூதிய சலுகைகளையும் தியாகம் செய்வதாகவும் கூறியிருக்கிறார். போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் ஏற்கனவே அவர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தற்போது குஜராத்திலும் மும்பையிலும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்க முயற்சி செய்யாததோடு, தாம் வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளவும், அரசியல் ஆதாயம் தேடவும், போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.
சோராபுதீன் போலி மோதல் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்ட போது நாட்டிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை வைத்து சிபிஐ கீழமை மன்றம், உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை போய் பிணை வாங்கிய மோடியின் குஜராத் அரசு, போலீஸ் அதிகாரிகள் எம் என் தினேஷ், நரேந்திர அமீன் போன்றவர்கள் தமது சொந்த முயற்சியில் பிணை வாங்கிய போது, அதை எதிர்த்து முறையீடு செய்து அதை ரத்து செய்திருக்கிறது. தம்மை பாதுகாத்துக் கொள்ள, போலி மோதல் வழக்கு விசாரணையை மும்பை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதித்து போலீஸ் அதிகாரிகளை கைவிட்டதோடு சிக்கலில் தள்ளியுள்ளது. போலி மோதல் வழக்குகளை இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வழி செய்து, வன்சாரா மீதான வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக மாற்றியிருக்கிறது, அதாவது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்குத் தண்டனை வழங்கக் கூடிய வழக்காக மாறியிருக்கிறது.

மோடி போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.
இதனால் வன்சாரா முதலான போலிஸ் கிரிமினல்கள் யோக்கியவான்கள் என்பதல்ல. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இந்த கிரிமினல்களை தலைமை தாங்கிய மோடி இன்று கைவிட்டுவிட்டார் என்பதே வன்சாரா வகையறாக்களின் குற்றச்சாட்டு. பிரதமர் கனவில் இருக்கும் மோடிக்கு இத்தகைய போலிஸ் அதிகாரிகளெல்லாம் கிள்ளுக்கீரைகள் என்பது இந்த கிள்ளுக் கீரைகளுக்கு தெரியவில்லை.
இது எல்லாம் சேர்ந்து வன்சாராவின் உதாரான தைரியத்தையும் அதிகாரத்துவ கட்டுப்பாட்டையும் உடைத்து போட்டிருக்கிறது. குஜராத் அரசுக்கு அனுப்பியிருக்கும் தனது 10 பக்க ராஜினாமா கடிதத்தில் குஜராத்தில் நடத்தப்பட்ட போலீஸ் படுகொலைகளின் பின்னணியையும் வரலாற்றையும் விளக்குகிறார்.
2002-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. இந்தச் சூழலில் “பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையைக் கொண்டிருப்பதால், குஜராத் காஷ்மீரைப் போல மாறிவிடாமல் தடுக்க, பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சகிப்பின்மை அற்ற கொள்கை’ அரசின் உச்ச மட்டங்களில் (அதாவது முதலமைச்சர் நரேந்திர மோடி) வகுக்கப்பட்டது” என்றும், அந்த கொள்கையின்படிதான் மோதல் கொலைகள் குற்றப் பிரிவு போலீசாராலும், பயங்கரவாத தடுப்பு போலீசாராலும் நடத்தப்பட்டன என்றும் வன்சாரா “திருத்தமாக, அழுத்தமாக” பதிவு செய்திருக்கிறார்.
மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் மட்டங்களிலிருந்து தினமும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது அவர் சிறையில் அடைபட்டிருக்கும் நேரத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும், குஜராத் போலீசின் கடமை உணர்வும், ‘தேச பக்தி’யும் மோடி போன்றவர்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புலம்பியிருக்கிறார். நரேந்திர மோடியின் நம்பிக்கைகுகந்த நபராக இருந்து, மாநில நிர்வாகத்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமித் ஷா போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அப்படி என்ன செயல்களுக்காக வன்சாராவும் பிற போலீஸ் அதிகாரிகளும் மோடி அரசால் பயன்படுத்தப்பட்டனர் என்று பார்க்கலாம்.
இஷ்ரத் ஜஹான் குடும்பம்
போலி மோதலில் கொல்லப்பட்ட மும்பை மாணவி இஷ்ரத் ஜஹானின் குடும்பம்.
குஜராத்தில் இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு, 2003 மார்ச் மாதம் மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டிய மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்து கிடந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொடா அடக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் குஜராத் உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து விட்டது.
ஹரேன் பாண்டியாவை கொன்றது யார் என்ற ‘மர்மம்’ நீடிப்பது ஒரு புறமிருக்க, மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும், ராஜஸ்தான் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமாகிய சையத் சோராபுதீன் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான். சோராபுதீனின் மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதீன் கொல்லப்பட்ட போது உடனிருந்ததாக சொல்லப்படும் துளசிராம் பிரஜாபதி என்பவன் 2006-ம் ஆண்டு போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்டான்.
இவை மோடி அரசு ‘முஸ்லீம் பயங்கரவாதிகளை சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து, குஜராத்தை அமைதி தவழும் மாநிலமாக பராமரிப்பதற்கு’ நடத்திய கொலைகளுக்கு உதாரணங்கள். ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்தது அவரது கொலைக்கான அரசியல் பின்னணி. ஹரேன் பாண்டியாவையும், அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மோடியின் கையாள் சோராபுதீனையும், சோராபுதீன் கொலைக்கு சாட்சியாக இருந்த கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி இவர்களையும் கொலை செய்ததுதான் நரேந்திர மோடி அரசின் ஏவலில் நடத்தப்பட்ட வன்சாரா போன்ற போலீஸ் அதிகாரிகளின் ‘தேசபக்த’ பணியாக இருந்திருக்கிறது. குஜராத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த மோடி எடுத்த இந்த கொள்கை முடிவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் பொறுப்பு என்றுதான் இப்போது வன்சாரா கூறுகிறார்.
இது போலவே குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மத்திய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.
செப். 2009-ல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல் நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்தது.
வன்சாரா சோராபுதீன் போலி மோதல் வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டு குஜராத் சிஐடியால் கைது செய்யப்பட்டார். 2012 வரை சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2012-ல் துளசிராம் பிரஜாபதி போலி மோதல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து சாதிக் ஜமால் போலி மோதல் வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்கு இவற்றிலும் தொடர்புடையதாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
“சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். அந்த மோதல் சம்பவங்களின் போது அரசியல் தலைமை தொடர்ந்து அதன் ஊக்குவிப்பு, வழி காட்டல், கண்காணிப்பை மிக நெருக்கமாக வழங்கி வந்தது.” என்று முழக்கமிடும் வன்சாரா,
வன்சாரா, மோடி
மரண வியாபாரி மோடியும், விற்பனை பிரதிநிதி வன்சாராவும்.
“யார் போலீசை பாதுகாக்கிறார்களோ அவர்கள் போலீசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இத்தகைய வழக்குகளில் பரஸ்பர பாதுகாப்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும்  போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள எழுதப்படாத சட்டம். அரசாங்கமும், போலீஸ் அதிகாரிகளும் ஒரே படகில் போகிறார்கள், சேர்ந்து மிதக்க வேண்டும் அல்லது சேர்ந்து மூழ்க வேண்டும். ஒரு தரப்பு இன்னொரு தரப்பை ஏமாற்றி, தான் மட்டும் மிதந்து மறு தரப்பை மூழ்கடிக்க முடியாது, அரசாங்கத்தினாலும் முடியாது, போலீஸ் அதிகாரிகளாலும் முடியாது.” என்று மோடிக்கு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
குஜராத்தில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கவோ, அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்யவோ நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட மோடி பாணி வளர்ச்சிப் பணிகளுக்காகவோ, மக்கள் மத்தியில் எழக் கூடிய எதிர்ப்புகளை முடக்கி வைப்பதற்கு “இத்தகைய ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்’ முக்கியமானவை. “நானும் எனது சக அதிகாரிகளும் செய்த தியாகம் மட்டும் இல்லை என்றால், தேசிய அளவில் மோடி தூக்கிப் பிடிக்கும் “குஜராத் வளர்ச்சி மாதிரி” சாத்தியமாகியிருக்காது.” என்கிறார் வன்சாரா. “மோடி இந்தியாவிற்கு தனது கடனை தீர்ப்பதாக சொல்லியிருக்கிறார். முதலில் தனக்காக உழைத்த போலீஸ் அதிகாரிகளுடனான தனது கடனை தீர்க்க வேண்டும்” என கழுத்தில் துண்டை போட்டு முறுக்கியிருக்கிறார்.
மரண வியாபாரி மோடியின் தலைமை விற்பனை பிரதிநிதி இப்போது வாய் திறந்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் சதி, பத்திரிகைகளின் நாடகம், தன்னார்வலர்களின் சூழ்ச்சி என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் மோடி, ஹரேன் பாண்டியாவை பேச விடாமல் செய்தது போல, குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்தும் போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா போன்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அடக்க முனைவது போல, வன்சாரா போன்ற கையாட்களை மௌனிப்பதற்கு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-vinavu,com 

கருத்துகள் இல்லை: