தங்க மீன்கள்தங்க மீன்கள்சில படங்கள் விமரிசிக்க தெரியாததால் இரசிக்கப்படுகின்றன. சில படங்களோ இரசிக்கத் தெரியாததால் விமரிசிக்கப் படுகின்றன. அதே நேரம் ஒரு படம் பெறும் பாராட்டு எல்லாம் உண்மையிலேயே ரசிப்பதிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பதில்லை. உரையாடலும் கருத்துருவாக்கமும் சம்பிரதாயமான சடங்குகளாக கற்றுத் தரப்படும் காலமிது. ஆனால் கூர்மையான விமரிசனமும், நுட்பமான ரசனையும் இரு துருவங்கள் அல்ல. ஒரு நேர்த்தியான கலையை அனுபவிக்கத் தெரிந்தோரே நேர்த்தியற்றதை சரியாக ஆராயவும் முடியும்.
சிறுமி செல்லம்மாவின் குளத்தில் மின்னும் தங்கமீன்கள் நம் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகோடு சமகால வாழ்க்கையில் நீந்திக் கொண்டே பெரியவர்களின் மூடுதிரையை அகற்றிக் காட்டுகிறது தங்க மீன்கள். அதை வரித்துக் கொள்ள தடை போடும் நமது ரசனையை மாற்றிக் கொள்ள முடியுமா? முயன்று பார்ப்போம்.

________
ரு சில காட்சிகளிலேயே செல்லம்மாவின் ஊரும், குளமும், மலையும், ரயிலும், வீடும், பகலிரவும், பள்ளியும், மனிதர்களும் நமக்கு மிகவும் பழக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். கதையும் காட்சியும் அவ்வளவு வேகமாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. பசுமையை விதவிதமான வடிவில் போர்த்திக் கொண்டிருக்கும் அந்த ஊரில் கல்யாண சுந்தரம் எனும் கல்யாணியின் பொருளியல் வாழ்க்கை வறண்டு போயிருக்கிறது. இடையிடையே அந்த வறட்சி நிலை குலைய வைத்தாலும் மகளோடு மீட்டும் நேரத்தில் அவன் அந்த ஊரின் பசுமையை விஞ்சுகிறான். மகளின் மகிழ்ச்சி தவிர அவனுக்கு வேறு தேவைகளோ கடமைகளோ முக்கியமில்லை.
அதனால் அப்பா மகள் உறவும் பாசமும்தான் இப்படத்தின் மையக் கதை என்று பலரும் நம்புகிறார்கள். காட்டப்படுவதை உணர்ந்த விதத்திலும், பழக்கப்படுத்தப்பட்ட உணர்ச்சியிலும் அவர்கள் அப்படி புரிந்து கொண்டாலும் கதையின் கரு அதுவோ அல்லது அது மட்டுமோ அல்ல. மகளுக்கான முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை, மகளோடு இருக்கும் அப்பாக்கள் பாக்கியசாலிகள் முதலான படத்தின் (கொஞ்சம் அபத்தமான) விளம்பர வாசகங்களும் கூட கதையை அப்படித்தான் தந்தை மகள் சட்டகத்திற்குள் திணிக்கின்றன.
சென்டிமெண்டை தவிர்த்து விட்டு எந்த ஒரு தமிழ் சினிமாவும் அளவிடப்படுவதில்லை என்பது கூட இந்த மயங்குதலை தோற்றுவிக்கலாம். இதனால் படத்தில் அப்பா மகள் பாசம் இல்லை என்பதல்ல. அது இவ்வளவு அதிகமாகவும் கொஞ்சம் மிகையாவும் இருப்பது ஏன் என்பதே முக்கியம்.
மூன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் செல்லமா ‘மந்தமான’ ஒரு சிறுமி. கற்றுக் கொள்வதில் சக மாணவர்களோடு மிகவும் பின்தங்கி இருப்பதாக வகுப்பு ஆசிரியைகளால் அவ்வப்போது எரிச்சலுடன் திட்டப்படுகிறாள். அந்த கணிப்பு பள்ளியோடு முடியாமல் வீடு வரை செல்வாக்கு செலுத்துகிறது. கல்யாணியின் பெற்றோரும், மனைவியும் கூட செல்லம்மா அப்படி இருப்பதை வைத்து வருத்தமோ, கோபமோ, எரிச்சலோ அடைகிறார்கள். இயலாமை அல்லது விதி என நினைத்து நொந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
தனது மகள் கற்றுக் கொள்வதில் குறைபாடு உடையவள் என்பதை கல்யாணி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரம் அதை ஒரேயடியாக மறுக்கும் வண்ணம் நம்பிக்கையூட்டும் விதமாக வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. அந்த தனியார் பள்ளிதான் தனது மகளுக்கு சிறப்பான கல்வி கொடுக்க முடியும் என்று ஆரம்பத்தில் அவனும் நம்புகிறான். இந்த முரண்பாட்டில் மற்றவரால் மந்தமானவள் என்று ஒதுக்கப்படும் மகளோடு கூடுதல் பாசத்துடன் பழகுகிறான். அவளது குழந்தை உலகிற்கு சென்று கதைகள் சொல்கிறான். சுற்றிக் காட்டுகிறான். விருப்பப்படும் அனைத்தையும் செய்கிறான். அவற்றில் சில்வர் மேன் போல சில கோமாளித்தனங்களாக இருந்தாலும் சரி.
அதே போல செல்லம்மாவும் தனக்கு நெருக்கமான மொழியில் பேசி, தான் விரும்பிய உலகை தேடிக் காட்டும் அப்பாவை மற்ற எவரையும் விட அதிகமாகவே விரும்புகிறாள். மற்றவரால் புறக்கணிக்கப்படும் மகளுக்கு கூடுதல் கவனம் கொடுக்கும் தந்தையும், மற்றவர்கள் செய்ய மறுத்ததை கூடுதல் அக்கறையுடன் செய்யும் தந்தையோடு மகளும் இயல்பாகவே அதிக பிணைப்புடன் பழகுகிறார்கள். அதனால் இது வெறும் தந்தை மகள் உறவு மட்டுமல்ல.
செல்லம்மாளாவது பரவாயில்லை, கொஞ்சம் படிப்பதில் சுணக்கம் உடையவள் என்பதோடு சமூகம் நிறுத்திக் கொள்கிறது. ஆனால் மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனச் சிதைவு அடைந்தவர்கள், முதுமையால் படுத்த படுக்கையில் இருப்போர்கள் என்று சமூகம் ஒதுக்க நினைக்கும் மனிதர்களைக் கூட யாராவது ஒருவர் எப்போதும் தோளில் சுமந்துதான் வருகிறார்கள். குறிப்பாக மனவளர்ச்சி அற்ற குழந்தைகளை வளர்ப்போர் பதிலுக்கு அன்பையோ, பாசத்தையோ கூட தொட்டறியத்தக்க விதத்தில் பெற முடியாது. ஆனாலும் நமது நாகரீக கண்களைத் தாண்டி அந்த குழந்தைகள் அவர்களுடைய மொழிகளிலும் நடத்தையிலும் தம்மை பராமரிக்கும் பெற்றோரையோ காப்பாளரையோ அன்பு காட்டக் கூடும்.
இயக்குனர் ராம் கல்யாணியாக
வளர்ந்து ஆளாகும் வரை குழந்தைகளும் கூட இந்த அறிவறியா உலகில் இருந்தே வருகிறார்கள். காட்சிகளும், கற்பனைகளும், போலச் செய்தலும் மூலம் சுற்றுச்சூழலை உற்று நோக்கும் குழந்தைமையை புரிந்து கொள்வது ஒரு கலை. இதற்கு பெரிய படிப்போ, இல்லை ஆழ்ந்த அறிவோ தேவையில்லை என்றாலும் நிறைய பொறுமையும் குழந்தைகளோடு சலிப்பின்றி உரையாடும் அக்கறையும் வேண்டும். கிடைத்த சுற்றுச்சூழலை காட்சிகளாகவும் கதைகளாகவும் இணைத்து இயற்கையையும், சமூகத்தையும் அவற்றின் இயக்கத்தையும், மாற்றத்தையும் உணர்ச்சி நயங்களோடு பாடுவது போல பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
மூத்தோரெல்லாம் அதிகாரிகள், இளையோரெல்லாம் அடிமைகள் எனும் நமது நிலவுடமைப் பண்பாட்டில் காயடிக்கப்படும் எவரும் இத்தகைய குழந்தைமையை கண்டு குதூகலிப்பது கடினம். எல்லாக் குழந்தைகளையும் பார்பி பொம்மை போல ஒரு படித்தானதாக மாற்ற நினைக்கும் முதலாளித்துவ உலகிலும் குழந்தைமை ஒரு உணர்ச்சியற்ற சரக்கு போலவே கையாளப்படுகிறது. வறுமைக்கு காரணமான வர்க்க நிலையும் கூட குழந்தைகளோடு நேரம் செலவிடுவதை தீர்மானிக்கிறது.
உழைக்கும் வர்க்கமும் ஏழைகளும் தமது குழந்தைகளுக்கென்று தனிச்சிறப்பான வாழ்க்கையையோ இல்லை நேரத்தையோ வழங்கிவிட முடியாது. சித்தாளாக செல்லும் பெண் செங்கலை அதிக நேரம் சுமப்பது போல பிள்ளைகளைச் சுமக்க முடிவதில்லை. கட்டிடங்கள் அழகாக வளருவது போல அந்தக் குழந்தைகளின் உலகம் ஆசை ஆசையாய் நகருவதில்லை. மறுபுறம் நடுத்தர வர்க்கத்திற்கு தனது குழந்தைகளோடு செலவிட நேரம் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறவேண்டிய ஒரு பந்தயக் குதிரையின் பயிற்சியாளனாகவே இருக்க விரும்புகிறார்கள். குதிரை வேகமாக ஓடுவதற்கு ஏராளமான பணத்தை செலவழிப்பதே தேவை என்று கருதுகிறார்கள்.
இவர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தாலும் அது கத்திரிக்காயையும், காண்டா மிருகத்தையும் ஆங்கிலத்தில் சொல்லி அர்த்தமற்ற என்சைக்ளோ பீடியாவாக மாற்றும் குற்றச் செயலாகவே இருக்கிறது. குழந்தைகளை சித்திரவதை செய்யும் இந்தக் கொலைக் கலையை பெற்றோருக்கு சொல்லிக் கொடுப்பவை தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள். அந்த வகையில் பள்ளிகளின் நீட்சியாக வீடுகளும், ஆசிரியர்களின் அசிஸ்டெண்டுகளாக பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
இறுதியில் குழந்தைகளை வீடு, பள்ளி இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு சித்திரவதை செய்கின்றது. தோற்றத்தில் ஒரு போலவே இருக்கும் W, M இரு எழுத்துக்களை மாற்றி வரைகிறாள் என்று செல்லம்மாளை கடிந்துரைக்கிறாள் வகுப்பு ஆசிரியை. அதற்காகவே அவளை டபிள்யூ என்று பட்டப்பெயர் சூட்டி அழைக்குமாறு மற்ற குழந்தைகளுக்கு கட்டளையிடுகிறாள். ஆட்டமும், பாட்டமும், அபிநயங்களாகவும் இருக்கும் செல்லம்மாவுக்கு ஒரு ஆங்கிலப் பாடலுக்கு ஆடத் தெரியவில்லை என்றும் விரட்டுகிறாள் அந்த ஆசிரியை.
“அயம் பார்பி கேர்ள்” எனும் அந்தப் பாட்டிற்கு ஆடத்திணறும் செல்லம்மாவை “ஒரு குடம் தண்ணியெடுத்து” பாடலுடன் ஆடும் சிறுமிகள் ஊரில் வரவேற்கிறார்கள். தனது மகளுக்கா ஆடத்தெரியாது என்று ஆவேசத்துடன் வெள்ளேந்தியாக ஆசிரியையிடம் சண்டை போடுகிறான் கல்யாணி. நாமம் போட்ட பள்ளி தலைமையாசிரியரோ ஆயுள் தண்டனை கைதிகளின் இரக்கமற்ற வார்டன் போல குத்துகிறார். சகித்துக் கொண்டு கோபத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைஞ்சுகிறான் கல்யாணி.
தனது மகள் சரியானவள், இந்த பள்ளிதான் தவறானது என்று கல்யாணி உணரத் துவங்குகிறான். நல்லாசிரியர் விருதுடன் ஓய்வு பெற்ற அவனது தந்தை இதற்கு நேரெதிர். அந்த தனியார் பள்ளியில் படிக்கும் தகுதி இல்லை என்றாலும் பேத்தியை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டு படிப்பு சொல்லித் தருகிறார்கள் என்றே அவர் கருதுகிறார். இதை ஏதோ கதை, கிதை சொல்லி மகளின் வாழ்வை நாசமாக்குகிறான் கல்யாணி என்பதை தந்தையின் அதிகாரத்துடனும் அவர் சொல்கிறார்.
தங்க மீன்கள்
படக்குழுவினர்
ஆசிரியர் பையன் என்றாலும் கல்யாணியே அப்படித்தான் ‘தற்குறி’யாக படிப்பைத் தொலைத்தவன். அவனது தங்கை உயர் கல்வி முடித்து ஆஸ்திரேலியாவிற்கு வாக்கப்பட்டவள். அவனோ உள்ளூரில் எவர்சில்வர் பாலீஷ் பட்டறையில் கரித்துகள் அலங்காரத்துடன் பிழைக்கிறான். சொல்லிக் கொள்ளுமளவு சம்பளமில்லை என்றாலும் மகளுடன் நேரத்தை செலவழிக்க அனுமதிப்பதால் மட்டுமே அந்த வேலையை விரும்புகிறான். காரும், சொந்த வீடும், ஓய்வூதியமும் இருக்கும் அப்பாவின் பராமரிப்பில்தான் கல்யாணியின் குடும்பமும் வாழ்கிறது. இந்த திரிசங்கு வாழ்வில் சிக்கிக் கொண்டவள் கல்யாணியின் மனைவி வடிவு.
படிப்பு வராத மகள் குறித்தும், வருமானம் இல்லாத கணவன் நிமித்தமும் கவலைப்படுவதிலேயே அவளது நாள் கழிகிறது. இப்படித்தான் பள்ளியின் விரிவாக்கமாக வீடும் செல்லம்மாளை துரத்துகிறது. குயிலின் இனிமையோடு பாடித்திரிய விரும்பும் அந்த சிட்டுக்குருவியை உயர் ரக பந்தயக் குதிரை போல பயிற்சி அளித்தால் தாங்குமா?
சிட்டுக்குருவியை சிறை பிடிக்க நினைக்கும் பள்ளி குறித்து கல்யாணிக்கும் தந்தைக்கும் சண்டை வருகிறது. வருமானமில்லாத நிலையில் சுயமரியாதையும் கொஞ்சம் பணத்தையும் ஈட்ட வேலை தேடி கொச்சி செல்கிறான். செல்பேசியில் மகளுடனான உரையாடலை தொடர்கிறான். ஆனாலும் பள்ளி சித்திரவதையின் நீட்சியாகவும் அதிலிருந்து காப்பாற்றுவதற்கு அப்பா வரவில்லை என்ற ஏக்கத்திலும் செல்லம்மா தற்கொலை செய்து கொண்டு தங்க மீனாக மாற முடிவு செய்கிறாள்.
வீட்டில் விட்டுச் சென்ற குழந்தையை எல்லோரும் சேர்ந்து கொலை செய்து விட்டீர்கள் என்று குமுறும் கல்யாணி இனி அந்த சித்திரவதை செய்யும் தனியார் பள்ளி தேவையில்லை என்று அரசு பள்ளியில் சேர்க்கிறான். அரசு பள்ளியில் ‘அறிவு’ வருகிறதோ இல்லையோ குறைந்த பட்சம் குழந்தைகளை துன்புறுத்த மாட்டார்கள் என்கிறான். ஆனாலும் அவனது அப்பாவும், தங்கையும் அரசுப் பள்ளிகளோடு வாழ்ந்து ஆளானவர்கள்தான் என்று நினைவு படுத்தவும் செய்கிறான்.
இதுதான் கதையின் சுருக்கம் என்றாலும் இதுவே முழுக்கதை அல்ல. வைரம் போன்ற சிறுகதைகள், கவித்துவமான காட்சிகள், குறியீட்டில் மறையும் விமரிசனங்கள், நினைவில் நீங்காத கவிதைகள் என்று இந்தப் படமும் கதையும் பல தளங்களில் விரிகின்றது. அதில் பத்மபிரியா நடித்திருக்கும் எவிட்டா மிஸ் அத்தியாயம் ஒரு கவிதை.
இந்தப் படத்தின் பாத்திரங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் நடிப்பை இரசித்து விட்டு அவர்களது காட்சிகளை அதிகப்படுத்தியதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். ஒரு அடிப்படைக் கதையின் பாத்திரங்களுக்கு உயிரூட்ட வந்தவர்களின் நடிப்பினால் கதை இன்னும் செழுமைப்படுத்தப்படுகிறது என்பது மண்டை வீங்கி படைப்பாளிகளால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதற்கு தன்னிலிருந்து நீங்கி மற்றதை ரசிக்கும் கற்றாய்ந்த பணிவு வேண்டும். சினிமா எனும் கூட்டு முயற்சிக் கலைக்கு இது இன்னும் பொருந்தும்.
ஆனாலும் நாயகனது முகத்தை விட்டு நீங்காத திரைக்கதை, அவனுக்கு பொழுது போக்க ஒரு நாயகி, அவனது வீரத்தை வெளிப்படுத்த ஒரு வில்லன், குஷிப்படுத்த ஒரு காமடியன், அவனுக்காகவே இசை, நடனம், காமரா என்று நாயகன் பின்னால் உயிருள்ளவையும், உயிரற்றவையும் அணிவகுத்து ஓடும் தமிழ் சினிமாவில் நாயகனை தவிர்த்து எதற்கும், எவருக்கும் மதிப்பில்லை.
நா முத்துக்குமார்
பாடலாசிரியர் நா முத்துக்குமார்
ஆனால் தங்கமீன்களில் குறைந்த பட்சம் ஒரு பத்து பாத்திரங்களாவது நமது சிந்தனைக்குள்ளே நுழைந்துவிட்டு நீங்காதபடி செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
இதற்காக ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பல காட்சிகளோ இல்லை பல பக்க வசனங்களோ இருந்திருக்குமோ என்று பார்த்தால் அப்படி இல்லை. ஒரு சில வார்த்தைகள், வார்த்தைகளை மீட்டி பொருள் விரிக்கும் காட்சி அமைப்புகள், நடிகர்களின் இயல்பு மாறாத துல்லியமான உடல் மொழி எல்லாம் சேர்ந்து மையக்கதையின் ஓட்டத்திற்கு அழுத்தமான பாதையை அமைத்து தருகின்றன. செல்லம்மாவின் தோழி ‘பூரி’ நித்ய ஸ்ரீ, வகுப்பு ஆசிரியை ஸ்டெல்லா மிஸ், அம்மா வடிவு, எவிட்டா மிஸ், அவளது கணவன், கேரளத்து நண்பன், பள்ளி தலைமையாசிரியர், கல்யாணியின் தந்தை அனைவரும் நடிப்பவர்களாகவே தெரியவில்லை. செல்லம்மாவின் உலகில் வாழும் நிஜ மாந்தர்களாகவே வருகிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல கதையின் முன்னுரையும், முடிவுரையும், இடைவெளியுமாய் இருக்கின்ற பசுமை நீர் நிரம்பிய குளம், உணர்ச்சிகளை நிறுத்துமாறோ, மறக்குமாறோ, திருப்புமாறோ, மீட்குமாறோ செய்யச் சொல்லும் ஓடும் ரயில், அன்பிற்கு நிகராக இந்த பரந்து விரிந்த மலையும் காற்றும் மேகங்களும் போதுமா என்று சவால் விடும் அச்சன் கோவில் மலை முகடு, செல்லம்மாவின் அறை, பள்ளிக்கூடத்தின் கடிகாரத்தில் இருக்கும் குயில் பொம்மை, அப்பாவின் ஓய்வறியா சைக்கிள், கொச்சின் படகு இல்லம் என்று இயற்கையும், பொருட்களும் கூட இந்தக் கதையின் மாந்தர்களை உரிய வெளிச்சத்தில், தருணத்தில் காட்டுகின்றன.
மாவட்ட ஆட்சித் தலைவர் மரணமடைந்ததால் பள்ளிக்கு விடுமுறை என்று அறிவிக்கும் போது செல்லம்மாள் கை தட்டி வரவேற்கிறாள். அதற்காக ஆசிரியைகளின் அறையில் முட்டி போட்டு தண்டிக்கப்படுகிறாள். புரியாத மரணத்திற்காக வரும் மகிழ்ச்சியான விடுமுறையை வரவேற்கும் அந்தக் குழந்தையிடம் “உனக்கு மிகவும் பிடித்தவர் யார்?” என்று கேட்டு செல்லம்மா பதில் கூறியதும் “உன் அப்பா இறந்தாலும் இப்படித்தான் கொண்டாடுவாயா” என்று குரூரமாக கேட்கிறாள் ஆசிரியை. அந்த இடத்தில் குழந்தையைக் காப்பாற்றும் தேவதையாக அறிமுகமாகிறாள் எவிட்டா மிஸ்.
இவ்வளவிற்கும் எவிட்டா மிஸ் நமது செல்லம்மாளுக்கு எந்த வகுப்பையும் எடுக்கவில்லை. என்றாலும் அந்தச் சிறுமியின் மனங் கவர்ந்த மிஸ் அவள்தான். திருமணம் காரணமாக எவிட்டா மிஸ் வேலையை விட்டு நீங்கி விட்டாள் என்று அப்பாவிடம் வருத்தப்படும் செல்லம்மாவிற்கு அந்த மிஸ்ஸிடம் பேச வேண்டும் என்று ஆசையிருக்கிறது.
அலைந்து திரிந்து எவிட்டா மிஸ் வீட்டைக் கண்டுபிடித்து கல்யாணி செல்லும்போது எரிச்சலடனும், சற்று சந்தேகத்துடனும் எவிட்டாவின் புதுக் கணவன் எதிர் நிற்கிறான். நள்ளிரவில் வந்த காரணம், குழந்தையின் ஆசை, தலை விரி கோலமாக நிற்கும் எவிட்டா தயங்கியபடியே செல்லம்மாளிடம் பேசுவது, இறுதியில் அந்த கோபக்கார கணவனே கல்யாணியை நட்புடன் வழியனுப்பி வைத்தது, பிறகு ஒரு காட்சியில் கணவன் இருக்கும்போதே கல்யாணியுடன் எவிட்டா பேசுவது, ” நான் இன்னும் கொஞ்சம் நல்ல மிஸ்ஸாக இருந்திருக்கலாம்” எல்லாம் ஒரு சில மணித்துளிகளில் வந்து போனாலும் அவை எழுப்பும் காட்சியின் வீரியம் காலத்தை தாண்டி நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாரா
ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாரா
ஒரேயடியாக கெட்டவன் அல்லது நல்லவன் என்று நாயகத்தனத்தின் பின்னே தறிகெட்டு ஓடும் தமிழ் சினிமாவில் ஒரு பாத்திரத்தையோ இல்லை ஒரு உணர்ச்சியையோ இப்படி பாலன்ஸ் செய்து இருமைகளோடு காட்டுவது அரிது. முக்கியமாக கதையின் மைய உணர்ச்சியோடு அதை இசைக்கத் தெரியும் கமகம் வேண்டும். இங்கே இயக்குநர் அதை லாவகமான நேர்த்தியுடன் செய்கிறார். இல்லையென்றால் இவை வெறுமனே நல்லொழுக்க உபதேசங்களாக காதை அறுத்துவிடும்.
அதை இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். ஒரு மனிதனிடம் நல்லது, கெட்டது இரண்டும் இருந்தாலும் அவனது கெட்டதை மட்டும் சொல்லி விரட்டுவதால் எந்தப் பலனுமில்லை. மாறாக அவனிடம் இருக்கும் ஒரு சிறிய நல்லதையாவது பற்றிக் கொண்டு மாற முயலும் ஆளுமையாக காட்டுவது சமூக நேயத்தை பொதுவான மனிதர்களிடையே துளிர்விடச் செய்யும்.
மக்கள் மோசமானவர்கள், இளைஞர்கள் ஊர் சுற்றிகள், பெண்கள் அடிமைகள், குழந்தைகள் பிரச்சினைகள், இலக்கியம் அழிந்து விட்டது என்று சலிப்புடன் வாழ்வதால் நாம் எதை அடையப் போகிறோம்? ஒரு மனிதனிடம் அவனுக்கு பிடித்ததை, தெரிந்ததை வைத்து சமூக நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு பொறுமையும் வேண்டும், திறமையும் வேண்டும். இதற்கு நேரெதிராக பயணிக்கும் தமிழ் சினிமாவிலிருந்து மாறுபடும் தங்க மீன்கள் அத்தகைய மாறத்துடிக்கும் நேயத்தை பனித்துளிகளாய் விடியலில் நம்பிக்கையுடன் விதைத்துச் செல்கிறது.
இதனால் எவிட்டா மிஸ்ஸின் கணவன் கூட இந்தப் படத்தில் நமக்கு நட்புடன் கூடிய நெருக்கத்தில் வர சம்மதம் தெரிவிக்கிறான். எவிட்டா மிஸ் எனும் அழகான, அன்பான கிளி ஒரு குரங்கிற்கு வாக்கப்பட்டிருக்கிறது என்ற ஆரம்பக் காரணத்திற்கு ஒரு ஆறுதலும் கிடைக்கிறது. எவிட்டாவைப் போன்ற ஆயிரக்கணக்கான பாமரர்களுக்கு தகுதியான வாழ்க்கையும், மகிழ்ச்சியும் வேண்டும் என்ற நமது விருப்பம் கடைத்தேறுவதற்கு வழியில்லைதான். கிடைத்தனவற்றில் வாழ்ந்து கொண்டு இருப்பனவற்றை எதிர் கொண்டு போராடுவதில்தான் விரும்பியவற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது எப்படிப் பார்த்தாலும் சாதாரணமான ஒன்றில்லை.
கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் ஆஸ்திரேலிய தங்கச்சி ஒரு பணத்திமிர் கொண்டவளாக இருப்பாளோ என்றுதான் தமிழ் சினிமாவில் பயிற்சி எடுத்திருக்கும் நமக்கு தோன்றுகிறது. செல்லம்மாள் ஏதோ கிறுக்குத்தனமாய் ஆசைப்பட்டாள் என்பதற்காக 25,000 ரூபாய் கொடுத்து நாய் வாங்குவதா, அதற்கு ஏதாவது தங்கம் வாங்கி வைத்தாலாவது பின்னர் பயன்படும், அதனால் பணம் தரமாட்டேன் என்று அண்ணனிடம் கொஞ்சம் சீற்றத்துடன் பேசுகிறாள் அவள். சரி, உன் பணம் வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன், உன் பையனை மாப்பிள்ளை என்று அழைத்ததால் சம்பந்தியாவானேன்று பயந்து விடாதே என்று விடைபெறும் கல்யாணி, தங்கையின் மகனுக்கு ஒரு சாக்லெட்டை கொடுக்கிறான்.
அடுத்த ஷாட்டிலேயே தனது அண்ணன் கொடுத்த சாக்லேட்டில் தனக்கும் பங்கு வேண்டுமென்று குழந்தை போல குழந்தையிடம் மல்லுக் கட்டுகிறாள் சாக்லேட்டின் தலைநகரங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் தங்கை. அங்கே நிற்கிறார் இயக்குநர். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளோடு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எளிய மனிதர்களை சூழலோடு மாறுபடாமல் இப்படி இதயத்திற்கு நெருக்கமாக காட்டியிருப்பது கதையின் கருவிற்கு அளப்பறிய உணர்ச்சிகளுடன் சக்தியேற்றுகிறது.
கிட்டத்தட்ட வில்லி போல வகுப்பறையில் நடந்து கொள்ளும் ஸ்டெல்லா மிஸ் கூட அவளுடைய சொந்த விருப்பத்தின் பெயரிலா அப்படி நடந்து கொள்கிறாள்? “கம்மி சம்பளம், வேலைச்சுமை, அவங்களும் என்ன செய்வாங்க?” என்று தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கொண்டு உறுமும் வேலையை சம்பளத்திற்காக செய்யும் ஜீவன்களின் ‘நியாயம்’ கூட எவிட்டா மிஸ் மூலமாக நமக்கு சொல்லப்படுகிறது. இதனால் வெறுத்தே ஆக வேண்டிய நபர்களையும் இயக்குநர் அப்படி காட்டிவிடுவாரோ என்று பதறத் தேவையில்லை. நாமக்கட்டி தலைமையாசிரியரை பார்த்தாலே அடித்து விட வேண்டும் என்று தோன்றுவதில் எந்தக் குறையுமில்லை.
யுவன் சங்கர்ராஜா
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா
இந்தப் படம் அப்பா, மகள் எனும் ஆண்களின் கோணத்தில் சொல்லப்படுவதால் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பெண்களை லேசாக மதிப்பிடுவது என்ற வாதம் கலைப்பூர்வமாகவும், கருத்து வகையிலும் இங்கே அபத்தமானது. ஒன்றைப் பற்றிச் சொல்லும்போது, ஒன்றின் வழியாக மற்றவைகளை அணுகும் போது மற்றதற்கு இங்கே இடமில்லையே என்று கேட்பது சரியல்ல. ஏனெனில் மற்றதின் மறைபொருளையும் இந்த ஒன்று கருவில் கொண்டிருக்கிறது எனும் போது நாம் அசட்டுக் கேள்விகளை அல்ல ஆழ்ந்த ரசனையை கைப்பெற வேண்டும் என்கிறோம்.
முதலில் சொன்னது போல செல்லம்மா ஒரு ‘மந்தமான’ சிறுமி. அவளை கல்யாணி தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதோடு அந்த சிறுமியிடம் பள்ளி அறிவை புரிந்தே ஆகவேண்டும் என்று துன்புறுத்தவும் செய்கிறார்கள். இதில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு, அவர்களை இயக்கும் தனியார் மெட்ரிக் பள்ளியும் உண்டு. ரத்த உறவிலும், எதிர் பால் கவர்ச்சியிலும் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த அப்பா மகள் உறவு ஒரு வகையில் எளியோரை, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கும் நபர்களைப் பற்றியது. அதை ஒரு குறியீடாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அம்மா மகன், தந்தை மகன், நட்பு, தோழமை என்று விரித்துக் கொள்ளலாம். அல்லது இந்தப்படத்தை அதன் பொருளில் ரசிக்கும் பெண்கள் ஆண்களைப் போல உணர மாட்டார்கள் என்பதல்ல. ஒருவேளை பெண்கள் என்பதால் அவர்கள் இன்னும் கூர்மையாக, வலிமையாகக் கூட புரிந்து கொள்ளலாம்.
கல்யாணியின் மனைவியாக வரும் வடிவு கூட “நானும் செல்லம்மா போல்தானே” என்று சோர்வுடன் பேசுகிறாள். நள்ளிரவில் கணவனை அழைத்துக் கொண்டு ரயில் பாதையில் அமர்ந்து பேசுகிறாள். கூட்ஸ் வண்டி குறுக்கிடுகிறது. வேறு பல பிரச்சினைகளும் அன்றாடம் குறுக்கிடுகின்றன. தற்குறியாக இருக்கும் கல்யாணி 12-வது வகுப்பு படிக்கும் போது வடிவை இழுத்துக் கொண்டு வருவதாக பெற்றோரால் குத்திக் காட்டப்படுகிறான். இலை மறை காய் மறையாக தனது மகளின் மந்த கதிக்கு தான்தான் காரணமோ என்று வடிவு தூற்றப்படுகிறாள். இடையில் சுய பொருளாதாரமற்ற கணவனது நிலை சுய மரியாதையையும் தருவதில்லை.
சண்டை போட்டுவிட்டு வெளியேறச் சொல்லும் கல்யாணியோடு வெளியேறும் துணிவு அவளுக்கில்லை. ஆனால் அப்பாவின் கல்விக் கடனைத் தீர்க்க பள்ளியில் செல்லம்மா செய்யும் சின்ன சின்ன அர்த்தமற்ற திருட்டுக்களின் மூலம் அவளை திருடி என்று விளையாட்டாய் கேலி செய்யும் மாமனாரின் பேச்சை ரசிக்கவில்லை. அப்படி அழையாதீர்கள் என்று சீறுகிறாள். இதுதான் வடிவு. படிப்பதற்கே தள்ளாடும் தனது குழந்தை இள வயதில் வயதுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அவளை நிலை குலைய வைக்கிறது. இவையெல்லாம் வழக்கமான தாய்மார்களின் கவலை என்றாலும் கணவனுக்கும் மகளுக்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே தத்தளிக்கும் அந்த அபலையின் நிலை ஒரு வேளை வளர்ந்த செல்லம்மாவின் கதையோ !
தான்தான் மகனது குடும்பத்தை பராமரிக்கிறோம் என்று நிலை மறந்த நேரங்களில் பேசும் தந்தைகூட கொச்சி சென்றிருக்கும் மகனைப் பற்றி “அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கெட்டவனாகத்தான் திரும்பட்டுமே” என்று அழுகிறார். தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அளவு கோலில் தனது பேத்தியை வளர்க்க நினைக்கும் அந்த நல்லாசிரியரின் உறவும் கூட இருவேறான எதிர்மைகளின் மோதலில் அமைதியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அப்பா மகள் தாண்டி, அம்மா மகள், தாத்தா மகள், ஆசிரியை மாணவி, பூரித் தோழியுடன் மகள் என்று பல்வேறு உறவுகளின்  பாதையில் எளிய மனிதர்களின் வாழ்வை நமக்கு உணர்ச்சிகரமாக அறியத்தருகிறது தங்க மீன்கள். அந்த வகையில் ஒரு கதையை ஒரு வாக்கியத்தில் கூற முடியுமென்றால் அதை ஒன்றரை மணிநேர சினிமாவாக எடுக்க வேண்டிய தேவை கிடையாது எனும் இயக்குநரின் பார்வை நியாயம் பெறுகிறது. அதே நேரம் இந்தப் படத்தின் விளம்பர வாசகங்கள் மூலம் அந்த நியாயத்தை அவரே மீறியும் இருக்கிறார்.
தங்க மீன்கள் செல்லம்மாஒருவேளை ஒரு சினிமாவை ஒரு வாக்கியமாக சொல்ல முடியாது என்றாலும் ரசிகர்களின் பார்வையில் ஒரு உணர்ச்சியாக, உறவாக சொல்ல வேண்டிய தேவை இருக்குமோ? இந்தப் படத்தை சாதாரண உழைக்கும் மக்கள் உள் வாங்கிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கிறது. காரணம் அவர்கள் (மட்டுமா) மசாலா ரசனையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதல்ல. அவர்களது வாழ்க்கையில் இத்தகைய மிகையுணர்ச்சி அல்லது அதிக கவனிப்பு அப்பா மகள் பாசத்திற்கு இடமில்லை. ஒரு வேளை அது இருந்தாலும் இந்தப் படம் போலவும் இருப்பதில்லை. அது வேறு ஒரு தளம்.
அதே நேரம் இதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கமும் இதை எளிமைப்படுத்தப்பட்ட அப்பா மகள் பாசமாகவே எடுத்துக் கொள்ளும். மகள்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று கூட அவர்கள் உறுதி ஏற்கலாம். ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மகள்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவார்களா என்று கேட்டால் முடியாது என்பார்கள். அதன்படி இவர்கள் தங்கள் மகள்களோடு நேரம் செலவழிப்பது என்ன? சினிமா, பீச், கேளிக்கை பூங்கா சுற்றுவது அல்லது சோனி பிளே ஸ்டேசன், ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி போன்றவற்றை திட்டாமல் வாங்கிக் கொடுப்போம் என்று முடிவு செய்வதா?
மாறாக, குழந்தைகளின் உலகில் மாயக் கதைகளோடு உறவாடுவது எப்படி, அந்தக் கதைகளை இயற்கை, சமூகக் காட்சிகளின் உதவியோடு காட்டுவது எங்ஙனம், திருத்தமான அறிவும் கல்வியும் குழந்தைகளுக்கான மொழியின் விருப்பத்தில் இசைப்பது எவ்வாறு என்பதை எத்தனை பேர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள்?
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மகள்களோடு எந்த அப்பனும் தங்கமீன் பாணி உறவு வைத்திருக்க முடியாது என்று இந்தப் படம் அழகியலோடு ஆணையிட்டு சொல்வது எத்தனை பேருக்கு உரைக்கும்? அரசுப்பள்ளிகள் பந்தயக் குதிரைகளை வளர்க்கும் திறமையற்றவை என்றாலும் சிட்டுக்குருவியின் சுதந்திரத்தோடு யானை பலம் கொண்ட சமூக அனுபவத்தையும் அறிவையும் கற்றுத் தரும் என்பதை ஏற்பவர்கள் எத்தனை பேர்? தெரியவில்லை.
இந்தப் படம் திரையரங்கில் புறக்கணிக்கப்படுவதை வைத்தும் விமரிசனங்களில் முகதுதிக்காக பாராட்டிவிட்டு ஒதுக்கப்படுவதையும் வைத்துப் பார்த்தால் நமது சந்தேகங்கள் நியாயமற்றவை அல்ல. நாம் என்ன படம் எடுக்கிறோம் என்பதோடு யாருக்கு எடுக்கிறோம் என்பதும் முக்கியமானது. தனது கதையை செதுக்கிய இயக்குநர் இந்த முரணை வெற்றிகரமாக கையாளமுடியவில்லை என்றே தோன்றுகிறது.
மேலும் படத்தின் பின் பகுதியில் கதையின் விரிந்த தளம் மிகவும் சுருங்கி அப்பாவின் பாசப் போராட்டம் என்பதாக ஒடுங்கிக் கொண்டு கொஞ்சம் மிகையாகவும் சென்று விட்டது. நள்ளிரவில் ஊளையிடும் நாயை அடிக்கும் போது “இதக்கூட அடிக்காமல் வேற யாரை அடிக்கப் போறேன்” என்று இயலாமையோடு பேசும் கல்யாணி, வயநாட்டு மலைகளில் சூப்பர் மேன் சாகசங்கள் செய்வதாக காட்டத் தேவையில்லை. 25,000 ரூபாய் மதிப்புள்ள நாயை தனது மகளுக்காக வாங்க வேண்டும் என்ற அவனது முனைப்பை புரிந்து கொள்ளலாம். அது தவறுமில்லை. அதன் சரி தவறுகள் அவனது தங்கை மூலமாகவும் பேசப்படுகிறது.
ரெயின் மேக்கர் எனும் பழங்குடியினரின் கருவியை கொண்டு வந்தால் பணம் கிடைத்து நாய் குட்டியும் வாங்க முடியும். அதன் புகைப்படத்தை நான்காக மடித்து நாலாபுறமும் காட்டியதில் அது நான்காகவே கிழிந்து விடுகிறது. நாய் தேடலை இத்தகைய சில குறியீடுகளின் மூலமாக கூட காட்டி முடித்திருக்கலாம். மேலும் மகளின் உலகத்திலிருந்து அவனுக்கு புதிய வாழ்க்கையை தந்திருக்கும் கேரளத்திலிருந்து அவன் வேறு எதையும் கற்கவில்லையா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இந்தக் கதைப்படி தங்கமீன்கள் தந்தைக்கு மதிப்பு மிக்க ரெயின் மேக்கரை கொடுத்து ஆதரித்தது சேட்டன்கள்தான் என்பது தமிழினவாதிகளுக்கு ரசிக்குமா தெரியவில்லை. மகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் அந்த நீண்ட குழல் இசைக்கருவியை கேட்பதை ‘கற்றது தமிழ்’ மரபை ஏற்கும் இயக்குநர் எப்படி சம்மதித்தார்?
அடுத்து ஒரு உணர்ச்சியை, உறவை ஆழமாக காட்டுவதற்கு அதனுள்ளே மட்டும் பயணிப்பது பாதிதான் பலனளிக்கும். மீதியை அந்த உறவோடு தொடர்புடைய புறநிலை வாழ்க்கையை விரித்தும், பரந்தும் அணுகி உரசிப் பார்ப்பது அவசியம். அந்த மீதிப்பாதி தங்கமீன்களில் போதிய அளவில் இல்லை என்பது எமது விமரிசனம். படத்தின் முதல் பாதியில் அது கொஞ்சம் இருந்தது என்றாலும் கதை பயணிக்க, பயணிக்க தந்தை மகள் உணர்ச்சியை மட்டும்தான் சிறப்பாக பார்ப்பேன் என்று சென்று விட்டது.
சில காட்சிகளில் செல்லம்மா அவளது இயல்புக்கு மீறியும் பேசுகிறாள். பூரித் தோழியிடம் (தான்) பத்து  பதில் வைத்திருக்கும் பிரில்லியண்ட் சிறுமி என்று செல்லம்மா பேசுவது, தற்குறியான கல்யாணி செயல்முறைக் கற்றலை சொல்லிக் கொடுப்பது இங்கேயெல்லாம் பாத்திரங்களை மீறி இயக்குநர் பேசுகிறார். சிறந்த படைப்பில் தேர்ந்த படைப்பாளியின் குரல் தெரியாது என்றாலும் இங்கே ஒரு சில காட்சிகள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இயக்குநரை நாம் நேரடியாக சந்திக்கவில்லை. புத்தகப் பையை செல்லம்மா தூக்கி ஏறியும் அந்தப் பாட்டு கொஞ்சம் தமுஎகச பாணியில் ‘புத்தகங்களே எமது குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்’ என்ற என்ஜிவோ வகையிலும் இருக்கிறது.
எனினும் இந்த குறைகளை மீறி இந்தப் படம் ஒரு நல்ல படம். எளிமையான படம். ஆனால் நுட்பமான ரசனையை கோரி நிற்கும் படம்.
வாழ்க்கையில் அச்சன் கோவில் மலையை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிறது ஒளிப்பதிவு. முக்கியமாக அந்த பரந்த மலையின் காற்றும், தனிமையும், நாம் இந்த இயற்கைத் தாயின் குழந்தைகள் என்பதை ஐம்புலன்களிலும் உணர்த்துகிறது. காட்சிகள், ஷாட்டுகளின் நேர்த்தி சில சமயம் கதையையும் தாண்டிவிடும் அழகியலை கொண்டிருக்கிறது. அந்த வகையில் கதைக்கு அவை அடக்கத்துடன் மெருகூட்டுகின்றன. உண்மையில் இந்த இயக்குநர் காட்சி மொழியின் கலை அறிந்தவர் என்பதை நம்மைப் போன்ற பாமரர்கள் சொன்னால் ஏற்பார்களா தெரியவில்லை.
பாடல்களில் ஆன்மாவை இசைத்துக் காட்டும் யுவன் பின்னணி இசையில் காட்சிகளுக்கு இணையாகவே இசைக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் காட்சிகளுக்கு எதிராகவோ, கிளையாகவோ, விமரிசனமாகவோ ஏன் மௌனமாகவோ அந்த இசை வந்திருக்கலாமோ என்று ஒரு தோழர் சொன்னார். இந்தப் படம் அதிகமும் பின்னணி இசை கோராத படம் என்பதால் அதை புரிந்து கொண்ட இளையராஜா தேவைப்பட்டிருப்பாரோ என்றும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் ஆனந்த யாழில் யுவன் சங்கர் ராஜா தந்தையைப் போலவோ இல்லை விஞ்சியோ பாய்கிறார் என்று மனந்திறந்து பாராட்டலாம்.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் காட்சிகளின் கட்டுப்பாட்டில் கதையின் ஓட்டத்தில் நம்மை சீராக கொண்டு செல்கின்றன. ஒரு ஃபிரேமை விட்டுக் கூட நமது சிந்தனை வேறு எங்கோ போக அவர்கள் அனுமதிக்கவில்லை. இயக்குநர் ராமிடம் 2.30 மணிநேரம் கதை கேட்ட இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் இறுதியில் தந்தை வேடத்தை ராம் நடிப்பதாக இருந்தால் படத்தை தயாரிக்க சம்மதம் என்று தெரிவித்தாராம். உண்மையில் இது நல்ல முடிவு. கல்யாணி வேடத்தில் இருக்கும் ராமுக்கு கொஞ்சம் ‘இன்டெலக்சுவல்’ தோற்றம் இருந்தாலும் கதைக்கு அதுவும் பலனளிக்கவே செய்கிறது. படத்தில் இயக்குநரின் அலைவரிசையோடு ஒன்றி நடித்திருக்கும் சிறுமி சாதனாவுக்கு படப்படிப்பின் போது ஏழரை வயது. படம் வெளியாகும் போது பத்து வயது.
இந்தக் கால இடைவெளியில் இந்த படக்குழுவினர் பட்ட படைப்பு அவஸ்தைகளை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு நல்ல படத்தை தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நமது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! பார்க்காத வாசகர்கள், தோழர்கள், பதிவர்கள், நண்பர்கள் அனைவரும் உடன் சென்று திரையரங்கில் படம் பாருங்கள்! ஒரு முறைக்கு மேல் பார்க்கும் போது இந்த படத்தை நீங்களும் ரசிக்க முடியும்.
அப்படி ரசிக்க முடிந்தால் நமது குழந்தைகளின் உலகில் உரையாடுவதற்கு நாம் தயார் என்று பொருள். இல்லையென்றால் நமது இரசனையை மேம்படுத்த வேண்டும் என்று பொருள். இரண்டையும் நிறைவேற்ற முயன்று பார்ப்போம் !
ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் ! vinavu.com