திங்கள், 10 அக்டோபர், 2011

கனிமொழிக்கு நீர் வக்காலத்தா?” -ஸ்டாலின் அதிரடி!



சென்னை, இந்தியா: தி.மு.க.வின் மேல் மட்டங்களில்தான் டென்ஷன் நிலவுகின்றது என்றில்லை, அடுத்த மட்டங்களிலும் சிக்கல்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சமீபகாலச் சிக்கல்களை பிள்ளையார் சுழி போட்டுத் தொடக்கி வைத்துள்ளது, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள விவகாரம்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளவரின் பெயர் வாகை முத்தழகன். தி.மு.க. மேடைகளில் கொஞ்சம் அதிரடியாகப் பேசி சூடேற்றும் பேச்சாளர்.
இந்த வாகை முத்தழகனை கட்சியை விட்டே டிஸ்மிஸ் செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன். டிஸ்மிஸ் செய்யப்படுவதன் காரணம் என்ன?
“வாகை முத்தழகன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மேடைகளில் பேசியுள்ளார். கூட்டணிக் கட்சியை கண்மூடித்தனமாக விமர்சிப்பது தவறானது. ஏற்கெனவே இருமுறை காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த காரணத்தால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அப்படியிருந்தும், தன்னை திருத்திக் கொள்ளாததால் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்” என்று காரணம் கொடுக்கிறது அன்பழகனின் அறிக்கை.
இந்தக் காரணங்களுக்காக கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது கட்சிக்குள் முணுமுணுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியை டில்லி கைவிட்டுவிட்டது என்பதால், காங்கிரஸ் உறவு, ‘கேடான உறவு’ என்று கட்சியின் தலைவர் கருணாநிதியே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற  தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் காங்கிரஸைத் தாக்கிப் பேச, எல்லாப் பேச்சாளர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
மறுபக்கத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து இளங்கோவன், தி.மு.க.வினர் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு விமர்சிக்கிறார். “அடுத்த கைது கோபாலபுரத்தில்தான்” என்று மேடைகளில் போட்டு விளாசுகிறார்.
நிலைமை இப்படியிருக்க, குமரி மாவட்டம் களியக்காவிளையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வாகை முத்தழகன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசினார் என்றுதான் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
அப்படி என்னதான் பேசினார்? “ராகுல் காந்தி ஒரு சின்னப் பையன். அவரது பெயருக்கு பின்னால் காந்தி என்று இருப்பதால், அவர் ஒன்றும் மகாத்மா காந்தியின் பேரனல்ல. பெரோஸ்கானின் பேரன்தான் அவர்” என்று மைல்ட் அட்டாக்தான் கொடுத்திருந்தார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தி.மு.க.வைப் பற்றிப் பேசுவதுடன் ஒப்பிட்டால் இது வெறும் தூசு. (இளங்கோவனின் அதிரடிக்கு ஒரு சாம்பிள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
அப்படியிருந்தும் காங்கிரஸை தாக்கிப் பேசியதாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்போது புரிந்திருக்குமே, இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிஜமான காரணம் வேறு, அதற்காக கொடுக்கப்பட்ட ‘அறிக்கை’ காரணம் வேறு என்பதை! நிஜமான காரணம், இவரது மேடைப் பேச்சு ஸ்டாலினை எரிச்சல் படுத்தியதாம். அதனால் கட்டம் கட்டி விட்டார்களாம்.
சரி. ஸ்டாலினை எரிச்சல் படுத்தும் அளவுக்கு அப்படி என்ன பேசினார்? “தி.மு.க.வின் அடுத்த தலைவியாக கனிமொழி ஏன் வரக் கூடாது?”
-சென்னையிலிருந்து அசோகனின் குறிப்புகளுடன், ரிஷி
viruviruppu.com

கருத்துகள் இல்லை: