திங்கள், 10 அக்டோபர், 2011

மற்றொருவரின் வாழ்க்கையை வாழ்வதில் அதை வீணடிக்காதீர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்திருப்பார்?


“சாகவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறோம் என்று நினைப்பவர்கள்கூட அங்கு விரைவில் செல்லவேண்டும் என்று விரும்புவதில்லை. இருப்பினும், மரணம் என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மரணம் என்பது மனித வாழ்வின் ஒரு மகத்தான நிகழ்வு. மனித வாழ்வில் மாற்றத்தின் காரணி அதுதான். பழையதைக் களைந்து புதியனவற்றுக்கு வழிவகுப்பது அது. இன்றைய அளவில் நீங்கள் புதியவர்கள். ஆனால் சில காலங்களில் நீங்கள் மெல்ல மெல்ல பழையவர்களாகி களையப்படுவீர்கள். இப்படி வெடுக்கென்று சொல்வதற்கு மன்னிக்கவும், ஆனால் உண்மை இதுதான்.
உங்களுக்கான நேரம் குறைவு. ஆகையால், மற்றொருவரின் வாழ்க்கையை வாழ்வதில் அதை வீணடிக்காதீர்கள். வகுக்கப்பட்ட விதிகள் என்பன மற்றவர்களின் சிந்தனைகளில் விளைந்தவை – அவற்றில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கள் என்ற இரைச்சலில் உங்கள் உள்மனக் குரலைத் தொலைத்து விடாதீர்கள். முக்கியமாக, உங்கள் மனம் சொல்லும் பாதையைத் தொடரவும், உங்கள் உள்ளுணர்வை நம்பும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனமும் உள்ளுணர்வும் நீங்கள் உண்மையில் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை அறியும். மற்றவை எதுவும் முக்கியமில்லை.”
- ஸ்டீவ் ஜாப்ஸ், 2005, ஸ்டான்ஃபர்ட் மாணவர்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து.
ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்தில்கூட ஒரு அழகிருக்கிறது. திவாலாவதற்கு மிக அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்து, தலைமையேற்று, சுமார் பதினைந்து வருடங்களுக்குள் அதை உலகத்திலேயே – உலகத்திலேயே! – மதிப்பு அதிகமுள்ள நிறுவனமாக மாற்றி விட்டு, சில வாரங்களில் செத்துப்போனார். ஆம், அவர் சாக வேண்டும் என்று விரும்பவில்லைதான். திட்டமிடவில்லைதான். ஆனாலும், இந்த ‘வந்தான், வென்றான், சென்றான்’ என்ற திரைக்கதையில் இருக்கும் அழகை அவரேகூட ரசிக்கத்தான் செய்வார்.

ஆனால் இந்த அழகை ரசிக்கக் கூடிய மனநிலையில் அவரது பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்று இல்லை. செய்தியைக் கேட்டதும் என் கண்களில் நீர் மல்கியது உண்மை. ஈடு செய்ய முடியாத இழப்பு இது என்று சட்டென்று உறைத்தது உண்மை. இணையத்தில் ஏராளமான பதிவுகளில் இதே போன்ற உணர்ச்சிகளுடன் பலர் எழுதியிருப்பதைப் பார்த்தபோது ஒரு பெரும் சமூக சோகத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஆசுவாசம் கிடைத்தது நிஜம்.
இத்தனைக்கும் ஜாப்ஸ் எளிதில் நேசிக்கப்படக்கூடிய ஒரு மனிதர் இல்லை. ஒரு கனிவான, தோழமையான தோற்றத்தைத் தர அவர் என்றும் முயன்றதில்லை. ஒரு கண்டிப்பான ஆசிரியரின் ஆளுமையுடன்தான் அவரது வாடிக்கையாளர்களை, அவரது படைப்புகளின் பயனாளிகளை அவர் அணுகினார். இருப்பினும் அவரது படைப்புகளைக் கண்டு மோகித்தவர்களுக்கு, அவரது பேச்சுவன்மையில் வசீகரிக்கப்பட்டவர்களுக்கு, இந்த கண்டிப்பிலும் பிடிவாதத்திலும் ஒரு கவர்ச்சி இருந்தது. அதை ரசிக்கவும், அதையே அவரது வெற்றிக்குக் காரணமாகவும் கருதக் கற்றுக்கொண்ட னர்.
இந்தப் பிடிவாத குணமும் அதன் பின்னிருந்த அசாத்திய தன்னம்பிக்கையும்தாம் ஜாப்ஸின் ஆளுமைக்கு இலக்கணக் குறிப்புகளாக விளங்குகின்றன. எதைச் செய்தாலும் இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு உறுதியோடுதான் செயல்பட்டு வந்தார். மார்கெடிங்கை பொருத்தவரை நான்கு முக்கியக் கோணங்களை ஆதாரமாகச் சொல்வார்கள் – 4Ps என்று – Product, Pricing, Promotion, Placement. ஒரு பொருளை வர்த்தக வெற்றி அடைய வைப்பதற்கு அது எத்தகையது, எப்படி விலை குறிக்கப்படுகிறது, எப்படி விளம்பரப்படுத்தப்படுகிறது, எப்படி விற்கப்படுகிறது – இவை நான்கும் அடிப்படையானவை. ஜாப்ஸ் இந்த நான்கில் ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக, வர்த்தக பொதுப்புத்திக்கு முரணாகச் செயல்பட்டு வெற்றி கண்டார். கணினி தயாரிப்பாளர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கருவிகளுக்குள் விஷயங்களைத் திணித்துக் கொண்டிருந்தபோது, இவர் வந்து ஒரு கருவி உபயோகமான முறையில் பயன்பட என்ன தேவையோ அவை மட்டும் இருந்தால் போதும் என்றார். எல்லோரும் விலைகளை சகட்டுமேனிக்குக் குறைத்துக் கொண்டிருந்தபோது, இவர் மட்டும் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் அதே அதிக அளவு லாப விகிதத்தில் விற்றுக் கொண்டிருந்தார். மற்றவர்கள் இல்லாத பொருட்களை என்றைக்கோ வரப்போகும் கருவிகளைப் பற்றிக் கூவிக் கொண்டிருக்கையில், இவர் ஏற்கெனவே தயாராக இருந்த கருவிகளைக்கூட ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தார். வர்த்தக உலகமே ‘இனி கணினிகள் இணையத்தில் மட்டும்தான் விற்கப்படும்’ என்று முடிவு செய்தபோது, இவர் தைரியமாக நாடெங்கிலும் (பின் உலகெங்கிலும்) ஆப்பிள் கடைகளைத் திறக்கத் துவங்கினார்.
ஒவ்வொன்றும் வித்தியாசமான செயல்திட்டம், ஒவ்வொன்றிலும் மாபெரும் வெற்றி. ஒரு கருவியை அறிமுகப்படுத்தும் ஜாப்ஸின் உரைக்காகக் காத்திருந்து, அடித்துப் பிடித்து ஓடி, க்யூவில் நின்று, காசைப் புரட்டி, கேட்டதைக் கொடுத்து வாங்கி வீட்டுக்கு வந்து புளகாங்கிதப்பட்ட ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய அளவுக்கு வெற்றி.
எந்த ஒரு பயனாளரிடமும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல், ஒரு தனி மனிதன், தனது விருப்பப்படி, தனது உள்ளுணர்வு உணர்த்தும் வழியில் பொருட்களைத் தயாரித்து அவை மீண்டும் மீண்டும் ஒரு சர்வதேச சமுதாயத்தினால் உவகையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஒரு பிரமிக்க வைக்கும், நம்ப முடியாத சாதனை. நாம் நிகழ்காலத்தில் இதைக் கண்டோம் என்பது மட்டுமே சாட்சி.
அவரது மரணத்தின்போது அவர் கொண்டாடப்படும் அளவிற்கு அவரது பிறப்பின்போது கொண்டாடப் படவில்லை என்பது பலருக்குச் செய்தியாய் இருக்கலாம். ஜாப்ஸ் தம்பதியினர் அவரைப் பெற்ற பெற்றோர்கள் இல்லை. ஒரு அமெரிக்கப் பெண்மணிக்கும் ஒரு சிரிய நாட்டு மனிதருக்கும் பிறந்து தத்தாகக் கொடுக்கப்பட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது வாழ்வில் மற்றொரு தருணத்தில் இதே போன்றதொரு நிராகரிப்பு நிகழ்ந்தது. அவர் பார்த்து ஆப்பிளில் வேலையில் அமர்த்திய ஒரு நபர், ஜாப்ஸுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்லி உள்ளரசியல் செய்து அவரை ஆப்பிளிலிருந்து வெளியேற்றினார். பனிரெண்டு ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் அழைக்கப்பட்டார். தத்தளித்துக் கொண்டிருந்த நிறுவனத்திற்குள் தயங்காமல் நுழைந்து நமது வி.வி.எஸ்.லட்சுமணன் போல் இரண்டாம் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி நிறுவனத்தை தொட முடியாத உயரத்திற்கு இட்டுச் சென்றார்.
இவருக்குப் பிறகு ஆப்பிள் என்னவாகும் என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆப்பிள் ஆயிரக்கணக்கானோர் உழைக்கும் ஒரு நிறுவனம் என்றாலும், ஜாப்ஸின் தொழில்நுட்ப தரிசனம் இல்லாமல் அவர்களால் இதே சாதனைகளைத் தொடர முடியுமா, எவ்வளவு நாட்களுக்கு என்பன போன்ற கேள்விகளுக்கு நல்ல பதில்களில்லை. அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ, ஜாப்ஸ் இல்லாத ஆப்பிள் எப்படி இருக்கும் என்பதை நாம் அதிகம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை – 1997 வரை பனிரெண்டு ஆண்டுகள் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்த ஒரு சாதாரணமான நிறுவனமாகத்தான் ஆப்பிள் இருந்தது.
அமெரிக்காவில் கிறித்துவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களிடயே ஒரு பழக்கம் உண்டு. ஒரு பிரச்சினை அல்லது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் என்று வந்தால், அப்போது ஜீசஸ் இந்த நிலையில் என்ன செய்வார் என்று முதலில் சிந்தித்து அதன்படி செயல்படுவது. இதை ‘What would Jesus do?’ என்ற கேள்வியாகவும், WWJD என்று சுருக்கமாகவும் சொல்வார்கள்.
இன்று ஆப்பிள் நிறுவனத்திற்குள் ஒவ்வொரு விஷயத்திற்கும் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது – WWJD – What would Jobs Do? – என்று யோசித்து யோசித்து முடிவெடுப்பார்கள். ஜாப்ஸ் நினைத்திருந்தால்கூட அவரது திறமைகளை, உள்ளுணர்வை மற்றவர்களுக்கு போதித்திருக்க முடியாது. ஆகையால் இப்படிக் கேள்வி கேட்டுக் கேட்டு செயல்பட்டால்கூட சரியாகச் செய்வார்களா என்பது சந்தேகமே.
ஒரே நம்பிக்கை என்னவென்றால் ஜாப்ஸ் அடுத்த பல ஆண்டுகளுக்கு ஒரு திசைகாட்டி வரைபடத்தைத் தந்து விட்டுப் போயிருப்பார் என்பதுதான். ஆனால் வர்த்தகம் என்பது அத்தனை தீர்மானமாகத் திட்டமிட்டு செயல்படுத்தக் கூடிய விஷயமா என்ன?
நான் 2003ல் எனது முதல் ஆப்பிள் கணினியை வாங்கினேன். நான்கு வருடங்கள் கழித்து 2007ல் அதை விற்றேன் (ஒரே நாளில், வாங்கிய விலையில் மூன்றில் ஒரு பாகத்திற்கு!) விற்ற சில நாட்களில் வாங்கிய புதுக்கணினி இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறது. மாற்ற வேண்டிய வேளை வந்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களின் மென்/வன் பொருள் முன்னேற்றங்களோடு ஆப்பிள் தாக்குப் பிடிக்குமா? அதிக விலை கொடுத்து ஆப்பிள் வாங்குவது இன்னமும் புத்திசாலித்தனமான முடிவுதானா? தெரியவில்லை.
-ஸ்ரீகாந்த் மீனாக்ஷி www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: