புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியை ஜாமினில் விடுவதற்கு, சி.பி.ஐ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என, தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நீண்ட நாள் சிறைவாசத்துக்குப் பின், கனிமொழி ஜாமினில் விடுவிக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய பணத்தை, கலைஞர் "டிவி' மூலமாக பெற்றதாக, கனிமொழி மீது ஊழல் தடுப்புக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில், கடந்த மே மாதம் 20ம் தேதியில் இருந்து, கனிமொழி சிறையில் உள்ளார்.சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனு, நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கனிமொழி சார்பில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமின் கோரி, மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 17ம் தேதி, நீதிபதி ஒ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: கனிமொழி ஜாமின் மனு விசாரணைக்கு வரும்போது, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவிக்காது. கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில், தான் பெண் என்பதையும், தன் குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது என்பதையும் காரணமாகத் தெரிவித்துள்ளார். அப்போது ஆண், பெண் என்று பாரபட்சம் கிடையாது என்று, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டது. தற்போது, கனிமொழி எழுப்பிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரை ஜாமினில் விடுவதற்கு, சி.பி.ஐ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், உடல் நலத்தை காரணமாக வைத்து, சினியுக் பிலிம்ஸ் நிறுவனர் கரீம் மொரானி, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேந்திர பிபாரா ஆகியோரது ஜாமின் மனுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கையை அடுத்து, வரும் 17ம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையின் போது, கனிமொழிக்கு ஜாமின் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக