நோயல் நடேசன் அவர்களிம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது: புலம்பெயர்ந்தவர்கள் பின்பற்றி செயற்படவேண்டிய ஒரு செய்ற்பாடு
- கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் புலம்பெயர்ந்த நண்பர் ஒருவர். வந்தவரிடம் ஊரிலிருந்த நண்பர் கேட்டார், “இருந்தாற்போல வந்திருக்கிறீங்களே, இந்த வருகைக்கு என்ன காரணம்” என்று.
“சொந்த ஊரைப் பார்க்க வந்திருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீட்டையும் எங்களுடைய காணிகளையும் பார்க்க ஆவலாக இருந்தது. அதனால் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார் புலம்பெயர்ந்த நண்பர்.
இந்த மாதிரியான ஆவலோடுதான் புலம்பெயர்ந்த தமிழர்களிற் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு – தங்கள் சொந்த ஊர்களுக்கு – வருகிறார்கள். இன்னும் ஊருக்கு வரமுடியாமலிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வும் ஆவலும் இதுதான்.
இவர்களுடைய இந்த ஆவல் நியாயமானது. இந்த ஆவலினுள்ளே புதைந்திருக்கும் உண்மைத்தன்மையையும் உணர்வையும் அதன் நியாயத்தையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
ஆனால், இதற்கப்பாலும் பல விசயங்கள் இருக்கின்றன.
ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த அந்த நண்பரிடம் ஊரிலிருந்த நண்பர் என்ன கேட்டார் தெரியுமா?
“நீங்கள் இங்கே வந்தாலென்ன வராமல் விட்டாலென்ன உங்களுடைய காணிகள் அப்படியேதான் இருக்கும். காணிகளைப் பார்ப்பதையும் விட ஊரிலிருக்கிற ஆட்களைப் பாருங்கள். உங்களோடு வாழ்ந்த சனங்கள், நன்மையிலும் தீமைகளிலும் ஒண்டாகக் கூடியிருந்த சனங்கள், இப்ப இருக்கிற நிலைமையைப் பார்க்க வேணும், அவைகளுக்கு உதவவேணும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வரவில்லை?” என்று கேட்டார் ஊர் நண்பர்.
இவர் வன்னியில் - போரில் சிக்கியிருந்தவர். பின்னர் அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்து விட்டு, இப்போது மீளக்குடியேறியிருக்கிறார்.
எனவே, வெளியேயிருந்து வந்த நண்பரிடம் தனது நியாயமான கேள்விகளை இப்படி உரிமையோடு முன்வைத்திருக்கிறார் ஊர் நண்பர்.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழ் பேசும் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துக்காகக் கணிசமான அளவுக்கு பல்வேறுபட்ட பங்களிப்புகளையும் செய்திருக்கிறார்கள். சிலர் தாராளமாகவே உதவியிருக்கிறார்கள்.
இவ்வாறு வழங்கப்பட்ட இந்த உதவிகள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று, விடுதலைப் புலிகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த உதவிகள். ஏனையவை அதற்கப்பாலும் செய்யப்பட்டு வந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்.
விடுதலைப் புலிகளின் மூலமாக வழங்கப்பட்டு வந்த உதவிகள் புலிகளின் வீழ்ச்சியோடு தீர்மானிக்க முடியாத – ஒழுங்கமைக்கப்பட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதனையடுத்து இவ்வாறு உதவிகளைச் செய்து வந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அல்லது தமது உதவித்திட்டங்களை நிறுத்திக் கொண்டார்கள். இதற்கு புலிகள் என்று அறியப்பட்ட தரப்பினரிடையே காணப்படும் குழுநிலைத்தன்மையும் போட்டிகளும் நம்பகத்தன்மையின்மையும் காரணமாகும்.
இதையும் விட களத்தில் புலிகளின் வெற்றிடம் என்பது, இந்த உதவிகளைச் செய்வதற்கான மன உந்துதலை உதவிவழங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு அளிக்கவில்லை. தம்மால் வழங்கப்படும் உதவிகள் எந்த வகையில் பயன்படும்? அந்த உதவிகள் எப்படி தமிழ் பேசும் மக்களுடைய விடுதலைக்கும் அங்குள்ள போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போய்ச் சேரும் என்ற எண்ணம் இந்த உதவியாளர்களுக்கு எழுந்திருக்கின்றது. இவர்களைப் பொறுத்தவரை புலிகளே நம்பகத்தன்மையான ஒரு தரப்பு. அவ்வளவுதான். இவர்கள் அதற்கப்பால் தங்களையோ தங்கள் நண்பர்கள், உறவினர்களையோ நம்புவதில்லை. அப்படி நம்பியிருந்தால் தடையின்றித் தொடர்ச்சியாக இவர்கள் தங்களின் உதவிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். அதற்கு வசதியான வழிமுறைகளையும் பொருத்தமான ஆட்களையும் கண்டு பிடித்திருப்பார்கள். அப்படிக் கண்டு பிடித்து உதவிகளைச் செய்து வருவோரில் முக்கியமான சிலர் இருக்கிறார்கள்.
இவர்களில் தாமரைச்செல்வியின் குடும்பத்தினர், தமிழ்ப்பிரியா போன்றவர்கள் குறிப்பிடத்தக்க உதவிகளைத் தமது நண்பர்கள், உறவினர்களுக்கூடாகச் செய்து வருகின்றனர். ஆனால், இந்தத் தொகையினர் மிகமிகக் குறைவான எண்ணிக்கையினராகவே இருக்கின்றனர். ஏனையோர் சாட்டுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு மெல்ல ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரி ஆட்கள் திருவிழா உபயகாரரைப் போல பேர் - புகழ் போன்றவை கிட்டினால்தான் உதவுவார்கள். முக்கியமாக தாங்கள் செய்கின்ற உதவிகளை யாராவது முக்கியஸ்தர்கள் புகழவேண்டும் என்ற விருப்பம் இவர்களிற் பலருக்குண்டு.
எனவேதான் இவர்களிடம் அண்மைக் காலத்தில் பல தரப்பினராலும் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைகள் அதிக பயனைத் தராமல் போயுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், மறுவாழ்வுத்திட்டங்களுக்கு உதவுங்கள் என்று தனிப்பட்டவர்கள், ஊடகங்கள், இலங்கை அரசாங்கம், அரசியற்கட்சிகள், விடுதiலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் உறுப்பினர்களாக கருணா மற்றும் கே.பி, பல உள்ளுர் தொண்டர் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள் உட்படப் பலரும் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து உதவிக் கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவான தொகையினரே! ஏனையவர்கள், ‘இப்பொழுது எப்படித் தம்மால் உதவ முடியும்?’ என்ற கேள்வியையே முன்வைத்தார்கள். அதாவது, புலிகள் இல்லாத சூழலில் அரசாங்கத்திடம் எப்படிக் காசை நம்பிக் கொடுப்பது என்பதே இவர்களுடைய தயக்கத்துக்குக் காரணமாகும்.
‘அப்படித் தாம் உதவினாலும் அந்த உதவியானது இலங்கை அரசாங்கத்தின் கைகளுக்கே போய்ச் சேரும்’ என்றும், ‘அது, படையினரின் தேவைகளுக்கும் அரசாங்கத்தின் பயன்பாட்டுக்குமே பயன்படுத்தப்படும்’ என்றும் தாம் செய்யும் உதவியினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பெரிய நன்மைகளும் கிட்டாது என்பதும் இவர்களுடைய கணிப்பீடாக இருக்கிறது.
தமது இந்தக் கருத்தையும் நிலைப்பாட்டையும் பெரும்பாலான புலர்பெயர் தமிழர்கள் வெளிப்படையாகவே சொல்லியுள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மிகக் குறைந்த தொகையினரே பாதிக்கப்பட்ட – உதவிகள் தேவைப்படுகின்ற - மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர். ஏனையவர்கள் மெல்ல ஒதுங்கிக் கொண்டனர்.
ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையும் மிகமிக மோசமானது. எந்தக் காரணங்களையும் சொல்லி – எத்தகைய நியாயங்களையும் முன்னிறுத்தி, இந்த மக்களுக்கும் இந்தப் பிரதேசங்களுக்கும் உதவ வேண்டிய பணியிலிருந்து யாரும் தப்பி விட முடியாது.
ஏனெனில், இந்த மக்கள் முப்பது ஆண்டுகாலமாகச் சிலுவை சுமந்தவர்கள். எல்லோருக்காகவும், எல்லோருடைய கனவுகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் தங்களைப் பலியிட்டவர்கள். இறுதியில் போரினால் முற்றாகவே சிதைக்கப்பட்டவர்கள். போர் முடிந்த பின்னரும் இந்த உலகத்தினால், எந்தப் பெரிய நன்மைகளையும் - உதவிகளையும் பெறாதவர்கள்.
ஆகவே இவர்களுக்கான உதவிகள் இன்று மிகமிக அவசியமானவை. இந்த உதவிகளைச் செய்யும்போது அரசாங்கம் அதற்குத் தடையாக இருக்கும் என்றோ அந்த உதவிகளில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமென்றோ சிந்திப்பதற்கு அப்பால், இந்த உதவிகளை எப்படிச் செய்யலாம் என்று சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற உளப்பூர்வமான எண்ணம் இருந்தால் அந்த உதவியை மக்களுக்குப் போய்ச் சேரக்கூடியவாறு செய்யலாம். அதற்குரிய வழிகளையும் கண்டு பிடித்துக் கொள்ளலாம்.
மனமிருந்தால் இடமிருக்கும் என்று சொல்வார்களே! அதையே இங்கே நினைவு படுத்தலாம்.
02.
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோயல் நடேசனைத் தெரிந்திருக்கும். நோயல் நடேசன் ஒரு கால்நடை மருத்துவர். யாழ்ப்பாணத்தின் சிறியதொரு தீவில் பிறந்து, தற்போது அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிறந்த எழுத்தாளர். இவர் எழுதி இதுவரையில் இரண்டு நாவல்களும் ஏராளம் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. பதிப்பாளர். இதைத்தவிர, ‘உதயம்’ என்ற பத்திரிகையை அதன் ஆசிரியாக இருந்து அவுஸ்ரேலியாவில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக வெளியிட்டவர். இப்போதும் இணையத்தில் நிறைய எழுதி வருகிறார்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், விடுதலைப் புலிகளுடைய அரசியல் செயற்பாடுகளைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் நடேசன் முக்கியமானவர். அதாவது ஜனநாயக நடைமுறைகளை நடேசன் அதிகம் வலியுறுத்துகிறார். நடேசனின் அறிமுகம் பெரும்பாலும் இந்தவகையில்தான் அமைந்துள்ளது.
புலிகளை விமர்சித்ததன் காரணமாக நடேசன் தமிழ்த் தேசியவாதிகளிடையே எதிர்விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றவர். ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து பேணியே வருகிறார். போர் முடிந்ததை அடுத்து எழுந்த மக்களின் அவலநிலை தொடர்பாகவும் மக்களுக்கான உதவிகள் - மீள்கட்டுமானப் பணிகள் பற்றியெல்லாம் எழுதிய நடேசன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் அங்கெல்லாம் செயற்படுகின்ற அமைப்புகளும் முன்வரவேண்டும் என்று பகிரங்க அழைப்பை விடுத்திருந்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ முன்வரும் புலம் பெயர்ந்தோருக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கும் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தையும் கேட்டிருந்தார். இவருடன் வேறு சில நண்பர்களும் இணைந்;து இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர்.
நடேசனின் இந்த அழைப்புக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்த்தேசியத்தை விமர்சிக்கும் ஒருவர் விடுக்கும் இவ்வாறான அழைப்பு என்பது எப்படியும் அரசாங்கத்துக்குச் சார்பாகவே இருக்கும் என்பதே இவர்களுடைய கருத்தும் ஊகமும்.
இதை நடேசனே தெளிவாக்கினார்.
இப்போது உருவாகியிருக்கும் சூழலில் இலங்கை அரசாங்கத்துக்கு அப்பால் நின்று உதவக்கூடிய நிலை இல்லை. வேறு சாத்தியங்களை இப்போதைக்கு உருவாக்கவும் முடியாது. அப்படியேதும் இருந்தால் அதை அவர்கள் தெளிவாக்கட்டும். அல்லது அந்த வழிகளில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்யட்டும்.
ஆனால், மக்களுக்கான – பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன என்பது மட்டும் உண்மை. எனவே இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கு இன்று அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்துவதோ அல்லது அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடியவாறு பகிரங்கத்தளத்தில் நின்று உதவுவதோ தவிர்க்க முடியாத ஒரு நிலை என்றார். ஏனெனில் வெறும் வாய்ப்பேச்சோடு நிற்கும் அனுதாபங்களையும் கண்டனங்களையும் விட செய்யக்கூடிய உதவிகள் முக்கியமானவை என்பதே நடேசனின் நிலைப்பாடு.
நடேசன் தனியே அழைப்போடு நின்று விடவில்லை. அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்தளவுக்கு உதவி வந்தார். தனக்கு அறிமுகமேயில்லாத – போர்ச் சூழலில் வாழ்ந்த வன்னியைச் சேர்ந்தவர்களுக்கே பல உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். தான் மட்டுமின்றி தன்னுடைய நண்பர்களையும் உதவும்படி செய்தார்.
எல்லாவற்றுக்கும் அப்பால், தான் பிறந்த சொந்த ஊரான எழுவை தீவில் இப்போது ஒரு மருத்துவமனையை நிர்மாணித்து அதனை மக்களுக்குக் கையளித்திருக்கிறார். தீவுப்பகுதி மக்களும் மக்கள் அமைப்புகளும் யாழ்ப்பாணத்தின் முக்கியமான அரச திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளும் இந்த மருத்துவமனையைப் பொறுப்பேற்றிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இந்த மருத்துவமனையின் பெறுமதி 86 இலட்சம் (8.6 மில்லியன்) ரூபாயாகும்.
இதுதான் இங்கே கவனிக்க வேண்டிய சங்கதி.
எதற்கும் ‘மனமிருந்தால், இடமிருக்கும்’.
நடேசனின் முயற்சியும் அதற்கான திட்டமிடலும் நேரடியாகவே அவருடைய உதவியை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. இதுதான் முக்கியமானது.
தன்னுடைய இளமைப் பிராயத்தில் தனது ஊரான எழுவை தீவில் மருத்துவ வசதிகளுக்காகப்பட்ட சிரமங்களே இந்த மருத்துவமனையை நிர்மாணிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்ததாக தெரிவிக்கும் நடேசன், அதற்கான சூழல் முன்னர் கிட்டவில்லை என்றும் இப்பொழுது போர் முடிந்திருக்கின்ற காரணத்தினால், அது வாய்த்திருக்கிறது என்றும் கூறுகிறார்.
இப்போதைக்கு எழுவை தீவில் ஒரு மருத்துவ மனையை நிர்மாணிக்கும் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கவில்லை. எனவே அங்குள்ள மக்கள் இன்னமும் மருத்துவ வசதிகளுக்காகச் சிரமங்களைப்படக்கூடாது என்று எண்ணிய நடேசன், ‘அங்கே ஒரு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்தால், அதைப் பொறுப்பேற்று இயங்கவைக்க முடியுமா?’ என்று மருத்துவத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார்.
இதை வரவேற்ற அதிகாரிகள், ‘அப்படிப் பொறுப்பேற்பதாயின் அரசாங்க மருத்துவ மனைகளுக்குரிய அடிப்படைகளில் அந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும்’ எனத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது, இலங்கையில் உள்ள ஏனைய கிராமிய மருத்துவமனைகளைப் போல இந்த மருத்துவ மனையும் அதற்குரிய தங்குமிட வசதி (விடுதி வசதி) யுடன் மருத்துவமனைக்குரிய பொதுப் பிரமாண விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
எனவே அந்த அதிகாரிகள் தெரிவித்தமைக்கு அமைய இப்போது எழுவைதீவில் ஒரு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் நடேசன். எழுவை தீவின் அடையாளமும் அங்குள்ள வளங்களில் முக்கியமானதாகவும் இருக்கின்றன லட்சக்கணக்கான பனைகளுக்கு நடுவே புதிதாக எழுந்து நிற்கிறது இந்த மருத்துவமனை.
எழுவைதீவு மக்களுக்கு ஒரு மருத்துவமனை கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அந்த மக்கள் இதுவரைகாலமும் மருத்துவ வசதிகளுக்காகப் பட்ட சிரமங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த மருத்துவமனையில் பணிசெய்ய அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த படித்த – தகுதிவாய்ந்த சிலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த மருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் கடந்த எட்டுமாதங்களாக நடைபெற்றுள்ளன. இந்த எட்டுமாதங்களிலும் 60 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்மாணப்பணிகளில் வேலைசெய்திருக்கிறார்கள். ஆகவே இவர்களுக்கான வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. இதுதான் உதவி என்பது. பலவழிகளில், பலருக்குக் கிட்டும் உதவிகள் இவை.
இவை எல்லாவற்றையும் விட புலம் பெயர் தமிழர் ஒருவரின் உதவி, நேரடியாக மக்களுக்குச் சென்று சேர்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல வகையிலான நன்மைகளை மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதும் இனங்காட்டப்பட்டுள்ளது.
மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முதலில் விளம்பரங்கள் தேவையில்லை. அதற்கு வழிகளும் அந்த வழிகளுக்கான திட்டங்களுமே அவசியம்.
இந்தப் பத்தியின் நோக்கமும் இதைக் கவனப்படுத்துவதேயாகும்.
நடேசன் தமிழ்த்தேசிய அரசியல் வழிமுறைகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பற்றி விமர்சித்து வந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உரிய கரிசனையோடிருக்கிறார் என்பதும் உதவிகள் - நன்மைகள் என்று அமையும்போது அதை வரவேற்பதற்கு மக்களும் புத்திஜீவிகளும் நிர்வாகிகளும் தயாராக இருக்கின்றனர் என்பதும் நடைமுறையில் தெளிவாகியுள்ளது.
இது எதைக் காட்டுகிறது என்றால், இப்பொழுது மக்களுக்கு உதவிகள் அவசியமாக இருக்கின்றன. அதை யார் மனமுவந்து செய்தாலும் அதை வரவேற்க மக்களும் இந்த அதிகாரிகளும் தயார் என்பதையே.
நடேசனைப் பொறுத்தவரையிலும் தேவையான உதவியைச் செய்யும் ஒரு முன்னோடியாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு உதவிகளைத் திட்டமிடலாம் என்பதற்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டிருக்கிறார்.
அதாவது, தான் வலியுறுத்திய விடயங்களை – தான் முன்மொழிந்த விடயங்களை செயல்வடிவமாக்கும் காரியத்தை நடேசன் பார்த்திருக்கிறார்.
இந்த மருத்துவமனையைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது நடேசன் மேலும் சில விடயங்களை உணர்ச்சி பூர்மாகக் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் இளவயதின் ஞாபகங்கள் அழியாதவை. அதிலும் ஊர் நினைவுகள் மறக்கவே முடியாதவை.
நடேசனின் இளமைக்காலம் நோயிலும் அலைச்சலிலும் கழிந்திருக்கிறது. இளமையில் அதிகப்படியான நோய்களை உடலில் காவித்திரியும் நடேசனை அவருடைய உறவினர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு எழுவைதீவிலிருந்து கடல் கடந்து கொண்டு போனார்கள். அதை அவர்களுடைய உடலில் கசிந்த அந்த வியர்வையின் மணமே சொல்லும். அந்த வியர்வை மணத்தைத் தான் இன்னும் மறக்கவில்லை. அந்த வியர்வை நாற்றம் என்பது அந்த மனிதர்கள் பட்ட சிரமங்களே. இன்று அவர்கள் பட்ட அந்தச் சிரமங்களே இந்த மருத்துவமனையாகியுள்ளது என்பதே நடேசனின் செய்தி.
மேலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னும் தாமதிக்காமல், செய்ய வேண்டிய உதவிகளை – செய்யக்கூடிய உதவிகளைச் செய்யவேண்டும். அதற்குத் தாராளமாகவே வழிகள் உண்டென்பதையும் அவ்வளவு உதவிகளையும் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்களைக் கொண்டே தமிழர்களுக்காகவே செய்யலாம் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் மக்களிற் பலர் போரிலே பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் தாராளமாக உதவுவதற்குத் தயாராக இருக்கின்றனர். ஆனால், அவர்களைத் தவறான திசைகளில் திருப்பி அந்த உதவிகளைத் தடுத்து வருகின்றன சில இணைய ஊடகங்களும் சில தனி நபர்களும் சில அமைப்புகளும்.
இதன் நோக்கம் இனமுரண்பாட்டை அதிகமாக்குவதே. முரண்பாடுகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் எரியும் நிலையைப் பேணுவது. அப்படிப் பேணும்போது, தமது அதிகாரத்துக்கான – வியாபாரத்துக்கான ஸ்திரத்தன்மையை தக்கவைத்துக்கொள்வது.
இது நிச்சயமாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
எல்லோருடைய விருப்பங்களுக்காகவும் சிலுவைகளில் அறைப்பட்ட இந்த மக்களுக்கு உதவ இன்னும் முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதில்லை. அல்லது பொருத்தமான தருணங்களையோ சந்தர்ப்பங்களையோ எதிர்பார்த்திருக்கவும் முடியாது.
காரணம், இந்த மக்கள் உதவிகள் தேவைப்படும் ஒரு நெருக்கடியான கட்டத்தில் - நெருக்கடி நிலையில் இருக்கின்றனர்.
அதிலும் எல்லாவற்றிற்கும் உதவிகள் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.
எனவே இந்த இடத்தில் நாம் இவர்களுக்கான உதவிகளையோ ஆதரவையோ எந்தக் காரணம் கொண்டும் தாமதிக்க முடியாது. இவையெல்லாம் எல்லோருக்கும் மிகத் தெரிந்த உண்மைகள்.
இந்த உண்மையை விளங்கிக் கொண்டவர்கள் - நடேசனைப் போல தங்களுக்குச் சாத்தியப்பட்ட அளவில், தனியாகவும் கூட்டாகவும் உதவி வருகின்றனர் என்பதையும் இங்கே நாம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் அவை விரைவு படுத்தப்பட வேண்டும் என்பதே இங்கே வலியுறுத்தப்படுகிறது.
புலம் பெயர்ந்த தமிழர்களிற் பலர் கொழும்பில் வீடுகளை வாங்குகிறார்கள். ஊர்களில் காணிகளை வாங்கிப் பெரிய வீடுகளைக் கட்டுகிறார்கள். யுத்தம் முடிந்திருப்பதால், ஊரிலும் வடக்குக் கிழக்கின் சிறு நகரங்களிலும் விடுதிகள், ஹொட்டேல்கள், வியாபார நிலையங்கள் போன்றவற்றை நடத்துகிறார்கள். சிலர் குடிவகை விற்பனை நிலையங்களைப் பெறுவதற்காகவே லட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள்.
வேறு சிலர் உழைப்புக்காகத் திருமண மண்டபங்களைக் கட்டுகிறார்கள். சிலர் கோவில்களுக்கு அள்ளிக் கொடுத்து தங்கள் பெயர்களைப் பத்திரிகைகளிலும் சுவர்களிலும் பதிப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், மிகச் சிலரே இடது கை கொடுப்பதை வலது கை அறியாத மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
இந்த இடத்தில்தான் நடேசனின் முக்கியத்துவம் உணரப்படவேண்டியதாக இருக்கிறது. இதை இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் உரையாற்றிய பலரும் பாராட்டிக் கவனப்படுத்தினார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டு இந்தப் பத்தியை நிறைவு செய்து கொள்ளலாம்.
தன்னுடைய பிள்ளை துன்பப்படும்போது எந்தத் தாயும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டாள். அந்தப் பிள்ளைக்கு உதவுவதற்கு அவள் யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. அவ்வாறே சொந்தச் சகோதரர்கள் துன்பப்படும்போது அதைப் பார்த்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவ்வாறிருந்தால் அது உறவாக அமையவும் முடியாது.
தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பப்படும்போது புலம்பெயர் மக்கள் எதன்பொருட்டும் அதற்கு உதவாமல் இருப்பதென்பது, அவர்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.
“ஆபத்துக்குதவாப்பிள்ளை .... அரும்பசிக்கு உதவா அன்னம்.... தாகம் தீர்;க்காத் தண்ணீர்... என்ற முது தமிழ்ப்பாடலைத் தயவு செய்து ஒரு தடவை நினைவிற் கூர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக