ஒரு கூட்டம் இடத்தை காலி செய்தால்... இன்னொரு கூட்டம் வந்துதானே ஆக வேண்டும். திரையுலக சங்கங்கள் எல்லாம் தேர்தல் களம் காணவிருக்கிறது. ஒற்றுமையாக இருக்கவேண்டியசினிமாத்துறையினர் அரசியல்வாதிகளிடம் அதிக அளவில் பழகியதாலோ என்னவோ எதிரெதிர் கட்சிகள் போல காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குனர் சங்க தேர்தலில் அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு களேபர காட்சிகள் அரங்கேறி வருவது ஹைலைட்.
1975ம் ஆண்டு முதன்முறையாக இயக்குனர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு, தாசரி நாராயணராவ் பல வருடங்கள் தலைவராக இருந்தார். பிற்காலத்தில் மொழி வாரியாக சங்கங்கள் பிரிந்த பிறகு 2100 உறுபினர்களை கொண்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கம், 1997ல் இயக்குனர் பாலச்சந்தரை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தது பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் 3 வருடங்கள் தலைவராக இருந்துள்ளார். 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில் டைரக்டர் பாரதிராஜாவுக்கு தலைவர் பதவி கிடைத்தது. 2004ல் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவரானார். 2008ல் இருந்து தற்போது வரை பாரதி ராஜா இயகுனர் சங்க தலைவராக உள்ளார். டிசம்பரில் நடக்க வேண்டிய தேர்தல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இயக்குனர் சங்க தேர்தல் களத்தில் நான்குமுனை போட்டி என்கிற நிலை உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பல இயக்குனர்கள் போட்டியில் குதித்திருப்பதால் தேர்தல்களம் ரொம்பவே சூடு பிடித்திருக்கிறது.
பாரதிராஜா, செல்வமணி, எழில், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுசீந்திரன், கவுதம் மேனன், லிங்குசாமி, கதிர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒரு அணியிலும், அமீர், சேரன், ஜனநாதன், கனி, உதயசங்கர், சிம்புதேவன், பிரபு சாலமன், ஸ்டான்லி, வெங்கடேஷ், வசந்தபாலன், கிரீடம் விஜய், கரு.பழனியப்பன், தம்பிதுரை, வித்யாசாகர் ஆகியோர் ஒரு அணியிலும், அர்.வீ. உதயகுமார், மஜீத், பிரபாகர் ஒரு அணியிலும் போட்டியிட உள்ளனர். தலைவர், செயலாளர், பதவி தவிர செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஏகப்பட்ட பேர் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக டைரக்டர் ஜெகன் குழுவில் பல உதவி இயக்குனர்கள் போட்டிட உள்ளனர். 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 12 உதவி இயக்குனர்கள் போட்டியிட உள்ளனர். புதிய அலைகள் என்ற பெயருடன் களமிறங்கும் இந்த அணிக்காக, 5 கைகள் உயர்த்திய லோகோ போட்டு டி-சர்ட்டில் ஆரம்பித்து தனி வெப்சைட் தொடங்குவது வரை பிரசாரத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்கள்.
அமீர், சேரன் போன்றோர் தலைவர் - செயலாளர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட, புதிய அலைகள் அணியோ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் தலைவராக வரட்டும்; உதவி இயக்குனர்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்க உதவி இயக்குனர்கள் சிலராவது செயற்குழு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது புதிய அலைகள் அணியின் வாதம்.
இயக்குனர் சங்கத்துக்கு டைரக்டர் பாலச்சந்தரை போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுத்த காலம் போய், இப்போது சினிமா இயக்குனர் சங்கத்திலும் போட்டிகள் உருவாகியிருப்பது சினிமாக்காரர்களின் ஒற்றுமையின்மையையே வெளிப்படுத்துகிறது என்ற கருத்து நிலவினாலும், இந்த போட்டிக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாகப்பட்டது... சமீபத்தில் டி40 என்ற பெயரில் விழா நடத்திய சங்கத்தினர் பல கோடிகளை பார்த்து விட்டதாகவும், அதனால்தான் தலைவர் பதவியை பிடிக்க போட்டி அதிகரித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. டி40 விழாவில் நடந்த சில கசப்பான சம்பவங்களால்தான் டைரக்டர் விக்ரமன் பதவியில் இருந்து விலகினார் என்பது இன்னமும் வெளிவராத ரகசியம். இந்த ரகசிய சங்கதி ஒருபுறம் இருந்தாலும் சினிமாக்காரர்களுக்கிடையே பதவிக்காக நடைபெறும் இந்த மோதல் சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதே அந்த துறைசார்ந்த பொதுநல நோக்கர்களின் கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக