உண்மை நிலவரம் அறியாது தமிழக அரசு எடுக்கும் தீர்மானம் தமிழரையே பாதிக்கும்: நிலையை அறிய பிரதிநிதிகள் குழுவை அனுப்புமாறு வேண்டுகோள்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயலலிதா அம்மையார் பதவியேற்றுக் கொண்டமையை இட்டு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கைக்கு பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் ஏற்கனவே யுத்தத்தின் கொடுமையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வீடு வாசல்களை இழந்து நிற்கும் உறவுகளுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும். கள நிலைமைகளை அறியாமல் அறிந்துகொண்ட சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறான ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதால் தமிழ் மக்கள் இன்னமும் பாதிக்கப்பட்டு விடுவார்கள். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக அக்கறை இருப்பது கண்டு நான் வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவிக்கிறேன். இவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தவறான கருத்துப் பரிமாற்றமும் ஒரு காரணம். இந்த நிலையில் தமிழக முதல்வரின் உயர் மட்டக் குழுவொன்று இலங்கை வரும் பட்சத்தில் அவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் தமிழ் மக்களுடன் வாழ்ந்தவன் என்ற வகையில் களத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவன் என்ற வகையிலும் சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியவனாகவும் இருக்கின்றேன். நேரடியாக தமிழ் மக்களின் வாழ்விடங்களை அவர்களுக்கு காண்பிக்கவும் முடியும். எனவே தமிழக முதல்வர் அவரது பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக