வியாழன், 9 ஜூன், 2011

ரஷ்ய திரைப்பட விழாவுக்கு 11 தமிழ் படங்கள் தேர்வு


ரஷ்யாவில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு ‘எந்திரன்‘, ‘சிங்கம்‘ உள்பட 11 தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யாவுக்கான தென்னிந்திய தூதர் நிக்கோலே விஸ்பதோ, திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம்,

பல தமிழ் படங்கள் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சில காலம் திரைப்பட தொடர்பில் இந்தியா&ரஷ்யா இடையே இடைவெளி ஏற்பட்டது. இப்போது அதை நீக்க முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக வருகிற அக்டோபர் மாதம் 15, 16 தேதிகளில் மாஸ்கோ அருகே உள்ள யுக்லிச் நகரில் தமிழ் திரைப்பட விழாவை நடத்துகிறோம்.

இதில் ‘எந்திரன்’, ‘சிங்கம்’, ‘அங்காடிதெரு’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘களவாணி’, ‘மதராச பட்டினம்’, ‘மைனா’, ‘நந்தலாலா’, ‘பையா’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய 11 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சினிமா கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க தேவையான படப்பிடிப்பு இடங்களும், ஸ்டுடியோக்களும் ரஷ்யாவில் நிறைய உள்ளன. படப்பிடிப்பு தளங்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது, தங்கும் விடுதிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.

இந்த வசதியை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் அனைத்து தமிழ் படங்களும் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்ய ரஷ்ய கலாசார மையம் உதவியாக இருக்கும்’’ என்று கூறினர்.

கருத்துகள் இல்லை: