வெள்ளி, 10 ஜூன், 2011

ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்


இந்துக் கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 95. லண்டனில் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி 2.30 மணியளவில் அவர் மரணமடைந்தார். பத்ம விபூஷண் பட்டம் பெற்றுள்ள ஹூசைன் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரினார். இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 2010-ம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார். இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைது வாரண்டுகள் உள்ளன. 1995-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973-ல் பத்ம பூஷண் விருதும், 1991-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1986-ல் மாநிலங்களவை எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: